இஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)
இஸ்லாமிய வரலாறு – 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப் சேனலில் உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 07-10-2008, இடம்: வாஷிங்டன் டி.சி.
YouTube Link: Islamic History, Hanafi & Maliki School of thought
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் அபூ ஹனீஃபா பிற சிந்தனைப் பள்ளிகளிலிருந்து வேறுபடுதல்
முந்தைய வகுப்பில் இமாம் அபூ ஹனீஃபா பற்றிப் பேசினோம். பிற சட்டவியலாளர்கள், இமாம்கள் அல்லது சட்டவியல் அறிஞர்களிடமிருந்து அபூ ஹனீஃபாவை பிரித்துக் காட்டும் ஒரு அம்சம் அவர் —இன்றைய மொழியில் சொல்வதானால்— அதிகமாக தாராளவாதக் கொள்கைகளைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. மேலும் இன்று நாம் பேசும் தனிமனிதச் சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியவற்றிலும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவருடைய கொள்கைகளில் நாம் மேற்சொன்ன மூன்று அம்சங்கள் குறிப்பாக தனித்து நிற்கின்றன.
அவர் தன் சிந்தனையிலும் சட்டவியல் செயல்பாடுகளிலும் மனிதப் பகுத்தறிவுப் பண்புக்கு முக்கியத்துவம் அளித்ததற்காக பெயர்பெற்றவர். அதாவது, தீர்ப்பு வழங்கும்போதோ ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும்போதோ நம் சிந்தனை ஆற்றலை கருத்தில் கொள்ள வேண்டும்; அதைப் புறந்தள்ளக் கூடாது என்பது இதன் பொருள். இதன் காரணமாக சில முஸ்லிம்கள் அவரை ‘ஷரியத் மற்றும் ஃபிக்ஹுக்குப் பதிலாக சொந்த கருத்துகளை வெளிப்படுத்தியவர்’ என்று சொல்லி குற்றம் சுமத்தினர். ஆம்! இது ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கப்படுகிறது!
பெண்ணுரிமை பற்றி நாம் சொன்னோம். இது விஷயத்தில் ‘ஒரு முஸ்லிம் பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தன்னியல்பாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள முடியும்’ என்ற அவருடைய கூற்று பிற சட்டவியலாளர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டுகிறது. அதாவது ‘ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதற்கு பெற்றோர் அல்லது பொறுப்பாளரின் அனுமதியோ ஒப்புதலோ தேவை இல்லை. ஒரு முஸ்லிம் ஆணுக்கு தன் திருமணத்தை முன்மொழிந்து அதைத் தன் விருப்பப்படி நிறைவேற்றும் உரிமை இருக்கும் போது ஒரு பெண்ணுக்கும் அத்தகைய உரிமை உண்டு; இதில் எவ்வித பாகுபாடும் கூடாது’ என்பது இதன் பொருள். எனினும் அப்பெண் சரியான வயதை அடைந்திருக்க வேண்டும், திறனாய்வுப் பண்பைப் பெற்றிருக்க வேண்டும் போன்ற அனைவரும் அறிந்த அம்சங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது தெளிவு. மேலும் அவர் இதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். ஒரு பெண் இவ்வாறு தன் விருப்பப்படி முடிவெடுக்க வேண்டுமெனில் அவள் —இன்றைய மொழியில் சொன்னால்— சமூக அளவில் தனக்குச் சமமான ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவல்லாமல் தனக்குக் கீழான ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அவள் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் ரத்தாகிவிடும் என்றார்.
இஸ்லாமியச் சட்டவியலில் ‘அல் ஹஜர் அலா கைர் ஆகில்’ என்றொரு அம்சம் உள்ளது. இதன் பொருள் ‘புத்தி சுவாதீனமற்றவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்’ ஆகும். இந்த விஷயத்திலும் அபூ ஹனீஃபா தன்னைப் போன்ற பிற சட்டவியலாளர்களிடமிருந்து கருத்து மாறுபட்டார். ஆட்டிசம் அல்லது வேறு தீவிர மனநோய் இருப்பவர்கள் சாதாரண புத்தி சுவாதீனமுள்ளவர்களைப் போல கருதப்படுவதில்லை. எல்லா சமூகங்களிலும் இத்தகையோர் இருக்கத்தான் செய்வர். அபூ ஹனீஃபா கூறுவதாவது “இஸ்லாமிய சமூகத்தில் இத்தகையோர் இருந்தால் அவர்களுடைய சுதந்திரத்தில் எத்தகைய கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது”. இது பிற சட்டவியல் அறிஞர்களின் கூற்றிலிருந்து மாறுபடுகிறது. அவர்கள் ‘இவர்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்’ என்றனர். இதையும் கூட தனிமனிதச் சுதந்திரத்துக்கு அபூ ஹனீஃபா முக்கியத்துவம் கொடுத்தார் என்ற தலைப்பின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.
இது குறித்து அபூ ஹனீஃபாவின் கருத்து பின்வருமாறு இருந்தது. “இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் ‘உங்கள் சுதந்திரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது அல்லது முடக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லவோ அவர்களை சமூகத்திலிருந்து பிரித்து மனநலக் காப்பகங்களில் வைக்கவோ என்னால் இயலாது”. இவை அவருடைய வார்த்தைகள் அல்ல. அவருடைய கருத்தை வேறு வார்த்தைகளில் நான் கூறுகிறேன். மேலும் அவர் “சுதந்திரமான ஒரு மனிதனின் விருப்பங்களைத் தடை செய்வதைவிட வலி மிகுந்தது வேறெதுவும் இருக்க முடியாது (லா ஷய்அ ஆலம் பில் ஹுர்ரி மின் இஹ்தாரி ஹுர்ரி இராதத்)” என்றார். நடைப்பயிற்சி செய்தல், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்தல், பள்ளிவாசலுக்குச் சென்று கூட்டுத்தொழுகையில் ஈடுபடல் போன்ற —பிறர் சாதாரணமாக சுதந்திரமாக ஈடுபடும்— சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கும் சுதந்திரத்தை ஒருவரிடமிருந்து பறிப்பதை விட அவருக்கு துன்பம் இழைப்பது வேறெதுவும் இருக்காது. எனவே இவ்வாறு செய்வது கூடாது என்பது அபூ ஹனீஃபாவின் கருத்து. பிற சட்டவியலாளர்களிடமிருந்து அபூ ஹனீஃபாவை தனித்துக் காட்டும் மற்றொரு பண்பு இது.
அபூ ஹனீஃபாவின் ஆக்கங்கள்
அபூ ஹனீஃபா சுயமாக இயற்றிய எழுத்தாக்கங்கள் என்று பார்த்தால் ‘ரிசாலாஹ்’ என்ற வகை ஆக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை நூல்கள் என்று சொல்ல முடியாது. இத்தகைய ஆக்கங்களை மொழிபெயர்ப்பாளர்கள் ‘நிருபங்கள்’ என்று அழைக்கின்றனர். அவற்றில் ஒன்று ‘அல் ஃபிக்ஹ் அல் அக்பர்’ (முக்கிய சட்டவியல்). மற்றொன்று ‘அல் ஆலிம் வல் முதஅல்லிம்’ (அறிஞரும் அறிவைத் தேடுபவரும்). உஸ்மான் அல் புன்னி என்ற ஒரு நபருக்கு அவர் எழுதிய கடிதங்களும் உள்ளன. மேலும் அல்-கதரிய்யா (‘ஏற்கனவே விதிக்கப்பட்டதாலேயே மனிதன் ஒவ்வொரு செயலையும் செய்கிறான்; அவனுக்கு சுயவிருப்பத் தீர்மானம் இல்லை; ஆகவே தன் செயல்களுக்கு அவன் பொறுப்பாகமாட்டான்’ என்று சொன்ன கொள்கை) பிரச்சனை பற்றி அவர் எழுதியுள்ள ஒரு சிறு நூலும் உள்ளது. அதில் அவர் கதரிய்யா கொள்கைக்கு பதில் சொல்லி மறுப்பு தெரிவிக்கிறார். அன்று அது அரசாங்கக் கொள்கையாக இருந்தது. அரசை மக்கள் எதிர்க்கக் கூடாது என்ற நோக்கத்தில் உமவிகளும் அப்பாஸிகளும் இக்கொள்கை பரவுவதை விரும்பினர். ‘அனைவருக்கும் விதி விதிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நாங்கள் இப்படி ஆட்சி புரிகிறோம் எனில் அதையும் அல்லாஹ்தான் விதித்துள்ளான். நீங்கள் எப்படி இதை எதிர்க்க முடியும்?’ என்று அவர்கள் வாதித்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அபூ ஹனீஃபா சில கருத்துகளை எழுதினார்.
அபூ ஹனீஃபாவின் சட்டவியல் என்று இன்று நாம் புரிந்து வைத்துள்ளபடியான குறிப்பான சட்டவியல் நூல் எதையும் அவர் இயற்றவில்லை. பிற முஜ்தஹிதீன்கள் மற்றும் சட்டவியலாளர்களைப் போல அபூ ஹனீஃபா காலத்திலும் பல பிரச்சனைகளும் கேள்விகளும் அடிக்கடி எழுந்தன. அவற்றுக்கு அபூ ஹனீஃபா அளித்த பதில்களையும் அவர் தொகுக்கவில்லை. அவருடைய மாணவர்கள்தான் அதைத் தொகுத்தனர். குறிப்பாக இரண்டு மாணவர்கள் அவரோடு மிக நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அவரோடு கழித்த காரணத்தால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர் எப்படி பதிலளித்தார் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய அறிவார்ந்த பதில்களையும் கருத்துகளையும் எழுதினர்.
முதலாமவர் பிரபலமாக அபூ யூசுஃப் என்று அழைக்கப்பட்ட யாகூப் இப்னு இப்ராஹீம் இப்னு ஹபீப். இன்று அபூ ஹனீஃபாவின் கருத்துகள் என்றும் அக்கால கேள்விகளுக்கு அவர் அளித்த அறிவார்ந்த பதில்கள் என்றும் நாம் அறிந்துள்ளவற்றில் பெரும் பகுதியை இவர்தான் தொகுத்தார். அபூ ஹனீஃபா பற்றி இவர் எழுதிய நூல்களுள் பின் வருபவை அடங்கும்: ‘கிதாப் அல் ஆதார்’, ‘அல் ரத் அலா சையதில் அவ்ஸாயி’. அவ்ஸாயி ஷாமில் வாழ்ந்த மற்றொரு சட்டவியலாளர் ஆவார். அவருடைய சட்டவியல் நீண்ட காலம் நிலைக்கவில்லை. உமவிகள் அல் அந்தலூஸ் என்ற ஸ்பெய்னை ஆட்சி செய்த காலத்தில் இவருடைய சட்டவியல் பிரபலமாக இருந்தது. அபூ யூசுஃப் எழுதிய மற்றொரு நூல் ‘கிதாப் இக்திலாஃப் இப்னு அபி லைலா’. இவர் எழுதிய நூல்களிலேயே மிகப் பிரபலமானது ‘கிதாப் அல் ஃகிராஜ். ஃகிராஜ்’ என்பது ஸகாத், செல்வத்தின் விநியோகம் போன்ற முஸ்லிம்களின் நிதி தொடர்பான விவகாரங்களைக் குறிக்கும். அபூ ஹனீஃபா பற்றியும் தன்னுடைய சொந்த மதிப்பீடுகள், பதிலகள், தீர்ப்புகள் —சட்டவியல்— பற்றியும் அபூ யூசுஃப் எழுதிய மிக முக்கியமான நூல் இது.
அபூ ஹனீஃபாவின் இரண்டாவது முக்கியமான மாணவர் முஹம்மத் இப்னு அல் ஹசன் அல் ஷீபானி ஆவார். ஹி. 132-ல் பிறந்த அவர் 189-ல் மறைந்தார். ‘அல் அசல் வல் மக்சூத்’ என்ற நூலை அவர் எழுதினார். ‘அல் அசல்’ என்றால் ‘மூலத் தோற்றம்’ என்று பொருள். அதாவது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட குர்ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய மூல சட்டதிட்டங்களை இது குறிக்கிறது. ‘அல் மக்சூத்’ என்றால் ‘நீட்சி’ என்று பொருள். அதாவது இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிலிருந்து நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள் சிந்தித்து பொருள் நீட்டித்து பெறும் புரிதலைக் குறிக்கிறது.
மேலும் ‘கிதாப் அல் ஸியாதாத்’, ‘கிதாப் அல் ஜாம அஸ் சகீர்’, ‘கிதாப் அல் ஜாம அல் கபீர்’, ‘கிதாப் அல் ரித் அலல் மதீனா’ போன்ற பிற நூல்களும் உள்ளன. தகவலுக்காக சிலவற்றின் பெயரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இதில் நான் கடைசியாகக் கூறிய புத்தகம் ‘மதீனாவாசிகளுக்கான பதில்’ என்ற அர்த்தத்தில் பெயர் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் ஹிஜாஸின் மதீனாவில் இமாம் மாலிக்கிற்கும் ஈராக்கின் அல் கூஃபாவில் இமாம் அபூ ஹனீஃபாவுக்கும் இடையே ஒரு புலமைசார் போட்டி நிலவியது. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
ஹனஃபி சிந்தனைப் பள்ளியின் வளர்ச்சி
பகுத்தறிவுக்கு இடமளித்த காரணத்தால் ஹனஃபி சிந்தனைப் பள்ளி வளர்ச்சி பெற்று விரிவடைந்தது. ஒரு விஷயத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளும் போது மக்கள் அச்சிந்தனைப் பள்ளியின்பால் ஆர்வம் கொள்கின்றனர். மக்களுக்கு விஷயங்களை விளக்க முற்படும் போது அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். அதனால் அந்தச் சிந்தனைப் பள்ளி வளர்ச்சியடைகிறது. ஆனால் பெரும்பாலான பிற சிந்தனைப் பள்ளிகளின் அணுகுமுறை அப்படி இருப்பதில்லை. ‘உங்களுக்குப் புரியவில்லை என்றால் அதற்காக வருந்துகிறோம். ஆனால் அறிஞர்கள் இப்படித்தான் கூறுகின்றனர். எங்களால் இதை விளக்க இயலாது. நீங்கள்தான் அதிகமாகக் கற்று புரிந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கான விடையைத் தேட வேண்டும்’ என்ற ரீதியில்தான் பிற சிந்தனைப் பள்ளிகள் பேசுகின்றன. ஆனால் அபூ ஹனீஃபாவின் சிந்தனைப் பள்ளியில் அன்று எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் இருந்தன. இதன் காரணமாக முஸ்லிம் உலகின் பல பகுதிகளில் அது பிரபலமடைந்தது.
ஒரு கட்டத்தில் ஹனஃபி சிந்தனைப் பள்ளி அப்பாஸி அரசின் அதிகாரப்பூர்வ சிந்தனைப் பள்ளியாக கருதப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் அல்ல; கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக இது நீடித்தது. ஹாரூன் அர் ரஷீத் அபூ ஹனீஃபாவின் மிக நெருங்கிய மாணவரான அபூ யூசுஃபை பக்தாதின் நீதிபதியாக நியமித்தார். இப்படியாக ஹனஃபி சிந்தனைப் பள்ளி ஈராக் முழுவதும், ஈராக்குக்கு கிழக்கே உள்ள பகுதிகளிலும் பரவியது. இன்றைய துர்கிஸ்தான் அல்லது மத்திய ஆசிய பகுதிகளில் ஹனஃபி சிந்தனைப் பள்ளிக்கும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளிக்கும் இடையே ஒரு வித போட்டி நிலவுகிறது. மேலும் சிரியாவிலும் இச்சிந்தனைப் பள்ளி பரவியது.
மற்றொரு சமயத்தில் ஹனஃபி சிந்தனைப் பள்ளி எகிப்தின் அதிகாரப்பூர்வ சிந்தனைப் பள்ளியாக மாறியது. அபூ ஹனீஃபாவின் காலத்திலிருந்து வெகு தொலைவில் —கி.பி. 18 ஆம் நூற்றாண்டில்— இது நிகழ்ந்தது. அன்று உஸ்மானிய அரசின் ராணுவ அதிகாரிகள் எகிப்துக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே அவர்கள் தங்கள் ஆட்சி நிர்வாகத்தை நிலைநாட்டினர். அப்போது அவர்கள் தங்களுடன் ஹனஃபி சிந்தனைப் பள்ளியையும் எடுத்துச் சென்றனர். அது அந்த அளவு பிரபலமடையவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ சிந்தனைப் பள்ளியாகத் திகழ்ந்தது. அன்று எகிப்திய மக்கள் மத்தியில் மாலிகி மற்றும் ஷாஃபியி சிந்தனைப் பள்ளிகளுக்கிடையே இழுபறி நிலவியது.
அரசாங்கப் பதவி வகித்தல்
இன்று சவூதி அரசாங்கம் அறிஞர்களை நியமித்தால் அவர்களை நாம் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்க வேண்டும். எனில் அபூ யூசுஃப் போன்ற அறிஞர்கள் அப்பாஸி ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள் என்று அறியும் போது இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கலாம்:
இவ்விரு நியமனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு அந்த அரசுகள் எந்த அளவுக்கு சமரசம் அடைந்துள்ளன என்பதைப் பொறுத்து இருக்கிறதே தவிர அந்த நியமனத்திலேயே பிரச்சனை இல்லை. அப்பாஸி ஆட்சி காலத்தில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் எனில் அவர் அத்தகைய அரசாங்கத்தோடு சேர்ந்து செயல்பட விரும்பினார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அரசாங்கம் இஸ்லாமியப் பார்வையில் சமரசத்துக்கு உள்ளாகியிருந்தாலும் அது இன்றைய சவூதி அரசாங்கம் அளவுக்கு இல்லை. நாம் இதுவரை பார்த்து வந்தது போல நம் வரலாற்றின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த நெறிபிறழ்வு ஆண்டுகள் செல்லச் செல்ல மென்மேலும் விரிவடைந்து இன்று சவூதி அரேபியாவில் காணப்படும் ‘இஸ்லாமிய பகட்டைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆகவே இன்று சவூதி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அறிஞர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைப் போல அன்றைய அறிஞர்களைப் பார்க்கத் தேவையில்லை.
அன்று அவ்வறிஞர்கள் இஸ்லாமிய அரசாங்கம் சாராத விஷயங்களைப் பற்றித்தான் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தனர். இத்தகைய விஷயங்களில் சிந்தனையை வளர்த்து இஸ்லாமியப் பாரம்பரியத்தை இஸ்லாமியக் கட்டமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தனர். இஸ்லாமிய அரசாங்கம் பற்றி ஒருவர் பேசினால்தான் ‘இவர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். இவர் சொல்வதை கவனத்துடன் அணுக வேண்டும்’ என்று நாம் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, வணக்க வழிபாடுகள் பற்றிய விவகாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவர் ஷவ்வால் மாதத்தின் ஒரு வியாழக்கிழமையில் நோன்பு நோற்று அதை முறித்துவிட்டார் எனில் அந்நோன்பை அவர் திரும்ப நோற்க வேண்டுமா? மேலும் உளூ செய்வது, ஸகாத், ஹஜ் போன்ற ‘தவ்கீஃபி’ விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். அதாவது இறைத்தூதரே இவற்றை எப்படி நிறைவேற்றினார் என்ற கேள்விகள் எழும் விவகாரங்களைப் பற்றிப் பேசும் போது அவ்வறிஞர்கள் நேர்மையோடுதான் பேசினர். இத்தகைய விவகாரங்களில் அவர்கள் அரசாங்கக் கொள்கையின்பால் கடமைப் பட்டிருக்கவில்லை.
அன்று அபூ யூசுஃப் பாக்தாதின் நீதிபதியாக இருந்த போது அப்பாஸி அரசாங்கம் இஸ்லாமிய எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தது. இது பற்றி அவருடைய கருத்து என்ன என்று கேட்டால், “இது ஒரு குழப்பம், குட்டையைக் குழப்பாமல் இருப்பது நல்லது” என்றுதான் அவர் சொல்லியிருப்பார். அசலில் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. எனவே நாம் இதை கவனமாகக் கையாள வேண்டும். இவர்களிடம் அரசாங்கத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்தல்லாத பிற விஷயங்களில் அறிவார்ந்த செயல்பாடு காணக் கிடைக்கிறது. அதில் அவர்கள் தங்களால் இயன்ற அளவு சிறப்பாகப் பணியாற்றினர். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆட்சியாளரின் சட்டப்பூர்வதன்மை, முஸ்லிம்களுக்காக முடிவெடுக்கக் கூடிய நிர்வாகத்தின் சட்டப்பூர்வதன்மை ஆகியவை பற்றி அவர் சொந்தக் கருத்தைக் கொண்டிருக்கக் கூடும். இதில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை.
இஸ்லாமிய பார்வையில் அரசியல் ரீதியாக வெளிப்படையாகவே சமரசத்துக்குள்ளான ஒரு அரசாங்கத்தில் ஒரு அறிஞர் பதவி வகிப்பதற்கெதிராக இமாம் அபூ ஹனீஃபா எதுவும் எழுதினாரா என்ற கேள்வியும் எழுகிறது. நான் அறிந்தவரையில் இது குறித்து அவர் எதுவும் எழுதவில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் அது நிலைக்கவில்லை. எனினும் அவர் அதற்கு எதிரானவர் என்பதை தன் செயலால் செய்து காட்டினார்.
ஹனஃபி சிந்தனையின் பின்னணி
அடுத்து, அபூ ஹனீஃபாவின் பரந்த மனப்பான்மைக்குக் காரணம், அவர் வாழ்ந்த சூழலாக இருக்கக் கூடும். ஒரு பன்னாட்டுக் கலாச்சாரத்தில் அவர் வாழ்ந்தார். பல வரலாறுகள் சந்தித்த, பல கலாச்சாரங்கள் கூடிப் பேசிய, பல மதங்கள், நம்பிக்கைகள் அருகருகே சேர்ந்து வாழ்ந்த ஒரு பகுதியில் அவர் வாழ்ந்தார். சிந்திக்கும் மனிதர் ஒருவர் இத்தகைய சமூகச் சூழலில் வாழும் போது அதன் நிதர்சனத்தைப் புரிந்து வாழவும் அதற்கு எதிர்வினையாற்றவும் இயல்பாகவே நிர்பந்தத்துக்கு உள்ளாயிருப்பார். அரேபிய தீபகற்பத்துக்கு வெளியே இஸ்லாம் பரவிக்கொண்டிருந்தது. பல்வேறு வரலாற்றுப் பின்னணிகள் கொண்ட, பாரம்பரியங்களைச் சார்ந்த மக்கள் முஸ்லிம்களாக மாறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கே உரிய கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தன. இத்தகைய சூழலில் வாழும் ஒரு அறிஞர், வெளியுலகத்தை அதிகம் பார்த்திராத —அவர் பார்க்கக் கூடிய வெளியுலகம் ஹஜ்ஜுக்காக சிலநாட்கள் வந்து செல்லும் முஸ்லிம்கள் மட்டும்தான்— ஒருவரை விட துடிப்பான தீர்வுகளை கொண்டிருப்பார்.
அபூ ஹனீஃபாவின் தனித்தன்மைக்குக் காரணமாக இருந்த மற்றொரு அம்சம் அவர் தன் வாழ்நாள் முழுவதும் சந்தையோடு தொடர்பிலிருந்தது ஆகும். அவர் ஒரு வியாபாரி. சந்தையில் பொருள்களை வாங்கி விற்பவர்களுக்கு தனிச்சிறப்புகள் உண்டு. பல விஷயங்களில் இவர்களுடைய புரிதல் நுகர்வோரை விட மேம்பட்டதாக இருக்கும். இதுவும் அவருடைய பண்புகளில், கருத்துகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.
கே: இமாம் அபூ ஹனீஃபா மீது மற்றொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. அவர் தன் கருத்துகளை முன்வைத்த போது, தக்க சான்றுகளைத் தரவில்லை என்றும் ஒப்புநோக்கல் முறையை அதிகமாக நம்பியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீர்களா?
ப: இல்லை. இப்படிச் சொல்பவர்கள் அபூ ஹனீஃபா ஒரு தீர்ப்பு வழங்கினால் அதற்குச் சான்றாக அடுக்கடுக்கான ஹதீஸ்களை அவர் முன்வைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். குர்ஆன் எல்லோர் முன்னாலும் முழுமையாக இருந்ததால் அதைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்வதில்லை. இந்தச் சட்டவியலாளர்களிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால் அவர்களுள் சிலர் வேறு சிலரைவிட அதிக ஹதீஸ்களை பெற்றிருந்தனர். அபூ ஹனீஃபா ஈராக்கில் வாழ்ந்தார். மதீனாவில் அல்ல. மதீனா இஸ்லாத்தின் அடித்தளமாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் தினசரி உரையாடல்களில் ‘இறைத்தூதர் இப்படிச் சொன்னார்; இறைத்தூதர் அப்படிச் சொன்னார்’ என்று பேசிக் கொண்டிருந்தனர். அபூ ஹனீஃபாவிடம் இதை எதிர்பார்க்க முடியாது. காரணம் அவர் ஹதீஸ்களை தவிர்க்கிறார் என்பதல்ல. அக்காலச் சூழலில் மதீனாவில், மக்காவில் அல்லது ஹிஜாஸில் ஹதீஸ்கள் சரளமாக மொழியப்பட்டது போல ஈராக்கில் மொழியப்படவில்லை. இப்படிப் பேசும் மக்கள் ‘கண்மூடி பின்பற்றுதல்’ என்ற ரீதியில்தான் இறைத்தூதரின் ஹதீஸ்களை அணுகுகின்றனர். இறைத்தூதர் ஒன்றைச் சொன்னார் எனில் அதை அவர்கள் எப்படி புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் மொத்த உலகமும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அபூ ஹனீஃபா விஷயங்களை அவற்றின் சூழமைவில் பொருத்திப் பார்க்க முற்பட்டார். இதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். இறைத்தூதரின் ஒரு ஹதீஸ் உள்ளது. இறைத்தூதர், ஏமன் நாட்டுக்கு இஸ்லாமிய நிர்வாகியாக ஒருவரை அனுப்பினார். அப்போது பின்வரும் நான்கு பொருள்களிலிருந்து ஸகாத் வசூலிப்பீராக என்று அறிவுறுத்தினார்: கோதுமை, பார்லி, உலர் திராட்சை, (மற்றொன்று என் நினைவுக்கு வரவில்லை). ‘இது ஹதீஸ் அல்ல’ என்று அபூ ஹனீஃபா வாதிடவில்லை. அதை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதை அதன் சூழலில் பொருத்திப் பார்த்தார். இந்த நான்கும்தான் ஏமனின் விளை பொருட்கள். ஸகாத் அவற்றிலிருந்துதான் கொடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவு. எனவேதான் ஏமனுக்கு அனுப்பியவரிடம் இறைத்தூதர் அவ்வாறு கூறினார். இதுவல்லாமல் பழங்களும் காய்கறிகளும் விளையும் வேறொரு பகுதிக்கு அவர் அனுப்பப்பட்டால் அந்த விளைபொருட்களைத்தான் இறைத்தூதர் குறிப்பிட்டிருப்பார்.
இந்த ஹதீசை அதன் சூழமைவில் பொருத்துவதற்கு அபூ ஹனீஃபா பின் வரும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தினார்: பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 6:141)
எனவே பழங்களும் காய்கறிகளும் விளையக்கூடிய நிலமாக இருந்தாலும் —அங்கே கோதுமை, பார்லீ, திராட்சை போன்றவை இல்லாவிட்டாலும்— அவ்விளை பொருட்களுக்குரிய ஸகாத்தை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று அபூ ஹனீஃபா கூறினார்.
அபூ ஹனீஃபா இப்படிச் செயல்பட்டதால் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் “அவர் ஹதீஸ்களை நம்புவதை விட தன் சிந்தனையை அதிகமாக நம்புகிறார். விஷயங்களை வேறு பக்கம் திருப்புகிறார்” என்றுக் கூறினர். இப்படி அபூ ஹனீஃபாவின் சட்டப்பூர்வ கருத்துகளை மறுப்பவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அவருடைய நுட்பமான கருத்துகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய வரலாறு 11 / ஹனஃபி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)