சிரியாவின் நிலை (பகுதி 2) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்
Posted on♣ ♣ ♣ ♣ ♣
YouTube link: The Syrian Situation Part 2
உரையாற்றிய நாள்: 08-12-24
மேலே படத்தில்: ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) தலைவர் அபூ முஹம்மது அல் ஜொலானி
♣ ♣ ♣ ♣ ♣
சிரியாவில் மின்னல் வேக நிகழ்வுகள் குறித்த கிரசன்ட் இன்டர்நேஷனல் மற்றும் ICIT கண்ணோட்டத்தின் மற்றொரு அத்தியாயத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
பஷார் அல் அசதும் அவருடைய குடும்பமும் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளனர். 12 மணி நேரத்திற்குள்ளாகவே இது தெளிவாகி உள்ளது. இரஷ்ய ஊடகங்கள் இதை அறிவித்துள்ளன.
அடுத்து ‘சிரியாவில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன், 18 மாதங்கள் இந்த இடைக்கால அரசாங்கம் நீடிக்கும்’ என்று டமாஸ்கஸில் அந்த பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பயங்கரவாத பாணியில் மக்களாட்சியை வரவேற்போம்!
அப்பயங்கரவாத அமைப்பினர் டமாஸ்கஸில் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே சமயம், அவர்களின் புதிய நெருங்கிய நண்பனான சியோனிச இஸ்ரேல், சிரிய நிலப்பரப்பின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. கொனத்ரா பகுதியைத் தொடர்ந்து இஸ்ரேலிய படை ஹெர்மான் மலையையும் (Mount Hermon) ஆக்கிரமித்துள்ளது.
விரைவில் இஸ்ரேலிய டாங்கிகள் டமஸ்கஸின் வாயிலில் வந்துவிடக் கூடும் என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. இந்த பயங்கர வாதிகள் அவர்களுக்கு எதிராகப் போரிடுவார்களா? அதற்கான சாத்தியம் மிகக் குறைவு.
எல்லா இன, மத குழுக்களையும் மதித்து நடக்க வேண்டும் என்ற அபூ முஹம்மது அல் ஜொலானியின் ஆறுதல் வார்த்தைகளையும் தாண்டி அவர்கள் இன்னும் ஷியாக்களை பழிவாங்கக் கூடத் தொடங்கவில்லை. டமஸ்கஸில் ஈரான் தூதரகம் சூறையாடப்பட்டதிலிருந்து அவர்களுடைய நோக்கம் வெளிப்படுகிறது.
அசத் சர்வாதிகாரியாக இருந்ததால்தான் கவிழ்க்கப்பட்டார் என்று மேற்கத்திய மற்றும் அரேபிய ஊடகங்கள் அயராது பரப்பிக் கொண்டிருக்கும் கட்டுகதையையும் நாம் புறந்தள்ளுவோம். ஆம், நிச்சயமாக அவர் ஒரு சர்வாதிகாரிதான்.
சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டன், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது சியோனிச இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு என்றழைக்கப்படும் மேற்காசியாவில் எத்தனை நாடுகளில் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் உள்ளன?
சியோனிச இஸ்ரேல் என்பது ஒரு தீவிர பாசிச மற்றும் இனப்படுகொலைகள் செய்யும் வெறியர்களால் ஆளப்படும் ஒரு அரக்கன்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று தன்னை கூறிக் கொள்ளும் அமெரிக்காவை என்ன சொல்வது? நவம்பர் 5-ம் தேதி நடந்த தேர்வு (தேர்தல்!) முறையை உன்னிப்பாக கவனித்த எவருக்கும் அது ஒரு ‘அபத்தம்’ என்பது தெளிவாகும்.
மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், இந்த எதார்த்தங்களை புரிந்து கொண்டு தாங்கள் திளைத்திருக்கும் போலி சந்தோஷங்களிலிருந்து வெளியே வர வேண்டும்.
ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) என்பது ஐ.நா.-வால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பு. அதன் தலைவர் அபூ முஹம்மது அல் ஜொலானியும் (மேலே படத்தில்) ஐ.நா.-வின் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவும், ஐக்கிய ஒன்றியமும் (UN) இவற்றை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளன. அப்படியிருந்தும் சி.என்.என், தி டெய்லி டெலிகிராஃப், தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் உட்பட பிற மேற்கத்திய ஊடகங்கள் ஏன் அல் ஜொலானியை ‘மிதவாத கிளர்ச்சியாளர்’ என்று சித்தரிக்கின்றன? ‘மிதவாத பயங்கரவாதி’ என்று ஒன்று உண்டா என்ன?
அல் காய்தாவிலிருந்து தோன்றிய ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம், பல பெயர் மாற்றங்களுக்கு உள்ளானது. 2012-ல் ஜப்ஹத் அந் நுஸ்ரா என்ற பெயரை ஏற்றது. பின்னர் (2016 இல்) ஜப்ஹத் ஃபாதிஹ் அல் ஷாம் (Jabhat Fatah al-Sham) என்று ஆனது. இது தாயிஷ் (ISIS), லிவா அல் ஹக் (Liwa Al Hagg), ஜபத் அன்ஸாருத்தீன் மற்றும் ஜைஷ் அல் சுன்னாஹ் போன்ற பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. தாயிஷில் இருந்து பிரிந்த ஜப்ஹத் அல் நுஸ்ரா 2013-ல் அல் காயிதாவுக்கு உறுதிப் பிரமானம் செய்தது.
தற்போது ஹயாத் தஹ்ரீர் அல் ஷாமில் உள்ள பல்வேறு பிரிவுகள் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கொண்டுள்ளன. பஷார் அல் அசத் ஆட்சிக்கு எதிராக சண்டையிட வேண்டி, துருக்கியின் அழுத்தத்தில் —நிச்சயமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழிகாட்டுதலின்படி— அவர்கள் ஒன்றுபட்டன. அல்லது ஒன்றுபட நிர்பந்திக்கப்பட்டனர்.
அசத் வெளியேறிய பிறகு, அவர்களை ஒன்றிணைக்க வேறு காரணம் எதுவும் இல்லை. அவர்கள் அதிகாரத்திற்காக போட்டியிட்டு தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வர்.
ஆனால் மிகத் தீவிரமான பிரச்சனை என்னவென்றால் சிறிய விவகாரங்கள் கூட முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிடும் (ஷியா, சன்னி) பிரிவினைவாதம் மிக அபாயகரமானது. முஸ்லிம்கள் இந்த வலையில் மிக எளிதாக சிக்கிவிடுகின்றனர். எனவே அவர்கள் தங்கள் நிலங்களை விடுவிப்பதற்கு முன், தங்கள் மனதை பிரிவினைவாத (sectarianism) நஞ்சிலிருந்து விடுவித்து, சியோனிச இஸ்ரேல் உட்பட மேற்குலகின் சாத்தானிய சதிகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.
சிரியாவில் நடக்கும் நிகழ்வுகள், ரால்ஃப் பீட்டர்ஸ் என்ற ராணுவ தளபதி 2006-ல் ‘அமெரிக்க சிப்பாய்’ என்ற இதழில் எழுதிய ‘இரத்த எல்லைகள்’ என்ற கட்டுரையில் எழுதியதின் ஒரு பகுதிதான்.
மேற்காசியாவின் பெரும்பாலான நாடுகளை பிளவுபடுத்த வேண்டும் என்று பீட்டர்ஸ் முன்மொழிந்திருந்தார். அதில் சிரியா, சவூதி அரேபியா, ஈராக், ஜோர்டான், துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் அடங்கும்.
சிரியா பிளவுபடுவதில் பெரும் அபாயம் உள்ளது. அதன் வடமேற்கில் இருக்கும் சில பகுதிகளை துருக்கி ஆக்கிரமிக்கக் கூடும். எஞ்சியதை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும். குர்து இனத்தவர்களுக்கு ஒரு தேசம் உருவாக்கப்படும். ஆனால் அதில் துருக்கி, ஈராக் மற்றும் ஈரான் ஆகியவற்றின் நிலப்பகுதிகளும் உள்ளடங்கியிருக்கும்.
தடையின்றி நடந்துகொண்டிருக்கும் மற்றொரு சதி பாகிஸ்தானை —குறிப்பாக இப்போது கொந்தளிப்பில் இருக்கும் பலூசிஸ்தானை— உடைப்பது. ஈரானின் சிஸ்தான் பகுதியை உள்ளடக்கி அகன்ற பலூசிஸ்தான் மாகாணத்தை உருவாக்க பீட்டர்ஸ் முன்மொழிகிறார்.
இந்தப் பிரச்சனைகளில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துகிறார்களா? அல்லது ஒருவரையொருவர் வெறுப்பது, இன்னும் ஒருபடி சென்று அச்சதித்திட்டங்கள் நிறைவேறுவதை வசதியாக்கிக் கொடுப்பதில் மூழ்கியுள்ளனரா?
முஸ்லிம்களின் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை விடுங்கள். தங்களுக்குத் தாங்களே முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் விழித்தெழுந்து தீவிரமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.
♣ ♣ ♣ ♣ ♣