இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 3)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற உரைகள் Abu Uthman என்ற யூடியூப் சேனலில் உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 06-05-2008
YouTube Link: Islamic History / Al Salafiyun School of Thought
♦ ♦ ♦ ♦ ♦
(பாகம் 1)
இத்தொடர் வகுப்பின் அமைப்பு பற்றி நினைவூட்டி இன்றைய வகுப்பை துவங்குகிறேன். நாம் முதலில் நம் அரசியல் பண்பு குறித்து பார்த்தோம். அரசியல் பண்பு என்று சொல்லும் போது அதில் உள்ளடங்கிய வேறுபாடுகள் அல்லது வேற்றுமைகள் —இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்— போன்றவை குறித்தும் பார்த்தோம். இது நம் பொது அரசியல் பண்பாகும். சிலவேளை கறாரான அல்லது இணக்கத்துக்குச் சாத்தியமற்ற கருத்து வேறுபாடுகளுக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு இப்பொதுப் பண்பிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் தனிநபர்களானாலும் சரி, சிந்தனைப் போக்காக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து நான் தனிப்பட்ட முறையில் பணிவுடன் மாறுபடுகிறேன்.
இவ்வகுப்புகளின் மூலம், நாம் கருத்து வேறுபாடு கொள்ளும் பிற முஸ்லிம்களிடமிருந்து விலகிச் செல்வது அல்லது இன்னும் ஒருபடி சென்று அவர்கள் மீது இறை நிராகரிப்புக் குற்றம் சுமத்துவது என்றில்லாமல் (இன்று நம் மத்தியில் இவ்வாறு நிகழ்வதை நாம் அனைவரும் அறிவோம்), அவர்களுக்குத் துணைநிற்கும் வகையிலான செம்மையான ஆளுமைகளாக நம்மை நாம் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
இரண்டாம் கட்டமாக, நம் பண்புக் கூறுகளில் கட்டமைந்துள்ள கோட்பாட்டு அல்லது தத்துவார்த்த வேறுபாடுகளில் கவனம் செலுத்தினோம். ஏறத்தாழ 1200 வருடங்களுக்கு முன் தோன்றிய இவ்வேறுபாடுகளின் தாக்கம் இன்றளவும், அரசியல் பிரிவுகள் அளவுக்கு அகலமாகவோ ஆழமாகவோ இல்லாமல், வலுவிழந்தேனும் காணப்படுகிறது. சொல்லப்போனால் பள்ளிவாசல்கள், மாநாடுகள் அல்லது முஸ்லிம்கள் கூடும் பிற கூட்டங்களில் இப்பிரிவினைகள் குறித்த பிரக்ஞை கூட அவர்களிடையே இல்லை.
இதன் மூன்றாம் கட்டத்தில் நம் பொதுப் பண்பில், நம் பொது இஸ்லாமிய வரலாற்றில், நம் பொது இஸ்லாமிய நாகரிகத்தில் கட்டமைந்துள்ள சட்டவியல் வேறுபாடுகளின் மீதும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் மீதும் கவனம் செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.
விளக்கம்
கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் வரிசையில் அடுத்ததாக சலஃபிய்யீன் (சலஃபிகள்) என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். அவர்கள் தங்களை முன்னோர்களின் நீட்சியாகக் கருதுகின்றனர். ‘சலஃப்’ என்ற சொல்லின் பொருளும் அதுதான். சலஃப் என்றால் முன்சென்ற தலைமுறை, நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை என்று பொருள். இதன் மூலம் அவர்கள் தங்களை முன் சென்ற தலைமுறையினரை —குறிப்பாக இறைத்தூதரின் (ஸல்) மரணத்தைத் தொட்டடுத்து வாழ்ந்த தலைமுறையினரை— பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்களின் கருத்துப்படி அதுதான் மிகச்சிறந்த முஸ்லிம் தலைமுறை ஆகும்.
தோற்றமும் வளர்ச்சியும்
சலஃபிகள் ஹிஜ்ரி 4ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்கள் என்று கருதப்படுகிறது. எனினும் அவர்கள் தங்களின் சுவடுகளை அல் இமாம் அஹ்மது இப்னு ஹன்பலோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். சன்னி சட்டவியல் கண்ணோட்டத்தில் அல் அஹ்னாஃப் எனப்படும் ஹனஃபிகள், அல் ஷவாஃபிஹ் எனப்படும் ஷாஃபிகள், அல் மலிகியா எனப்படும் மாலிகிகள் வரிசையில் நான்காவது சிந்தனைப் பள்ளியாக அல் ஹனாபிலா என்ற ஹன்பலி சிந்தனைப் பள்ளி இருப்பதை நாம் அறிவோம்.
அவர்களின் கருத்துப்படி ஆரம்பத்தில், அஹ்மது இப்னு ஹன்பலின் காலத்தின்போது சலஃபிசம் பரபரப்பாக இருந்தது. அந்தச் சமயத்தில்தான் இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனின் படைப்புத் தன்மை பற்றிய குழப்பம் ஏற்பட்டது. ‘ஃபித்னத்துல் ஃகல்கில் குர்ஆன்’ என்று அரபியில் சொல்லப்படும் இப்பிரச்சனை அஹ்மது இப்னு ஹன்பலின் காலத்தில் உச்சத்தை அடைந்த போது, அவர் “குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல” என்றார். அவருடைய இந்தக் கருத்து அன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தனி போக்காக உருவாகியது. எனினும் அன்று அவர்கள் தங்களை சலஃபிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை.
அஹ்மது இப்னு ஹன்பலும் தான் ஒரு சலஃபி என்று ஒருபோதும் சொல்லவில்லை. பிற்காலத்தில் வந்த முஸ்லிம்கள்தான் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினர். ஆக, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து வந்த முஸ்லிம்களின் விளக்கப்படி அஹ்மது இப்னு ஹன்பல் ஒரு சலஃபி. பின்னர் முஃதசிலாக்களுக்கும் அஷாயிராக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, சலஃபி சிந்தனை சில காலம் செயலற்று போனது.
பிறகு ஹிஜ்ரி 7ஆம் நூற்றாண்டில் இது ஒரு விதமாக மறுமலர்ச்சி பெற்றது. அதை வழி நடத்தியவர் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா என்று அழைக்கப்படுபவர். இப்பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இவர் வந்து சலஃபி போக்குக்கு ஒரு ஊக்கத்தை கொடுத்தார் என்று சொல்லலாம். பின்னர் மீண்டும் இது செயலற்று போனது. ஏனெனில் அன்று மொத்த இஸ்லாமிய சிந்தனையுமே செயலற்று போயிருந்தது.
பின்னர் ஹிஜ்ரி 12ஆம் நூற்றாண்டில் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் வருகிறார். அவரும் இந்த சலஃபி சிந்தனைப் போக்கை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். இதை ஒரு சிந்தனைப் பள்ளி என்று சொல்ல முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. ஏனெனில் நாம் பின்னர் பார்க்கப் போவதுபோல இதில் சிந்தனைக்கு பெரிதும் இடம் இல்லை. ஆக இவைதான் சலஃபிகள் பற்றி நம் இஸ்லாமிய வரலாற்றில் காணப்படும் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
தவ்ஹீத்
சலஃபிகளின் இலக்கியங்களில் பரிட்சயமுள்ள எவரும் அதில் ‘தவ்ஹீத்’ என்ற பதம் அதிகம் பயன்படுத்துவதை அறிவார். அதை அவர்கள் தங்கள் எழுத்துகளிலும் உரைகளிலும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
முஸ்லிம் உலகின் சில பகுதிகளில், சில கலாச்சாரங்களில் மண்ணறைகள் மீது கட்டடங்கள் எழுப்பப்படும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் பெயர், அவருடைய பிறப்பு-இறப்புத் தேதிகள் பொறிக்கப்பட்ட சாதாரண பலகையைத் தாண்டி, சில இடங்களில் உயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சலஃபிகள், ஏதோ வினோத காரணத்துக்காக தவ்ஹீதுக்கான விளக்கத்தை இத்தகைய கட்டடங்கள், சமாதிகள், மணிமண்டபங்கள் போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கினர். இத்தகைய கட்டடங்கள் தவ்ஹீதுக்கு எதிரானவை என்று கருதினர்.
மேலும் சலஃபிகளுக்கும் அஷ்அரிகளுக்கும் இடையே ஒரு உரசல் இருந்து கொண்டே இருந்தது. பல விஷயங்களில் அவர்களிருவரும் ஒத்துப் போகவில்லை.
சலஃபிகளும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தும்
அபு ஹஸன் அல் அஷ்அரி இவ்வாறு கூறினார்: “முஹம்மதின் (ஸல்) ‘ஷஃபா’ வின் பொருட்டால் நிச்சயமாக அல்லாஹ் மக்களை நெருப்பிலிருந்து விடுவிப்பான். (இன்னல்லாஹ யுஃக்ரிஜு மினன் நாரி கவ்மன் பி ஷஃபாஅதி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்).”
அவருடைய இக்கூற்று சட்டவியல் மற்றும் வரலாற்று நூல்களில் பிரபலமாக காணக்கிடைக்கிறது. வழக்கமாக ‘ஷஃபா’ என்பது பரிந்துரை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது துல்லியமான மொழிபெயர்ப்பு அல்ல. ‘ஷஃபா’ என்றால் ஜோடி. ‘வித்ர்’ என்றால் ஒற்றை என்று பொருள். ‘பரிந்துரை’ என்ற மொழிபெயர்ப்பு, வேண்டிய கருத்தை வெளிப்படுத்தினாலும் அது அச்சொல்லின் நேர்ப்பொருள் அல்ல. ஆக ‘இறைத்தூதரின் ஷஃபா என்றால், அவர் மக்களோடு ஜோடி சேர்ந்து விடுவார் என்று பொருள்படும். இதை கண்ணியப்படுத்தி அல்லாஹ் மக்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான்’ என்றுக் கூறினார். அஷ்அரியின் இக்கூற்றை சலஃபிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து இவ்விருவரிடையே விவாதங்கள் உருவாகின.
இன்று தங்களை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்களின் முதன்மை கோட்பாடாக அல் அஷாயிராவே இருக்கிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஆக நாம் இங்கு அஷ்அரிகள் என்று சொல்லும்போது, வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த, தற்காலத்தோடு தொடர்பற்ற, இன்றைய சூழலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒரு தத்துவக் குழுவைப் பற்றி பேசவில்லை. தான் பின்பற்றும் கோட்பாடு, அஷ்அரியோடு தொடர்புடையது என்று கற்றறிந்த சன்னி முஸ்லிம் அறிவார். ஆக சலஃபிகள் செல்வாக்கோடு இருந்த காலகட்டங்களில் ‘சன்னிகளை’த்தான் எதிர்த்தனர்.
இவ்வரலாற்று விவரங்களை அறியாத பலர், சலஃபிகள் என்போர் சன்னிகளைச் சார்ந்தோர் என்று நினைக்கின்றனர். அறியாமை வியாபித்திருக்கும் போது, அதோடு சேர்ந்து பணமும் விளையாடினால், யார் வேண்டுமானாலும் தங்களை சன்னிகள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கொள்கையையும் சத்தியத்தையும் விட சப்தமாக பணம் பேசும் போது, அதை எதிர்க்க எவரும் இருப்பதில்லை —இன்று நடப்பதைப் போல.
அதிகாரம், செல்வாக்கு மற்றும் வளங்களை பயன்படுத்தி தாங்கள்தான் உண்மை சன்னிகள் என்று சலஃபிகள் கோருகின்றனர். அப்படியே ஒரு எதிர்ப்பு இருந்தாலும் அது பலவீனமாக, யாருக்கும் கேட்காதபடி இருக்கிறது. இப்படித்தான் இன்று சில முஸ்லிம்களிடையே, ‘சலஃபிகள் சன்னிகளை பிரதிநித்துவம் செய்கின்றனர்’ என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் வரலாற்றுத் தடங்களை பின்பற்றிச் சென்றால் இதில் உண்மை இல்லை என்பதை உணர முடியும்.
கோட்பாடு
இப்போது இவர்களின் சிந்தனைக்குள் புகுந்து இவர்களை அறிய முயற்சிப்போம். சிந்தனை என்ற சொல்லையும் சலஃபி என்ற சொல்லையும் ஒருசேர பயன்படுத்துவது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் குறைவாகவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். எனவே ‘இவர்களுடைய எண்ணங்களுக்குள் புகுந்து’ என்று சொல்வது சரியாக இருக்குமா?
இஸ்லாமிய கோட்பாடுகளை புரிந்துகொள்வதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் பயன்படுத்திய முறைமைகளை இப்னு தைமிய்யா நான்காகப் பிரித்தார். இதனுள் செல்லும் முன் ஒன்றை தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் இப்னு தைமிய்யாவின் கருத்தைத்தான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். இது என்னுடைய கருத்து அல்ல.
முதல் வகை அல் ஃபலாசிஃபா என்று அழைக்கப்படும் தத்துவவாதிகள்(philosophers). இப்னு தைமிய்யாவின் கருத்துப்படி, இவர்கள் குர்ஆனை ஒரு சொற்பொழிவாகக் (ஃகதாப்) கருதுகிறவர்கள். அதில் தர்க்கரீதியான போதனைகள் உள்ளன. இவற்றை நம்புவதற்கு தர்க்கரீதியான கட்டமைப்பு இருக்க வேண்டும். நான் இப்னு தைமிய்யாவை புரிந்து கொண்டது சரியானால், ‘தர்க்கரீதியான கட்டமைப்பு இல்லாதபட்சத்தில், நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும்’ என்று இதை சொல்லலாம்.
இரண்டாவது வகையினர் முஃதசிலாக்கள். இவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்னு தைமிய்யாவைப் பொருத்தவரை முஃதசிலாக்கள் என்போர், குர்ஆனுக்கு மேலாக பகுத்தறிவை முன் நிறுத்துபவர்கள். அதாவது குர்ஆன் வசனங்களின் அர்த்தங்கள் பகுத்தறிவுப் புரிதலுக்கு உட்பட்டிருந்தால், பிரச்சனை எதுவும் இல்லை. இல்லையெனில், அவர்கள் ‘உட்பொருள் அறிய’ (தஃவீல்) முற்படுகின்றனர் என்று இப்னு தைமிய்யா கூறுகிறார்.
உட்பொருள் அறிதல்
‘தஃவீல்’ எனும் சொல் குர்ஆனில் ஆல இம்ரான் அத்தியாயத்தில் வருகிறது. அவ்வசனம் பின்வருமாறு: அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் தெளிவான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை பல அந்தரங்கங்களைக் கொண்டவை (முதஷாபிஹாத்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்கள் நிலையற்று இருக்கிறதோ அவர்கள் முதஷாபிஹ் வசனங்களின் முதன்மை அர்த்தத்தைத் தேடி (தஃவீலிஹி) அதனால் குழப்பம் ஏற்படுத்த முனைகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)
அதாவது குர்ஆனில் தெளிவான, ஒற்றை அர்த்தம் தரும் (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன; பல அர்த்தங்களைத் தரும் (முதஷாபிஹாத்) வசனங்களும் உள்ளன.
முதஷாபிஹாத் என்று சொல்லும் போது எனக்கு ஒரு ஓவியம் நினைவுக்கு வருகிறது. உளவியல் நூல்களில் பிரபலமாகக் காணப்படும் ஓவியம் அது. அந்த ஓவியம் சிலருக்கு ஒரு மூதாட்டியின் படம் போலத் தெரியும்; வேறு சிலருக்கு ஒரு இளம் பெண்ணின் படம் போலத் தெரியும். இருவரும் ஒரே படத்தைத்தான் பார்க்கின்றனர். இருவருமே சரியாகத்தான் பார்க்கின்றனர். இவ்வசனத்தில் வரும் தஷாபஹு-முதஷாபிஹாத் என்ற சொல்லின் கருத்தை இத்தகைய ஓவியம் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.
இத்தகைய வசனங்களை பலரும் பலவிதமாக புரிந்து கொள்ள முடியும். அவை அனைத்துமே சரியான புரிதலாகவும் இருக்க முடியும். மேலும் அவை ஒன்றுக்கொன்று முரணான அல்லது எதிர்கருத்துகள் கொண்ட அர்த்தங்களாக அன்றி ஒன்றையொன்று பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வசனத்தில் வரும் ‘ஸைஃக்’ என்ற பதத்தை ‘ஒருநிலையற்ற’ தன்மை என்று சொல்லலாம். மேலும் இங்கு இறைவன், ‘ஃபிக்ர்’ என்று சொல்லாமல் ‘குலூப்’ என்று சொல்வதை கவனிக்கவும். வேதத்தை புரிந்து கொள்வதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கு புரிந்து கொள்வதற்கு ‘சிந்தனை’ யைக் குறிப்பிடாமல், ‘கல்ப்’ ஐ இறைவன் குறிப்பிடுகிறான்.
‘கல்ப்’ என்பது சிந்தனையும் மனதும் இணையும் புள்ளி ஆகும். இவை இரண்டும் சேர்ந்துதான் ‘கல்ப்’ என்றாகிறது. இப்படியாக பகுத்தறிவும் உணர்வும் இணையும் போது அது சமமற்ற நிலையில் இருந்தால், அவர்கள் பல அர்த்தம் தரும் —தெளிவு குறைந்த— வசனங்களின் பின் சென்று அதில் அவர்கள் என்ன புரிந்துகொள்கிறார்களோ அதுதான் அதன் பிரதான, ஒரே அர்த்தம் என்று கூறுவார்கள். இங்கு ‘தெளிவு குறைவான’ என்பது மனிதர்களாகிய நம் பார்வையிலிருந்து சொல்லப்படுவது ஆகும். அல்லாஹ்வைப் பொருத்தவரை அவன் அவற்றின் தெளிவான பொருளை அறிந்தவன்.
இப்போது, அவர்கள் உண்மையிலேயே தெளிவு குறைந்த வசனங்களின் முதன்மை அர்த்தத்தை அறிந்திருக்கிறார்களா அல்லது அறிவைப் பொருட்படுத்தாமல் அப்படி கூறுகிறார்களா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை விளக்குவதற்கு இந்த வசனத்தின் அரபி மூலத்தில் இடப்பட்டுள்ள நிறுத்தற்குறிகளை கவனிப்போம். ‘வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு’ என்ற சொற்றடரின் இறுதியில் முற்றுப் புள்ளியிட்டு, ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அவற்றின் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள்’ என்று சலஃபிகள் பொருள் கொள்கின்றனர்.
முஃதசிலாக்களோ அச்சொற்றொடரின் இறுதியில் காற்புள்ளியிட்டு ‘வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு, வர் ராசிஃகூன ஃபில் இல்மி’ என்று படிக்கின்றனர். இப்போது இதன் பொருள் ‘அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அவற்றின் முதன்மை அர்த்தத்தை அறியமாட்டார்கள்’ என்று மாறுகிறது.
இவ்விரண்டிலும், ஒன்று மட்டும் சரியானது மற்றொன்று தவறானது என்று யாரும் சொல்ல முடியாது.
♦ ♦ ♦ ♦ ♦