இஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)
♦ ♦ ♦ ♦ ♦
கைது செய்யப்படுதல்
இரண்டாம் அப்பாஸி கலீஃபா/மன்னர் அபூ ஜாஃபர் அல் மன்சூர் காலத்தில் இமாம் மாலிக் கைது செய்யப்பட்டார். இன்றைய மொழியில் பேசுவதானால், அவரைக் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தனர். அதை எப்படிச் செய்தனர் என்ற விவரங்கள் இல்லை. ஆனால் அதன் காரணமாக அவருடைய தோள்பட்டை விலகிவிட்டது. அப்போது அவருக்கு 53 வயது ஆகியிருந்தது. அவர் அரசாங்கத்தை ஆதரிப்பவராக இருந்திருந்தால் அவர்கள் இப்படிச் செய்திருக்கமாட்டார்கள். அவரை உணர்ந்து கொண்ட அவர்கள் ‘இவருக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்று நினைத்திருப்பர்.
அவர் துன்புறுத்தப்பட்டதற்கு மூன்று காரணங்களை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. முதல் காரணம் அவர் நிபந்தனைத் திருமணத்தை (முத்ஆ) எதிர்த்தார் என்பதாகும். அப்பாஸி அரசாங்கம் அல் அப்பாஸின் பெயரில் நிறுவப்பட்டதாகும். இப்னு அப்பாஸ் இத்தகைய திருமணத்தை ஆதரித்தார். எனவே இமாம் மாலிக் இதை எதிர்த்தபோது அவர் அவ்வரசாங்கத்தின் நிறுவனரை எதிர்த்ததாகப் பார்க்கப்பட்டது. எங்கள் பாட்டனார் இமாம் மாலிகைவிட அறிவு மிக்கவர் என்ற ரீதியில் பேசப்பட்டது. இதைக் காரணம் காட்டி அவரை கைது செய்தனர்.
வேறு சிலர், உஸ்மான்-அலீ விவகாரத்தில் அவர் கொண்டிருந்த கருத்தின் காரணமாக அவர் சிறை பிடிக்கப்பட்டார் என்று கூறுகின்றனர். அப்பாஸிகள், சிலரை அவருடைய வகுப்புக்கு அனுப்பி உஸ்மான்-அலீ விஷயத்தில் அவருடைய கருத்து குறித்து கேட்டு இதைக் கிளறியிருக்கக் கூடும் என்கின்றனர். அதற்கு இமாம் மாலிக் என்ன பதிலளித்தார் என்பதை நான் அறியேன். ஆனால் அவர் உஸ்மானுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக கேள்வி கேட்டவர்கள் புரிந்து கொண்டனர். இதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான வரலாற்று நூல்கள் அவர் துன்புறுத்தப்பட்டதற்கு பின்வரும் காரணத்தைக் கூறுகின்றன. இமாம் மாலிக் பின் வருமாறு கூறினார் ‘லைச அலா முஸ்தக்ரஹிம் யமீன்’ இதன் பொருள் ‘நிர்பந்தம் அல்லது கட்டாயத்தின் பேரில் பெறப்படும் சத்தியமோ, வாக்கோ செல்லாது’ என்பதாகும். இது பொதுவான கருத்துதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. சித்திரவதை செய்து பெறப்படும் வாக்குமூலம் செல்லாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அன்றைய அதிகாரிகள் இக்கூற்று தங்களுக்கு சட்டப்பூர்வத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று புரிந்து கொண்டனர். ஏனெனில் அவர்களுடைய அதிகாரம் கலந்தாலோசனை அல்லது தேர்தல் போன்ற சரியான வழிமுறையில் பெறப்பட்டது அல்ல. அவர்களாக தங்களை மக்களின் மீது திணித்துக் கொண்டனர். எனவே இமாம் மாலிக் இவ்வாறு கூறியபோது அவரை சித்தரவதைக்கு உள்ளாக்கினர்.
உமவிகளுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பியக்கத்துக்கும் இடையே நடந்த மோதல் மக்கள் மத்தியில் நபி வீட்டார் (அஹ்ல் அல் பைத்) மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. இந்த உணர்வலையில் நீந்தித்தான் அப்பாஸிகள் உமவிகளை தோற்கடித்தனர். உமவிகள் வீழ்ந்துவிட்டார்கள், நேர்வழி நடக்கும் புதிய அரசாங்கம் உருவாகிவிட்டது என்று ஆரம்பத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு நிலவியது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாஸிகளும் —உமவிகளைப் போல— ஒரே நாணயத்தின் மறுபக்கம்தான் என்பது வெளிப்பட்டது. அவர்கள் செய்தது வெறும் வாய்ஜாலம் என்றும் வெற்று முழக்கங்கள் என்றும் தெளிவாகியது.
ஆக அவர்கள் இமாம் மாலிக் சிறையில் இருந்த போது அவரை சாட்டையால் பலமாக அடித்துத் துன்புறுத்தினர். அவருக்குக் காயம் ஏற்பட்டது. ஏற்கனவே சொன்னது போல அவருடைய தோள்பட்டை விலகியது. இப்படியாக அவர் துன்புறுத்தப்பட்டார். அரசாங்கத்திடமிருந்து ஊதியம் வாங்குபவராகவோ இருப்பு நிலையை தக்க வைப்பவராகவோ அவர் இருக்கவில்லை. விஷயங்களை அவசரகதியில் அணுகுபவர்கள் அவரைப்பற்றி இவ்வாறு முடிவெடுத்துவிடுகின்றனர். ஆனால் அவர் அன்றைய அரசாங்கத்தின் ஆதரவு பெற்றவராக இருக்கவில்லை என்ற உண்மையை நாம் சொல்லியாக வேண்டும்.
ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் இமாம் மாலிகிடம் மன்னிப்புக் கோரினர். அரசர் மன்சூர் ஈராக்கிலிருந்து ஹிஜாஸுக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றபோது, அவரே நேராகச் சென்று இமாம் மாலிக்கைச் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இமாம் மாலிக் துன்புறுத்தப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியிருந்தது. இத்தகைய சந்தர்ப்பங்களில் நிலமையை தணிக்க ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்வது இயல்புதான். இமாம் மாலிக் அவருடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டார். “நான் உங்களை சந்திக்க விரும்பவில்லை” என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. இந்நிகழ்வோடு அச்சம்பவம் தணிக்கப்பட்டது.
சில முக்கிய நிகழ்வுகள்
‘ஒரு மனிதரின் செயல்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டன’, பெரும்பாவங்கள் செய்தோர் இறை நிராகரிப்பாளர்கள் (முர்தகிப் அல் கபீரத்துல் காஃபிர்), ‘இறைநம்பிக்கை இருந்தால் ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால் ஒரு இறை நிராகரிப்பாளர் என்னதான் நற்செயல்கள் செய்தாலும் அது அவருக்கு பலனளிக்காது’ (லா யளுர்ரு மஅல் ஈமானி மஹ்சிய கமா லா யன்ஃப மஅல் குஃப்ரி தாஅ) போன்ற வாதங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். இவையனைத்தும் இமாம் மாலிகின் காலத்தில் நிகழ்ந்தவை.
அடுத்து அவர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம். ஆட்சியாளர்களுக்கு எதிரான ஷியாக்களின் எதிர்ப்பு, இமாமத் பற்றிய விவகாரம், இமாம் அலீ, ஃபாத்திமா மற்றும் ஹுசைன் ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்துதான் இமாமத் ஏற்பட வேண்டுமா, முஸ்லிம்களின் தலைமை குறைஷிகளிலிருந்து அல்லது ஹாஷிம் வம்சத்திலிருந்து ஏற்பட வேண்டுமா அல்லது தலைமைப் பொறுப்பேற்பதற்கு அதற்கேற்ற பண்புகள் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் தலைவராகலாமா? போன்ற விவகாரங்கள் அவர் காலத்தில் எழுந்தன.
இமாம் மாலிக் ஈமானை ‘கவ்லுன் வ அகீதத்து வ அமல்’ என்று வர்ணித்தார். அதாவது மொழிதல், நம்பிக்கை மற்றும் செயல்பாடு ஆகிய மூன்றும்தான் ஈமான் என்று வர்ணித்தார். மேலும் அவர் ஈமான் அதிகரிக்கும் தன்மை உடையது என்று நம்பினார். ஒருவரின் ஈமான் காலப்போக்கில் அதிகரிக்குமா, குறையுமா போன்ற வாதங்கள் அன்று எழுந்தன. இமாம் மாலிக் கூறியதாவது, ஈமான் அதிகரிக்கும் தன்மையுடையது. ஆனால் அது குறையும் தன்மையுடையுது அல்ல என்றார். ஈமான் குறையக்கூடியது என்று சொல்வதற்கு குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் எந்த மேற்கோளும் இல்லை என்றார். அன்று நிலவிய வேறு சில கருத்துகளுக்கு மாறாக மனிதன் சுய விருப்பத் தீர்மானம் உடையவன் என்று அவர் நம்பினார். எனவே அவன் செய்யும் நல்லது கெட்டதுக்கு அவனே பொறுப்பாவான் என்றார்.
குர்ஆன் படைக்கப்பட்டதா என்ற பிரச்சனை பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதுவும் இவர் காலத்தில் எழுந்ததுதான். இவ்விவகாரங்கள் அனைத்தும் முஸ்லிம்களிடையே பிரிவினையையும் மனக்கசப்பையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தும் வாக்குவாதங்கள் (ஜதல்) என்று அவர் நம்பினார். எனவே நாம் எந்தப் பக்கமும் சாய முடியாது என்றும் இரு சாராரும் இப்பிரச்சனையை கைவிட வேண்டும் என்றார்.
தீர்ப்பு நாளில் மனிதனால் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்ற விவகாரத்தை முஃதசிலாக்கள் எழுப்பினர். அதற்குச் சான்றாக, அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (அல் குர்ஆன் 75:22,23) என்ற வசனத்தை அவர்கள் முன் வைத்தனர். இதற்குப் பதிலளித்த இமாம் மாலிக் “ஆம். அவ்வசனம் அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அது எப்படி நடக்கும் என்ற கேள்விக்குள் செல்லாதீர்கள். நாம் பார்க்க முடியும்; ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியாது. அதனுள் நுழைந்தால் பிரிவினைகளும் வாக்குவாதங்களும் ஏற்படும்” என்றார்.
மேலும் நீதி நிலைநாட்டப்படாத ஒரு பகுதியில் எவரும் வாழ முடியாது என்று அவர் நம்பினார். அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றார். அடுத்து அபூ பக்கரிடமிருந்து உமர் அதற்குப் பின் உமரிடமிருந்து உஸ்மான் பிறகு உஸ்மானிடமிருந்து அலீ என தலைமைப் பதவி கடத்தப்பட்டதில் அவர் குறை எதையும் காணவில்லை.
“முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்கள் மக்கா மற்றும் மதீனாவாசிகளின் ஒப்புதலைப் பெறவில்லை எனில் அவர்கள் சட்டப்பூர்வதன்மை அடையமாட்டார்கள்” என்றார். “ஒருவர் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவர் நீதமானவர் என்று அறியவந்தால அவருடைய ஆட்சி சட்டப்பூர்வமானது என்றும் அதுவே அவர் நீதமானவர் அல்ல என்றால் அவ்வாட்சி சட்டப்பூர்வதன்மையற்றது” என்றார்.
சில சட்டவியல் விஷயங்கள்
அடுத்து சில சட்டவியல் விஷயங்களைப் பற்றி பார்ப்போம். நான் இது குறித்து வெள்ளிக்கிழமை உரைகளில் அவ்வப்போது பேசியுள்ளேன். குர்ஆன் வசனத்தோடு ஹதீஸ் முரண்படுவது தொடர்பானது இது. ஒரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது: ‘உங்கள் பாத்திரத்தை நாய் நக்கிவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். அதில் ஒரு முறை தூய மேல் மண்ணைக் கொண்டு கழுவுங்கள் (இதா வலகல் கல்பு ஃபீ இலாயா அஹதிகும் ஃபல் யஹ்ஸிலு ஸப்அன் இஹ்தஹுன்ன பித்துராபி தாஹிர்)’.
இது ஒரு ஹதீஸ். சட்டவியலாளர்களும் ஹதீஸ் அறிஞர்களும் இந்த ஹதீஸைக் கூறினர். மக்களும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இமாம் மாலிக் இதை மறுத்தார். அதற்குக் காரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தைக் கூறினார்: …அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்… (அல் குர்ஆன் 5:4) இந்த வசனத்தைக் காரணம் காட்டி “நீங்கள் வேட்டையாடிய ஒரு பறவையை நாய் தன் வாயால் கவ்விக் கொண்டு வந்தால் அது அசுத்தமாகிவிடுமா (நஜீஸ்)?” என்று அவர் கேட்டார்.
நாம் இதைப் பல முறைச் சொல்லியுள்ளோம். இங்கு மீண்டும் ஒருமுறை கூறுகிறோம். ஒரு குர்ஆன் வசனத்தின் அர்த்தம் ஒரு ஹதீசின் அர்த்தத்தோடு முரண்பட்டால், அந்த ஹதீஸைப் புறந்தள்ளிவிட்டு குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இமாம் மாலிக் தன்னைச் சுற்றியிருந்த மக்களிடம் கிட்டத்தட்ட இதைத்தான் சொன்னார்.
பெற்றோருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யலாம் என்று பெரும்பாலான சிந்தனைப் பள்ளிகள் கூறுகின்றன. ஆனால் இமாம் மாலிக் “‘வக்காலத்’ இல்லாமல் பெற்றோருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்ய முடியாது” என்றார். அதாவது உரிய அதிகாரம் அளிக்கப்பட்டாலன்றி —தங்களுக்குப் பதிலாக பிள்ளைகள் ஹஜ் செய்வதற்கு பெற்றோர் அதிகாரமளித்தாலன்றி— பிள்ளைகள் அப்படி ஹஜ் செய்ய முடியாது என்றார். ஒருவர் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளிடம் ‘உங்களில் ஒருவர் எனக்காக ஹஜ் செய்யலாம்’ என்று சொல்லிவிட்டு இறந்தால் அப்படிச் செய்யலாம் என்றும் தாங்களாக அதைச் செய்ய முடியாது என்று கூறினார். ‘ஒருவர் மற்றொருவரின் சுமையை சுமக்க வேண்டிய அவசியமில்லை (வலா தாஜிரு வாசிரது விஸ்ர உஃக்ரா)’ என்ற வசனத்தை சுட்டிக் காட்டினார்.
அவருடைய முக்கியமான புத்தகம் முஅத்தா ஆகும். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஹதீஸும் சட்டவியலும் கலந்த ஒரு நூலாகும். ஹதீஸ்கள் குறித்து இமாம் மாலிக்கின் அபிப்பிராயங்களும் கருத்துகளும் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் ‘மதீனாவசிகளின் செயல்பாடுகள் சான்றாதாரமாகும் (அமல் அஹ்ல் அல் மதீனா ஹுஜ்ஜா)’ என்றும் அவர் கூறினார். மற்ற சட்டவியலாளர்களிடமிருந்து அவரை பிரித்துக் காட்டும் முக்கியமான அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும். வேறு எந்தச் சட்டவியலாளரும் அப்படிக் கருதவில்லை.
இமாம் அபூ ஹனீஃபாவும் இமாம் மாலிக்கும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள் என்று எந்தத் தகவலையும் நான் பார்க்கவில்லை. இமாம் மாலிக் ஈராக்குக்குச் சென்றதாக எந்தத் தகவலையும் நான் பார்க்கவில்லை. அபூ ஹனீஃபா ஈராக்கிலிருந்து ஹிஜாஸுக்குச் சென்று பல வருடங்கள் —ஆறு வருடங்கள் என்று வைத்துக் கொள்வோம்— மக்காவில் தங்கியிருந்தார் என்று தெரியும். இமாம் மாலிக் அந்த காலகட்டத்தில் ஹஜ்ஜுக்காகச் சென்றிருக்கக் கூடும். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்திருப்பாரகள் என்று நாம் ஊகிக்கலாம். எனினும் அதனால் காத்திரமான எதுவும் நிகழவில்லை. அப்படி நடந்திருந்தால் அத்தகவல் நமக்குக் கிடைத்திருக்கும்.
பிளவுபடுத்தல் இல்லாத சிந்தனை
கே: இன்று தொழும் முறை பெரிதுபடுத்தப் படுகிறது. கைகளைக் கட்டுவது, கைகளை கீழே விட்டுத் தொழுவது என்று பல முறைகள் உள்ளன. இமாம் மாலிக் போன்ற தரத்தில் இருக்கும் ஒருவர் ‘இப்படித்தான் தொழ வேண்டும். இப்படித் தொழக் கூடாது’ என்று மக்களிடம் சொல்லியிருந்தால், அது பற்றி மக்கள் பேசியிருப்பார்கள்தானே. ‘இவருக்கு என்ன பிரச்சனை? எல்லோரிடத்திலிருந்தும் விலகி இவர் மட்டும் தனியாகச் சொல்கிறாரே’ என்று மக்கள் நினைத்திருப்பார்கள்தானே?
ப: அன்று மதீனாவில் மக்கள் அவ்விரு முறைகளையும் பின்பற்றித் தொழுதனர். அப்படிச் செய்பவர்கள் இருபக்கமும் சம அளவில் இருந்தனர். ஆனால் யாரும் இதைப் பிரச்சனையாக்கவில்லை. இன்று நாம் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் சீரழிந்து போன மனநிலைதான். ஒருவர் எங்கு கைவைத்துத் தொழுகிறார் என்பதைக் கொண்டு அவரின் ஒட்டுமொத்த இஸ்லாமியப் பண்பையும் எடைபோட விரும்புகிறோம். ஆனால் அன்று அது பிரச்சனையாகப் பார்க்கப்படவில்லை. எங்கெல்லாம் சவூதியின் செல்வாக்கு அபரிமிதமாக இருக்கிறதோ அங்கு வசிக்கும் மாலிகிகளே சவூதிகளின் செல்வாக்குக்கு உள்ளாகி ‘தோள்பட்டை காயத்தின் காரணமாகத்தான் இமாம் மாலிக் கைகளை கீழே விட்டுத் தொழுதார். அதற்கு முன்னர் அவரும் கை கட்டித்தான் தொழுதார்’ என்று கூறுகின்றனர். சவூதிகளின் வருகைக்கு முன்னர் யாரும் இப்படி நியாயம் கற்பிக்கவில்லை. இப்போது தேவையின் காரணமாக இப்படிக் கூறுகின்றனர்.
மாலிகி சட்டவியலை சுருக்கமாக விளக்குவதாக இருந்தால் அது வாக்குவாதங்களைத் தவிர்த்த சட்டவியல் என்று சொல்லலாம். மனதளவில் மக்கள் பிளவுபடுவதை அது விரும்புவதில்லை. மற்றபடி பிற சட்டவியல்களைப் போலவே அது அல் கிதாப், அஸ் ஸுன்னா, அல் கியாஸ் மற்றும் இஹ்திஹ்ஸான், அல் மசாலில் அல் முர்சலா சத்திதரா போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் அளவுக்கு அது விஷயங்களின் உள்ளே ஆழமாகச் செல்வதில்லை. முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் என்றும் தெரியவந்தால் அவர்கள் அப்பிரச்சனையை அங்கேயே நிறுத்திவிடுவர். இதுதான் மாலிகி சட்டவியலின் பொதுவான பண்பு.
இமாம் மாலிகின் மாணவர்கள் ஹிஜாஸிலிருந்து எகிப்துக்குச் சென்றனர். அங்கு மாலிகி சிந்தனைப் பள்ளி மிகப் பிரபலமடைந்தது. எகிப்து, வட ஆப்பிரிக்கா, துனீசியா, அல்ஜீரியா, மொராக்கோ, ஆப்பிரிக்க கண்டம் என எல்லா பகுதிகளிலும் பரவியது. இச்சிந்தனைப் பள்ளியின் பின்பற்றாளர்கள் அதைச் சரியாகப் புரிந்துகொண்டால், பிற சிந்தனைப் பள்ளிகளோடு மிகவும் இணக்கமாகவும் அனுசரனையோடும் நடந்து கொள்வர்.
அந்தலூஸ் என்ற ஐபீரியாவிலும் -—இன்றைய ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்— முஸ்லிம்கள் அங்கு இருந்த போது, மாலிக்கி சிந்தனைப் பள்ளி செல்வாக்கு செலுத்தியது. அப்போது இமாம் மாலிகின் பிரபல பின்பற்றாளராக இருந்த இப்னு ருஷ்த், பகுத்தறிவுவாதியாகக் கருதப்பட்டார். இவர்தான் மெய்யியலும் பகுத்தறிவுவாதமும் இஸ்லாத்தில் பொருந்துமா என்று அல் கஸ்ஸாலியோடு பெரும் விவாதத்தில் ஈடுபட்டவர். இவர் மாலிகி சிந்தனைப் பள்ளியில் மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக வேரூன்றி இருந்த போதிலும், மக்களை பிளவுபடுத்தும் அளவுக்குச் செல்லவில்லை.
மாலிகி சிந்தனைப் பள்ளியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், அதில் பிளவுபடுத்தல் இல்லை என்று சொல்லலாம். வாக்குவாதம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்ற நிலையில் அவர்கள் வாக்குவாதத்தை நிறுத்திவிடுவர். இது மாலிகி சிந்தனைப் பள்ளியின் மிக மிக அனுகூலமான பண்பு என்று சொல்லலாம். மற்ற சிந்தனைப் பள்ளிகள் அப்படி அல்ல. அதுபற்றி கவலைப் படாமல் தொடர்ந்து பேசுவர்.
இன்றும் கூட மாலிகி சிந்தனைப் பள்ளியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் பிற சிந்தனைப் பள்ளிகளோடு அனுசரனையாகவே உள்ளனர். இதைக் கொண்டே ஒரு மாலிகியை நாம் மதிப்பிடலாம். அவர் பிரிவினை பேசினால் தன் சிந்தனைப் பள்ளியையே சரியாகப் புரிந்து கொள்ளாதவர் என்றும் இல்லையெனில் அதை ஆழமாகப் புரிந்து கொண்டவர் என்றும் சொல்லலாம்.
மாலிகி சிந்தனையும் ஷியாக்களும்
ஷியாக்களைப் பற்றி மாலிகி சிந்தனைப் பள்ளி நேரடியாகப் பேசும் எதையும் நான் பார்க்கவில்லை. ஆனால் இறைத்தூதரைத் தொடர்ந்து வந்த நால்வருக்கும் இடையே அரசாங்கம் கைமாறியது பற்றி இமாம் மாலிக் கொண்டிருந்த கருத்திலிருந்து அவர் இமாமத் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மறைமுகமாகச் சொல்லலாம். மீண்டும் பிரிவினை உண்டாக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருக்க அவர் நாடியதால், இது பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
அவரைப் பற்றி ஷியாக்கள் கொண்டிருந்த கருத்தை பொதுமைப்படுத்த முடியாது. உமவிகளுக்கும் அப்பாஸிகளுக்கும் எதிராக நடந்த போராட்டத்தில் பலர் ஈடுபாட்டோடு இருந்திருக்கலாம். ஆனால் அதில் ஈடுபாடு இல்லாத அறிஞரைப் பார்த்து ‘அவர் ஒரு அறிஞர்தான். அறிஞராக இருப்பது வேறு. போராட்டத்தில் ஈடுபடுவது வேறு’ என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஷியாக்களின் இஜ்திஹாதை பொதுவாகப் பார்த்தால் அதில் இந்த சட்டவியலாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் எதிரான கருத்து எதையும் பார்க்க முடியாது.
தஷய்யுவில் இருக்கும் விளிம்புநிலைக் கட்சி இவர்களை ‘அரசவை அறிஞர்கள்’ என்று சொல்கிறது. அறிவுத்தளத்தில் அவர்கள் பெரும்பங்காற்றியிருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் அரச இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த பங்காற்றினர் என்று அது கூறுகிறது. ஆனால் இலக்கியங்களைப் படிக்கும் போது மக்கள் மத்தியில் பதற்றம், பிளவு என்பதெல்லாம் இருக்கவில்லை என்று தெரிகிறது. அவர்கள் அவ்வறிஞர்களை மதிப்பு மிக்க இடத்தில் வைத்திருந்தனர்.
கே: இமாம் ஜாஃபர் சாதிக் மிகப் பெரிய வகுப்பை நடத்தினார் என்றும் அவரிடம் நான்காயிரம் மாணவர்கள் பயின்றனர் என்றும் அறிகிறோம். அவர்களுக்கும் வேறு அறிஞர்களின் மாணவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததா? இந்த அறிஞர்களுக்கிடையேயான உறவு எப்படி இருந்தது?
ப: அது மிகவும் இயல்பாக இருந்தது. ஒரே குடும்பத்தில் சிலர் ஷியாவாகவும் வேறு சிலர் சன்னியாகவும் இருந்தனர். இமாம் மாலிகை பின்பற்றுபவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் பதற்றமின்றி, பிரச்சனைகளின்றி சேர்ந்து வாழ்ந்தனர். ஒருவரையொருவர் அங்கீகரித்தனர். இமாம் ஜாஃபர் சாதிக், இமாம் மாலிக், அபூ ஹனீஃபா ஆகியோரின் மாணவர்கள் மூல அறிவைத் தேடி சென்றனர். ஆகவே பிரச்சனைகளை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகினர். பிற்காலங்களில் இதன் மூலங்களை அறியாதவர்கள் மத்தியில்தான் தவறான புரிதல்களும் பிரச்சனைகளும், அவற்றை தவறான வழியில் திசை திருப்புவதும் உருவாயின. இன்று யாராவது கருத்து முரண்பட்டால், அது நிராகரிப்பு மற்றும் நம்பிக்கைப் பிரச்சனையாக மாற்றப்பட்டுவிடுகிறது. அதே போல தொழும் முறைகள் பற்றி நாம் பேசினோம். நான் சன்னி மற்றும் ஷியா அறிஞர்களுடன் இதுபற்றி பேசியுள்ளேன். “இறைத்தூதர் எல்லா நேரங்களிலும் ஒரே முறையில்தான் தொழுதார்” என்று உறுதியாகக் கூற முடியுமா? அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. எனவே அவர் வெவ்வேறு முறைகளில் தொழுதிருக்கக் கூடும். அவையனைத்துமே சரியானதுதான். அதேபோல மற்றவர்களும் தொழுவதில் என்ன தவறு? ஒருவரே வெவ்வேறு முறைகளைப் பின்பற்றி தொழுதாலும் அது தவறாகாது.
♦ ♦ ♦ ♦ ♦