இஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 1)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் மாலிக்
குடும்பப் பின்னணியும் கல்வியும்
அடுத்து அல் இமாம் மாலிக் பற்றி பார்ப்போம். அவருடைய பெயர் மாலிக் இப்னு அனஸ். ஹிஜ்ரி 93 இல் பிறந்த அவர் 86 வயது வரை வாழ்ந்து ஹி. 179 இல் மறைந்தார். இமாம் மாலிக் மதீனாவில் நபிப் பள்ளிவாசலில் வகுப்பு (ஹலகா) நடத்தினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் அபூ ஹனீஃபாவும் கூஃபாவில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
இமாம் மாலிக்கின் தாய்-தந்தை இருவருமே ஏமனிலிருந்து வந்தவர்கள். அவர் ஏமன்காரர். நான் அறிந்து வைத்துள்ள வரலாற்று மற்றும் புவியியல் தகவல்களின் பின்னணியில் இதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி மாலிகி சிந்தனையைப் பின்பற்றுகிறது. அவர்களுக்குக் கூட அவர் ஏமன்காரர் என்ற விஷயம் தெரிந்திருக்குமா என்பது தெரியாது. எனினும் இமாம் மாலிக் மதீனாவில்தான் பிறந்தார்.
அவருடைய பாட்டனாரும் சிறிய தந்தையும் அறிஞர்களாக இருந்தனர். அவருடைய பாட்டனாரின் பெயரும் மாலிக் ஆகும். இமாம் மாலிக் செல்வந்தக் குடும்பத்தில் பிறக்கவில்லை. அவர் ஏழ்மை நிலையில் வளர்ந்தார். அவருக்கு நளர் என்றொரு சகோதரர் இருந்தார். நளர் கல்வி கற்க ஆரம்பித்து மதீனாவின் அறிஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். எனவே மக்கள் “நளரின் சகோதரர்தான் மாலிக்” என்று கூறினர். பின்னர் அறிவுத்தளத்தில் மாலிக் அதைவிட உயர்ந்த அந்தஸ்தை அடைந்த போது அவரும் பிரபலமானார். இப்போது நிலைமை மாறி மக்கள் “மாலிகின் சகோதரர்தான் நளர்” என்று கூறினர்.
அவருடைய சிறிய தந்தையின் பெயர் நாஃபி. அபூ சுஹைல் என்று அறியப்பட்ட அவர் ஹதீஸ்களை சேகரிப்பது, அவற்றையும் அவற்றின் அறிவிப்பாளர் தொடரையும் (ரிவாயா) மனனம் செய்வது போன்றவற்றில் பெரும் ஈடுபாடு உள்ளவராக இருந்தார்.
இன்று போல முறையாகப் பதிவு செய்து வகுப்பில் சேரும் முறை அன்று இருக்கவில்லை. அன்று பள்ளிவாசல்களில் பல அறிஞர்கள் பாடம் நடத்துவர். நீங்களாகச் சென்று ஒரு அறிஞருடைய வகுப்பில் அமர்ந்து கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதைத் தொடரலாம். எந்த அறிஞரின் பாடத்தைக் கற்பது என்பதை மாணவர்கள் இப்படித்தான் முடிவு செய்தனர். இப்படியாக மாலிக் ஒரு சுற்று சென்று பல்வேறு அறிஞர்களைப் பார்த்தார். எதைக் கற்க வேண்டும்? தனக்கு உகந்த படிப்பு எது? என்று புரிந்து கொள்ள முயற்சி செய்தார். முதலில் பொது அறிவுப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய பாடத்தைத் தேர்ந்தெடுத்தார். அறிவிப்பாளர்களின் வரலாறு, அவர்களுடைய பின்னணி, மூதாதையர்கள், பண்புகள் போன்றவற்றைப் பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இமாம் மாலிக் மதீனாவில் இருந்தார். மதீனா இஸ்லாத்தின் அடித்தளமாக இருந்தது. மதீனதுந் நபி என்பதுதான் மதீனா என்று சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. இறைத்தூதரின் நகர்புற மையம் என்பது அதன் பொருள். இறைத்தூதர் நாடு துறந்த போது அவருடைய புகலிடம் மதீனாவாக இருந்தது. முதல் இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய ஒழுங்கும் அதுவாகத்தான் இருந்தது. முதல் இஸ்லாமிய சமூகமும் இஸ்லாமிய அரசாங்கமும் அல் மதீனாவில்தான் இருந்தன. இத்தகைய சமூகத்தில் பிறக்கும் ஒருவருக்கும் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்துக்கு வந்த வேறொரு பகுதியில் பிறப்பவருக்கும் வேறுபாடுகள் உண்டு. இமாம் மாலிக் இஸ்லாம் தோன்றி வளர்ந்த ஒரு பகுதியில் பிறந்தார்.
உமவி மற்றும் அப்பாஸி காலத்தில் ஹிஜாஸிலிருந்து ஷாமிற்கும், அதன் பிறகு ஈராக்கிற்கும் தலைநகர் மாற்றப்பட்டாலும், அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் மதீனா குறிப்பிடத்தக்க இடமாகவே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் இமாம் மாலிக் வாழ்ந்தார்.
அவர் குர்ஆனை மனனம் செய்தார். அவருடைய தாய் அவருக்கு பெரிதும் ஊக்கமளித்தார். சிறு வயதிலேயே —ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் போதே— அவர் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார். அவருடைய தாய் அவருக்கு நல்ல ஆடைகளை அணிவித்து அழகிய முறையில் அவரை தயார் செய்து ‘இப்போது சென்று எழுது! (இத்ஹபில் ஆன் வக்துப்)’ என்று சொல்லி அவரை அனுப்பி வைப்பார். இப்படியாக அவருக்கு தாயின் பராமரிப்பும் ஊக்கமும் கிடைத்தது. அது அவரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றது.
நபிப் பள்ளிவாசலில் இப்னு ஹுர்முஸ் என்றொரு அறிஞர் இருந்தார். ஹதீஸ், ஹதீஸ் அறிவிப்பாளர்கள் போன்ற பாடங்களில் இவர் தேர்ச்சி பெற்றவர். பிற வகுப்புகளை விட இவருடைய வகுப்புகள் நிறைவளிப்பதாக இமாம் மாலிக் உணர்ந்தார். எனவே கிட்டத்தட்ட 12 அல்லது 13 ஆண்டுகள் அவருடனேயே இருந்து தனக்கு அளிக்கப்பட்ட கல்வி ஞானத்தை கிரகித்துக் கொண்டார்.
அன்று தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் முறை இருக்கவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களை நன்கு அறிந்து வைத்திருப்பர். அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள், கேட்கப்படும் கேள்விகள், அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள் போன்றவற்றைக் கொண்டு ஆசிரியர் தன் மாணவனை நன்கு புரிந்து கொள்வார். வகுப்பில் நடக்கும் உரையாடல்கள்தான் ஒரு மாணவனின் தேர்வாக இருந்தது. அதனடிப்படையில், இப்போது ‘இந்த அறிவை நீ பிறருக்குப் புகட்டலாம்’ என்று ஆசிரியர் தன் மாணவனுக்கு அனுமதி அளிப்பார்.
இப்படி பதிமூன்று வருடங்கள் படித்து முடித்த பின், தன் ஆசிரியர் இப்னு ஹுர்முஸிடமிருந்து தான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம் என்று இமாம் மாலிக் கூறியதாவது ‘லா அத்ல்’ என்று சொல்வதாகும். யாராவது கேள்வி கேட்டு பதில் தெரியவில்லை எனில் “எனக்குத் தெரியாது” என்று சொல்வதுதான் இந்தப் பதிமூன்று வருட காலத்தில் தனக்கும் தன்னுடைய ஆசிரியருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களினூடாக தான் படித்த மிக முக்கியமான பாடம் என்று கூறினார். ஒரு அறிஞருக்கு இப்படிச் சொல்வது மிகக் கடினமான ஒன்றாகும். இமாம் மாலிக் தன் வாழ்க்கை முழுவதும் பல முறை “எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். அதற்காக அவர் வெட்கப்படவில்லை. ஏனெனில் அவர் தன் உள்ளத்தில் இருப்பதைத்தான் வெளிப்படுத்தினார்.
சில பண்புகள்
இமாம் மாலிக்கின் மற்றொரு பண்பு என்னவெனில் இறைத்தூதரின் ஹதீஸைக் கேட்கும்போதெல்லாம் அமர்ந்த நிலையில்தான் கேட்பார். இறைத்தூதரின் ஹதீஸை நின்று கொண்டு கேட்பது ஒருவகையான அவமரியாதை என்று அவர் கருதினார். இதைப் பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம் அல்லது முரண்படலாம். ஆனால் இமாம் மாலிக் இப்படித்தான் இறைத்தூதருக்கு தன் மரியாதையையும் அபிமானத்தையும் வெளிப்படுத்தினார். இறைத்தூதரின் ஹதீஸ் கற்பிக்கப்படும் போது, விளக்கமளிக்கப்படும் போது அல்லது மேற்கோள் காட்டப்படும் போது என எல்லா தருணங்களிலும் ஒருபோதும் நின்ற நிலையில் இருக்கமாட்டார் என்பதாக இமாம் மாலிக் அறியப்பட்டார்.
இமாம் மாலிக்கின் மற்றொரு பண்பு அனுமான விவகாரங்களில் யாரும் தன்னை ஈடுபடுத்துவதை அவர் விரும்பவில்லை. இதற்காகவும் அவர் அறியப்பட்டார். பல மாணவர்களும் ஆர்வம் மிக்க மக்களும் பிற அறிவுச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டவியலாளர்களிடம் ‘இப்படி நடந்தால் என்ன செய்வது? அப்படி நடந்தால் என்ன செய்வது?’ போன்ற கேள்விகளைக் கேட்பர். இமாம் மாலிக்கைப் பொருத்தவரை “நான் இத்தகைய கேள்விகளைச் செவிமடுக்க விரும்பவில்லை. நாம் நடைமுறை சார்ந்து இயங்குகிறோம். ஆகவே நடைமுறை விஷயங்களைப் பேசுவோம். நடந்த சம்பவம் ஏதாவது இருந்தால் கூறுங்கள். அல்லது அது நடக்கும் என்று உறுதியாக அறிந்தால் அதைப் பற்றி பேசுவோம். எதிர்காலத்துக்குச் சென்று ‘இது நடந்தால்…’ போன்ற பேச்சுகளைக் கேட்க நான் விரும்பவில்லை” என்பதுதான் அவருடைய பதிலாக இருந்தது. இன்றைய மொழியில் சொல்வதானால் ‘இவற்றைப் பற்றி பேசுவது நேர விரயம்’ என்று அவர் சொல்லியிருப்பார் என்று புரிந்து கொள்ளலாம்.
இது குறித்து என்னுடைய கருத்து என்னவெனில் அது கேட்கப்படும் கேள்வியைப் பொருத்து உள்ளது. எனவே இமாம் மாலிக்கின் கருத்து முற்றிலும் தவறும் இல்லை; முற்றிலும் சரியும் இல்லை. அவர்கள் என்ன மாதிரியான அனுமானக் கேள்விகளை அவரிடம் கேட்டனர் என்று எனக்குத் தெரியாது. அவை அபத்தமான கேள்விகளாகக் கூட இருந்திருக்கலாம். அதை அவர்களிடம் நேரடியாகச் சொல்லி அவர்களுடைய மனதைப் புண்படுத்த விரும்பாமல் அவர் “இத்தகைய அனுமான விஷயங்களை என்னிடம் கொண்டு வராதீர்கள்” என்று பொதுவாகக் கூறியிருக்கக் கூடும். இது விஷயத்தில் அவர் தன் கருத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாகக் கூட சிலர் அவருடைய மாணவர்கள் ஆகியிருக்கக் கூடும். வேறு சிலர் ‘இல்லை. எதிர்காலத்தில் நடக்கச் சாத்தியமுள்ள விஷயங்களைப் பற்றி பேசாத ஒருவர் எனக்கு வேண்டாம். நான் வேறு அறிஞரிடம் சென்று அவர் சொல்வதைக் கேட்கிறேன்’ என்று கூறினர்.
இமாம் மாலிக்கின் கால கட்டம் உமவி ஆட்சியின் உச்ச காலம், அதன் இறுதி ஆண்டுகள் மற்றும் அப்பாஸி ஆட்சியின் முற்பதி ஆகும். உமவிகள் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய போது பல அறிஞர்கள் ஈராக் அல்லது ஷாம் போன்ற பகுதிகளிலிருந்து அல் மதீனாவுக்கு, ஹிஜாஸுக்கு குடிபெயர்ந்தனர். ஹிஜாஸ் அவர்களின் புகலிடமாக இருந்தது. அபூ ஹனீஃபா கூட ஈராக்கிலிருந்து தப்பித்து 5-6 ஆண்டுகள் மக்காவில் தங்கினார். எனவே அப்போது ஏதோ ஒரு வகையில் ஒடுக்குமுறை அரங்கேறிக் கொண்டிருந்தது. இல்லையெனில் இந்த அறிஞர்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு விட்டு அசௌகரியமாக உணரும் பிற இடங்களுக்கு சுற்றித் திரிந்திருக்கமாட்டார்கள்.
இமாம் மாலிக் நபிப் பள்ளிவாசலிலும் மதீனாவின் பிற பள்ளிவாசல்களிலும் வெவ்வேறு வகுப்புகளில் பங்கேற்றார் என்று பார்த்தோம். அவர் இமாம் ஜாஃபர் சாதிக்கின் வகுப்புகளிலும் பங்கேற்றார். இரண்டு ஆண்டுகள் அவருடைய வகுப்புகளில் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சில வரலாற்று நூல்களில் அவர் இமாம் ஜாஃபர் சாதிக்கின் மாணவர் என்று கூட குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒரு ஆசிரியரின் மாணவராகக் கருதப்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவருடைய வகுப்பில் பங்கு பெறுவதுதான் தகுதியா’ என்று எனக்குத் தெரியாது.
இமாம் மாலிக் இரு வகை ஆசிரியர்களைப் பெற்றிருந்தார். ஒரு வகையினர் சட்டவியல் வல்லுநர்கள்; மற்றொரு வகையினர் ஹதீஸ் வல்லுநர்கள். ஈராக் வகையினர் ஒப்புநோக்கல் மற்றும் பிற பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறைக்கு பெயர்பெற்றவர்கள். இமாம் மாலிக் இருந்த ஹிஜாஸ் வகையினர் மிகக் குறைவாகவே பகுத்தறிவை பயன்படுத்தும் அல் அதர் —இறைத்தூதருடைய ஹதீஸ்களை மேற்கோள் காட்டுவது அவற்றை சரிபார்ப்பது— என்ற துறைக்கு பெயர்பெற்றவர்கள். ஆக அன்று ஹிஜாஸுக்கும் ஈராக்குக்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதைக் காணமுடிகிறது.
மதீனாவின் நபிப் பள்ளிவாசலில் இமாம் மாலிக் வகுப்பு எடுக்கத் துவங்குவதற்கு முன் பல பேராசிரியர்களும் அறிஞர்களும் ‘இவர் பாடம் நடத்துவதற்குத் தகுதியானவர்’ என்று உத்தரவாதம் அளித்தனர். அவர் தாமாகச் சென்று “நான் புதிதாக வகுப்பு நடத்தப் போகிறேன்” என்று சொல்லியிருக்க முடியும். அன்று வகுப்பு நடத்துவதற்கு கட்டுப்பாடுகளோ சட்டதிட்டங்களோ இருக்கவில்லை. ஆனாலும் இமாம் மாலிக் ஆசிரியப் பணியைத் துவக்குவதற்கு முன்னரும் சட்டவியல் விவகாரங்களில் அத்தாட்சியாக விளங்குவதற்கு முன்னரும் பல்வேறு அறிஞர்களின் உத்தரவாதம் தேவை எனக் கருதி அதைப் பெற்றார். அதன் பிறகுதான் வகுப்பு நடத்தத் துவங்கினார். அப்போது அவருடைய வயது இருபதுகளில் இருக்கும் என கணிக்கிறேன். அவருடைய வயதை துல்லியமாகக் கூறும் எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை.
நபிப் பள்ளிவாசலில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த இமாம் மாலிக், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் வாழ்ந்த வீட்டில் தங்கியிருந்தார். நபிப் பள்ளிவாசல் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் வீட்டைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அதே போல மக்காவுக்குச் சென்று அபூ ஹனீஃபா எங்கு தங்கினார் என்று கேட்டுப் பாருங்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் இடத்தில் அவர் தங்கினார் என்று சொல்வர். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.
அபூ ஹனீஃபா தன் வாழ்நாள் முழுவதும் பள்ளிவாசலில்தான் வகுப்பு நடத்தினார். ஆனால் இமாம் மாலிக் தன் வாழ்வின் பெரும் பகுதி பள்ளிவாசலில் வகுப்பு நடத்தினார். பிற்காலங்களில் அவரால் பள்ளிவாசலுக்குச் செல்ல இயலவில்லை. உடல் நலக் குறைவால் பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தவிர்த்தார். இறுதி காலங்களில் வெள்ளிக்கிழமை கூட பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு சிறுநீர் கசிவு நோய் ஏற்பட்டு அதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது.
இமாம் மாலிக் தன் வகுப்புச் சூழலின் மரியாதையைப் பேணுவதில் மிகக் கவனமாக இருந்தார். ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறு குணநலன்களை, நடத்தைகளைக் கொண்டிருப்பர். இவரைப் பொருத்தவரை வரலாற்று நூல்கள் சொல்வது என்னவெனில் வகுப்பறையில் அவர் நகைச்சுவையாகப் பேசவோ சிரிக்கவோ மாட்டார். சிலவேளை வகுப்புகள் கடினமாகவும் மனதுக்கு அயற்சி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் போது அழுத்தத்தைக் குறைப்பதற்காக சிலர் நகைச்சுவையாகப் பேசுவர். ஆனால் இப்படிச் செய்வது அறிவின் கண்ணியத்தைக் குறைப்பதாக இமாம் மாலிக் கருதினார். எனவே அவர் நகைச்சுவையாகப் பேசவில்லை; அவருடைய மாணவர்களையும் அப்படிப் பேச அனுமதிக்கவில்லை. அவருடைய இந்தப் பண்புக்காகவும் அவர் அறியப்படுகிறார்.
எனவே ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்பு நடத்திய அவர் ஒருமுறை கூட நகைச்சுவையாகப் பேசவோ சிரிக்கவோ இல்லை. ஆனால் வகுப்பறைக்கு வெளியே அவர் இயல்பான மனிதராக இருந்தார். மாணவர்களும் அவருக்குப் பரிட்சையமானவர்களும் அவரோடு இயல்பாக சிரித்துப் பேசிக் கொண்டு இருப்பர். ஆனால் கல்வி என்றும் கற்பித்தல் என்றும் வந்துவிட்டால் அதற்கு அவர் ஒரு ஒளிவட்டத்தைக் கொடுத்துவிட்டார். எவ்வகையிலும் அது மீறப்படுவதை அவர் அனுமதிக்கவில்லை. அது போன்ற செயல்களை முற்றிலும் தடை செய்தார். குறிப்பாக இறைத்தூதரின் ஹதீஸ் பற்றி பேசும் போது மிகுந்த மரியாதையுடன் இருப்பார். அதைக் கேட்பவர்களும் இறைத்தூதரே பேசுவது போல மரியாதையுடன் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக இமாம் மாலிக் வகுப்பை தன் வீட்டுக்கு மாற்றி அமைத்த போது, ஹஜ்-உமராவுக்கு வருவோர் அவரைப் பார்த்து சந்தேகங்கள் கேட்க வருவர். அப்போது அவர் ஒவ்வொரு பகுதியைச் சார்ந்த மக்களுக்கு ஒவ்வொரு நாள் எனத் திட்டமிட்டு அவர்களைச் சந்தித்தார். ஏனெனில் பள்ளிவாசல் அளவுக்கு அவருடைய வீடு பெரிதாக இருக்கவில்லை. எனவே முதலில் மதீனாவாசிகளைச் சந்திப்பார்; அவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார். அதற்குப் பிறகு ஈராக் மற்றும் ஷாமிலிருந்து வந்தவர்களைச் சந்திப்பார். அதன் பிறகு பிற பகுதிகளைச் சார்ந்தவர்களைக்ச் சந்திப்பார். இப்படி அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி மக்களை சந்தித்தார்.
இமாம் மாலிக்கின் தனிப்பட்ட குணாதிசயங்கள் சிலவற்றைப் பார்ப்போம். அவருடைய நினைவாற்றல் மிக வலுவாக இருந்தது. மேலும் அவர் பொறுமையாளராகவும் சகிப்புத் தன்மை மிக்கவராகவும் இருந்தார். பொறுமையையும் புலமையையும் இணைத்துப் பேசுபவராக இருந்தார். ‘அறிவு நிறைந்த ஒரு மனிதர் பொறுமையற்றவராக இருந்தால் அவரை அறிஞர் என்று கூறாதீர்கள்’ என்பது அவருடைய கருத்து. இது பற்றிய அவருடைய கூற்றுகளும் உள்ளன.
ஒருமுறை ஒருவர் இமாம் மாலிக்கிடம் வந்து “எனக்கு ஒரு சிறிய சந்தேகம் (மஸ்அல ஃகஃபீஃபா) உள்ளது” என்று கூறினார். இதைக் கேட்ட இமாம் மாலிக், “சிறிய சந்தேகம் என்று எதுவும் இல்லை. அறிவு குறித்த எந்த விஷயமும் சிறியது அல்ல” என்று சொல்லி பின்வரும் வசனத்தை மேற்கோள் காட்டினார்: நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம் (அல் குர்ஆன் 73:5). “அறிவும் இதைச் சார்ந்ததுதான். எனவே இதில் சிறியது என்றும் லேசானது என்றும் எதுவும் இல்லை.” என்றார்.
இமாம் மாலிக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும் தன் கருத்துகளை முன்வைக்கும் போதும் ‘ஹலால்-ஹராம்’ என்ற வார்த்தைகளை இயன்ற அளவு தவிர்த்தார். ஹராம் என்பதற்குப் பதிலாக மக்ரூஹ் என்றும் ஹலால் என்பதற்குப் பதிலாக முஸ்தஹ்சன் என்றும் கூறினார். இதற்குக் காரணம், அவருடைய பார்வையில் ஹலால்-ஹராம் என்பது தெளிவானது. அல்லாஹ் எதை ஹலால் என்று சொல்லியிருக்கிறானோ அது ஹலால்; எதை ஹராம் என்று சொல்லியிருக்கிறானோ அது ஹராம். இவை தவிர உள்ள தெளிவற்ற விஷயங்களைப் பற்றித்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றை ஹலால்-ஹராம் என்ற தரத்தில் வைக்காமல் முஸ்தஹ்சன்-மக்ரூஹ் என்று அவர் கூறினார்.
வாக்குவாதங்களைத் தவிர்த்தல்
இமாம் மாலிகின் மற்றொரு பண்பு அவர் வாக்குவாதங்களை (ஜிதால்) அறவே தவிர்த்தார். வாக்குவாதம் புரிவது அவருடைய இயல்புக்கு மாறானதாக இருந்தது. யாரும் தன்னோடு வாக்குவாதம் புரிவதை அவர் விரும்பவில்லை. அவரும் யாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. அவர் குறிப்பாக அறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அருவருப்பானதாகக் கருதினார். அது அவர்களுடைய அறிவுத் தரத்தில் குறை ஏற்படுத்தும் என்றார். எனினும் அவர் விவாதத்தில் (முனாகஷா) ஈடுபடுவதை பிரச்சனையாகக் கருதவில்லை.
வாக்குவாதத்தைவிட விவாதம் உளவியல் ரீதியாக லேசானது என்று அவர் கருதினார். ஆக்ரோஷமடையாமல் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் சுயநல நோக்குடன் ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்துவது, சூடான விவாதமாகி பின்னர் மக்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக பிரிவினை ஏற்படுத்தும் வாக்குவாதம் ஆகிவிடும். இத்தகைய வாக்குவாதங்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றார். “வெறித்தனத்தின் விளிம்பில் நிற்கும் இத்தகைய வாக்குவாதங்கள் மனங்களில் இறுக்கத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டாக்கும். ஆகவே அதை எப்படியாவது தவிர்த்து விடுங்கள் (அல் ஜிதாலு யுக்சில் கல்ப் வ யுரிசு தஅல்)” என்றார். இதே அர்த்தத்தில் அவருடைய வேறு கூற்றுகளும் உள்ளன. எனினும் நான் இங்கு அதன் சாரத்தை மட்டும் கூறுகிறேன். ஆனால் நட்புரீதியான பகுத்தறிவு கலந்த விவாதங்களில் அவர் பங்கெடுத்தார். அவர் அதில் எந்தப் பிரச்சனையும் காணவில்லை.
இமாம் அபூ ஹனீஃபாவிற்கும் இமாம் மாலிகிற்கும் இடையே ஒரு வேறுபாடு இருந்தது. அபூ ஹனீஃபா அரசு அலுவலர்களை —அரசாங்கப் பணியாளர்கள், நீதிபதிகள் போன்றோரை— பொதுவெளியில் விமர்சனம் செய்வார். அவர் காலத்தில் இருந்த ஒரு நீதிபதியை இவ்வாறு விமர்சித்தார். இமாம் மாலிக் இந்த அணுகுமுறையோடு ஒத்துப் போகவில்லை. “அறிஞர்களுக்கு அரசு அலுவலர்கள் மீது புகார் இருப்பின் அதை அவர்களோடு தனியாகப் பேச வேண்டும் என்றும் பொதுவெளியில் இவ்விஷயத்தைக் கொண்டு வரக்கூடாது” என்றும் கூறினார்.
இமாம் ஷாஃபியி இமாம் மாலிகின் மாணவர் ஆவார். வருங்காலத்தில் இமாம் ஷாஃபியி மிகவும் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்வார் என்ற அகப்பார்வை இமாம் மாலிகிற்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதை அவர் இமாம் ஷாஃபியிடம் தெரிவித்தும் உள்ளார். இமாம் மாலிக் உளவியல் ரீதியாக அடைந்திருந்த முதிர்ச்சியை இது காட்டுகிறது.
வாழ்வாதாரம்
இமாம் மாலிகின் வாழ்வாதாரத்தைப் பொருத்தவரை, அவர் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தார் எனப் பார்த்தோம். அவருடைய தந்தை ஈட்டி தயாரிப்பாளர் ஆவார். அவருடைய சகோதரர் பட்டு வியாபாரி. இமாம் மாலிக் வர்த்தகத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. தன் வாழ்வின் பெரும்பகுதியை கல்வி கற்பதிலேயே அவர் செலவிட்டார். அவரிடம் நானூறு சொச்சம் தீனார்கள் இருந்தன என்றும் அதை ஏதோ ஒரு சந்தையில் முதலீடு செய்தார் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. பிரபலமான அறிஞராக மாறுவதற்கு முன் அதுதான் அவருடைய வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இருந்தது. அறிஞர் ஆனதற்குப் பிறகு அவர் அரசிடமிருந்து ஊதியம் பெற்றார். இது குறித்து சிலர் பிரச்சனையைக் கிளப்பினர். அதை அவரும் அறிந்திருத்தார். “நான் அரசிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ பணம் பெறுவதாக நினைக்கவில்லை. அறிஞர்களுக்குச் சொந்தமான பொதுக் களஞ்சியத்தில் (பைத்துல் மால்) இருந்துதான் நான் ஊதியம் பெறுகிறேன். எனக்கும் மட்டும் அல்ல, அது எல்லா அறிஞர்களுக்கும் சொந்தமானது. அவர்களும் இதிலிருந்து ஊதியம் பெற வேண்டும்” என்றார். ஆனால் அவர் வேறு யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் அன்று சில அறிஞர்கள் மக்களிடமிருந்து பணம் பெற்றனர்.
அன்று பல அறிஞர்கள் ‘தகஷ்ஷுஃப்’ முறையில் வாழ்ந்தனர். அதாவது எளிய உடைகளை உடுப்பது, எளிய உணவுகளை உட்கொள்வது, எளிய வீடுகளில் குடியிருப்பது என்று எளிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். இமாம் மாலிக் அவர்களைப் போல் இல்லை. அவர் எப்போதும் நல்ல உடைகளையே உடுத்தினார்; நல்ல உணவுகளையே உட்கொண்டார்; ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக உண்பது போன்ற இன்பங்களில் ஈடுபடவில்லை. நல்ல சத்தான உணவை உட்கொண்டார். இதை சிலர் விமர்சித்தனர். அதை அறிந்த அவர் “நான் தேவைக்கு அதிகமாக உண்ணவில்லை. நல்ல சத்தான உணவைத்தான் உண்கிறேன். ‘உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் (வ குலு வஷ்ரிபு வலா துஸ்ரிஃபு)’ நான் உண்கிறேன்; பருகுகிறேன். தேவைக்கு அதிகமாக எதையும் செய்யவில்லை” என்றார். அவருக்கு வாழைப்பழங்கள் மிகவும் பிடித்தமான உணவு என்று ஒரு குறிப்பு கூறுகிறது.
தேவையான பொருட்கள் அனைத்தும் நிரம்பிய வீட்டில் இமாம் மாலிக் வசித்தாலும் அவர் அவ்வீட்டை சொந்தமாகப் பெற்றிருக்கவில்லை. பிற அறிஞர்களோ சாதாரண வீட்டில் வசித்தாலும் அது அவர்களுடைய சொந்த வீடாக இருந்தது. ஆனால் இமாம் மாலிக் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம் என்னவெனில் இங்கு வன்மம் நிறைந்தவர்கள் உள்ளனர். அவர்கள் சில அறிஞர்களை கீழடக்க முயல்கின்றனர். எனவே நாம் பேசும் விஷயம் குறித்த முழுமையான பார்வையை பார்ப்பது நல்லது.
ஆட்சியாளர்களோடு அவருக்கு இருந்த உறவு
அடுத்து ஆட்சியாளர்களோடு அவருக்கிருந்த உறவைப் பற்றி பார்ப்போம். இங்கு உமவி ஆட்சியின் கடைசி முப்பது வருடங்களும் அப்பாஸி ஆட்சியின் முதல் பன்னிரெண்டு சொச்சம் வருடங்கள் குறித்து பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்க. உமவிகளில் நியாயமாக நடந்த ஒரே ஆட்சியாளரான உமர் இப்னு அப்துல் அஸீஸின் காலமும் இதில் அடங்கும். இக்காலகட்டம் இமாம் மாலிக் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது போலத் தெரிகிறது. அப்போதுதான் —இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் போன்றோர் அடங்கிய— முஸ்லிம்களுக்கிடையே இணக்கம் உண்டாக்கும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதே காலத்தில்தான் இமாம் அலீ மற்றும் இறைத்தூதரின் குடும்பத்தினரை சபிக்கும் அதிகாரப்பூர்வ பிரசங்கங்கள் நிறுத்தப்பட்டன.
இத்தகைய காலகட்டத்தில்தான் இமாம் மாலிக் வாழ்ந்து கொண்டிருந்தார். பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே இருந்ததால் உமர் இப்னு அப்துல் அஸீஸுக்குப் பிறகு மீண்டும் இஸ்லாமிய எதிர்ப்பியக்கம் தலைதூக்கியது. அப்போது மக்கள் இமாம் மாலிகை அணுகி அவருடைய கருத்தைக் கேட்டனர். “இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முஸ்லிம்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் எதிர்ப்பியக்கத்தில் பங்கு பெற வேண்டுமா? அல்லது இருப்பு நிலையை தக்க வைக்க வேண்டுமா? அரசுக்கு எதிராக இருப்பவர்களோடு சேர்ந்து சண்டையிட வேண்டுமா அல்லது அரசர்/கலீஃபாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா?” என்று மக்கள் கேட்டனர். இதற்கு இமாம் மாலிக் அளித்த பதில் அன்றைய ஆட்சியாளர்கள் குறித்து அவருடைய அணுகுமுறையை சுருக்கமாகக் கூறுவதாகக் கருதுகிறேன். அவர் கூறியதாவது, “உமர் இப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஒருவருக்கு எதிராக எதிர்ப்பியக்கம் செயல்படுகிறதெனில் நீங்கள் அதற்கு எதிராகச் சண்டையிடுங்கள். ஆனால் அந்த எதிர்ப்பியக்கம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப், ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக், அப்பாஸி காலத்து அல் சஃப்பாஹ், அல்லது அபூ ஜாஃபர் அல் மன்சூர் போன்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளதெனில் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். ஏனெனில் ஒரு அநியாயக்காரனை மற்றொரு அநியாக்காரனைக் கொண்டு அல்லாஹ் பழிவாங்குவான். கடைசியில் இருவரும் மாண்டு போவர்”.
ஆக அரசாங்கத்தை, அன்றைய சாம்ராஜ்யங்களை எதிர்ப்பதில் பெரிய அளவில் நாட்டம் காட்டாத ஒரு சட்டவியலாளராக இவரைப் பார்க்கிறோம். அவரை அரசாங்கத்துக்கு ஆதரவானவர் என்றோ எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவானவர் என்றோ வகைப்படுத்த முடியாது. இவ்விரு நிலைகளில் எதிலும் அவரை பொருத்த முடியாது.
“கலீஃபா என்று அழைக்கப்படும் இந்த ஆட்சியாளர்களும் அரசர்களும் தொடர்ந்து அநியாயம் செய்கிறார்கள். ஆனால் எவ்வித எதிர்வினையும் ஏற்படாமல் அவர்கள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்? இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று இமாம் மாலிகிடம் கேற்கப்பட்டது. அதற்குக் காரணம் மக்கள்தான் என்று அவர் பதிலளித்தார். நன்மையை ஏவி தீமையை தடுத்தல் (அம்ர் பில் மஃரூஃப் வ நஹி அனில் முன்கர்) என்ற கோட்பாட்டில் பிளவுபட்ட நிலையில் மக்களின் தரம் இருக்கும் போது, ஆட்சியாளர்கள் இப்படித்தான் தப்பித்துக்கொள்வர். இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஹதீசை அவர் குறிப்பிட்டார். ‘நீங்கள் எந்த அளவுக்கு இருக்கிறீர்களோ அந்த அளவுக்குதான் ஆட்சியாளர்கள் உங்கள் மீது ஆட்சி செலுத்துவர் (கமா தகூனு யுவல் அலைக்கும்)’. ஆட்சியாளர்களின் அநீதிகளால் மக்கள் நிலைமாறக்கூடியவர்களாக இருந்தால் ஆட்சியாளர்கள் அநீதியாகத்தான் நடந்து கொள்வர். அப்படியில்லாமல் மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களை தடுத்தால் அவர்கள் தப்ப முடியாது.
சமூக ஸ்திரத்தன்மையற்ற நிலை, பெருந்திரள் மக்கள் இயக்கம் இல்லாத எதிர்ப்பு ஆகியவை குழப்பத்தை (ஃபித்னா) ஏற்படுத்தும்; ஆகையால் அதைத் தவிர்ப்பது நல்லது என்று இமாம் மாலிக் கருதினார். ஆயுதம் ஏந்துவதைத் தவிர்த்து பொதுக் கருத்து வலுப்படும் வரை ஆட்சியாளர்களின் பிறழ்வுகளை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த முறையில் எப்படியாவது அவர் பதவி விலகினால் சரி. அதுவல்லாமல் ஆயுதமேந்தி அவரை எதிர்ப்பது கூடாது என்றார். தன் காலத்தில் ஆட்சியாளர்கள் மாற்றப்பட்ட முறை குறித்து அவர் கொண்டிருந்த கருத்து இதுதான்.
♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3)