இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 2)

இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப்  சேனலில்  உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 03-06-2008

YouTube Link:  Islamic History, Bahaism

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

கடந்த வகுப்புகளில், நம் பொது வரலாற்றிலுள்ள வெவ்வேறு அரசியல், கோட்பாட்டு ரீதியான இஜ்திஹாத்களின் சுவடுகளையும், அவை விட்டுச் சென்ற தடங்களையும் பின்தொடர்ந்து வந்தோம். முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாற்றில் இருந்த அரசியல் மற்றும் கருத்தியல் வளர்ச்சியை மதிப்பிடுவதில் நமக்குள்ளாகவே எவ்வாறு வேறுபட்டோம் என்றும் பார்த்தோம். பின்னர் அங்கிருந்து இஸ்லாத்தின் 2-ம் மற்றும் 3-ம் நூற்றாண்டுகளுக்கு நகர்ந்து, முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய கோட்பாட்டு அல்லது மெய்யியல் ரீதியான வேற்றுமைகளைப் பற்றி பார்த்தோம்.

இன்றைய வகுப்பில் முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய குறிப்பிட்ட இரு வகுப்பினரைப் பற்றி பார்த்தவர்களாக கோட்பாட்டு சிந்தனைப் பள்ளிகள் பற்றிய இத்தொடரை நிறைவு செய்ய உள்ளேன். இவ்விரு வகுப்பினரும் இஸ்லாத்தின் எல்லையை விட்டு வெளியேறியோர் ஆவர். அல் பஹாயியா அல்லது பஹாயிசம் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு ஈரானிலும், காதியானி எனப்படும் மற்றொன்று பாகிஸ்தானிலும் (அன்று இந்தியா) தோன்றியது.

குர்ஆன், இறைத்தூதர், இஸ்லாம் போன்றவற்றுக்கு இதுவரை அளிக்கப்பட்ட பல்வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் நாம் பார்த்தோம். அவற்றுள் சில, விளிம்புகளில் இருந்தாலும் அவை அனைத்துமே பொதுவான இஸ்லாமிய வட்டத்துக்குள் அடங்குகின்றன. ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் புதிய வகை பிறழ்வுகள், வரம்பு மீறியதாகவும் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறுவதாகவும் இருக்கின்றன. முதலில் பஹாயிகளைப் பற்றி பார்ப்போம்.

பஹாயிகள்

பஹாயி என்ற பெயரை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய ஆலயங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இங்கு வாஷிங்டன் டி.சி.யில் 16-ம் தெருவில் அவர்களுடைய ஒரு ஆலயம் இருக்கிறது. அங்குதான் நம் ஈரானிய சகோதரர்களின் அலுவலகமும் உள்ளது. ஈரானிய புரட்சிக்கு முன்பும், புரட்சியின் போதும், அதற்குப் பின்பும் அங்குதான் அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவர்.

சரி, பஹாயிகள் என்போர் யார்? முதலில், பஹாயி பிறழ்வு ஷியாக்களின் பன்னிருவர் (இஸ்னா அஷரி) வகையிலிருந்து தோன்றியது என்ற உண்மையைச் சொல்லியாக வேண்டும். இதன் பொருள் பன்னிருவர் வகையினர் ஏதோ ஒரு வகையில் பஹாயிகளை அங்கீகரிக்கிறார்கள் என்பதல்ல. பன்னிரு வகையினர் (இஸ்னா அஷரி) பஹாயிகளை அங்கீகரிக்கிறார்கள் என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

இந்த வெறுக்கத்தக்க கருத்தியலை தோற்றுவித்தவர் மிர்சா அலி முஹம்மது ஷீராஸி ஆவார். அவர் தெற்கு ஈரானில் உள்ள ஷீராஸ் நகரத்தில் ஹிஜ்ரி 1152-ம் ஆண்டு (கி.பி. 1820) பிறந்தார்.  சிறுவயதிலேயே பன்னிருவர் வகையினரின் கருத்துகளையும் சிந்தனைகளையும் ஆராயத் தொடங்கிய அவர் இஸ்மாயிலி வகை ஷியாக்களின் இலக்கியங்களையும் படித்தார். பின்னர் அவ்விரண்டுக்கும் நடுவில் புதிதாக ஒரு சிந்தனையை உருவாக்கினார். அத்தோடு அவதாரக் கோட்பாட்டையும் (ஹுலூல்) அதில் சேர்த்துக் கொண்டார். அதாவது தன்னுள் இறைவன் அவதரித்துள்ளதாகக் கூறி அதை பிரச்சாரமும் செய்தார்.

அவதாரக் கோட்பாடு

நாம் ஏற்கனவே சொன்ன ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றை கவனித்தவர்களுக்கு அவதாரக் கருத்து புதிதாக இருக்காது. மிகச் சொற்பமான மக்கள் கூட்டம், ‘இமாம் அலீயினுள் அல்லாஹ் அவதரித்தான்’ என்று நம்பினர் எனப் பார்த்தோம். ஆக அன்றும்தான் அக்கோட்பாடு இருந்தது. எனினும் அன்றைக்கும் இன்றைக்கும் இடையே ஒரு வேறுபாடு இருந்தது. அன்று முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ, பிரெஞ்சு காலனித்துவமோ அல்லது ரஷ்ய தேசிய அரசாங்கமோ மூக்கை நுழைக்கவில்லை. எனவே அன்று அக்கருத்து மடிந்து போனது. ஆனால் இப்போது இது சூடு பிடிக்கத் துவங்கியது.

இப்பிறழ்வை தோற்றுவித்த நபரை அருகில் சென்று ஆராய்ந்தால் அவர் சாதாரணமானவரோ போலி மதவாதியோ அல்ல என்பது புலப்படுகிறது. அறிஞரான அவர், பன்னிருவர் ஷியாக்களின் ஒரு கோட்பாட்டை வலியுறுத்தி தன்னுடைய கருத்தை பிரபலப்படுத்தி பிரச்சாரம் செய்ய முயன்றார். இவ்வகை ஷியாக்கள் தங்களுடைய 12-வது இமாம், இன்றைய ஈராக்கின் சமர்ரா நகரத்தில் காணாமல் மறைந்ததாக உளமார நம்புகின்றனர். அல் இமாம் அல் மஸ்தூர் அல்லது அல் இமாம் அல் ஃகாயிப் என்று அழைக்கப்படும் அந்த மறைவான இமாமை அடைவதற்கான நுழைவாயில் தான்தான் என்று மிர்சா அலி கூறினார். எனவே அவர் ‘அல் பாப்’ (நுழைவாயில்) என்று அழைக்கப்பட்டார். ஆக மிர்சா அலி, பன்னிருவர் ஷியாக்களுக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நம்பிக்கைக் கோட்பாட்டை பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக அவர்களுடைய நம்பிக்கை மற்றும் எண்ணங்களை ஒட்டியே தன் பிரச்சாரத்தை அமைத்தார்.

இதில் கவரப்பட்ட சிலர் அவரை பின்பற்றத் துவங்கினர். மேலும் அவரை ‘ஹுஜ்ஜா’வாகக் கருதினர். அதாவது அவர் பிரச்சாரம் செய்த விஷயங்களில் அவரை நிபுணராகக் கருதினர். மேலும் அவருடைய சொற்கள், செயல்கள் எல்லாமே மறைவான இமாமுடைய  எண்ணங்களுக்கு இணையாக இருப்பதாகக் கருதினர். அவரை கண்மூடி நம்பவும், கீழ்ப்படியவும் செய்தனர். அவர் கூறும் அனைத்தையும் கேள்வி கேட்காமல் அங்கீகரித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் அதிக காலம் பிடிக்காமல், துரிதகதியில் நிகழ்ந்தன.

மறைவான இமாமின் செய்திகளை அறியும் வாய்ப்பே பெறாத மக்களுக்கு, அவற்றை எடுத்துரைப்பதாக முதலில் அவர் கூறினார். பிறகு தானே மறைவான இமாமுக்கு இணையானவர் என்ற கருத்தை முன்வைத்தார். அடுத்து, சிலர் ஒரு படி மேலே சென்று அவரையே —ஹி.  முதல்— காணாமல் மறைந்த இமாம் என்று கூறிய போது, அவர் அதை ஆட்சேபிக்கவில்லை.

தன் பிரச்சாரம் சில மக்கள் மத்தியில் எடுபடுவதை உணர்ந்த அவர், அடுத்த கட்டத்துக்கு நகன்று அல்லாஹ் தன்னுள் அவதரித்துள்ளதாகக் கூறினார். இப்படியாக, அல்லாஹ் தன்னை, இவர் மூலம் வெளிப்படுத்துவதாக தன்னை நம்பியவர்களையும் தன் பின்பற்றாளர்களையும் நம்பச் செய்தார். இங்குதான் இது அனைத்திலும் அன்னியர்களின் தலையீடு இருப்பதை நாம் அவதானிக்கிறோம். மேலும் ஈசா (அலை) மீண்டும் தோன்றுவதற்கான வழிமுறை அல்லது பாதையாக தான் இருப்பதாகக் கூறினார். பிறகு அதில் மூசாவையும் (அலை) சேர்த்துக் கொண்டார். மூசாவும் மீண்டும் தோன்றுவார் என்றார்.

நிச்சயமாக இதற்கு எதிர்வினைகளும் இருக்கத்தான் செய்தன. இவருடைய கூற்றுகளும், கட்டுக்கதைகளும் சிலரை ஈர்த்த போதிலும், பல்வேறு சிந்தனா வழிகளைச் சார்ந்த அறிஞர்கள், வெவ்வேறு இஜ்திஹாத்களைச் சார்ந்தோர் என இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்த எல்லா அறிஞர்களும் சேர்ந்து இவரை எதிர்க்கத் துவங்கினர். மிர்சா அலியின் சமய அவமதிப்புக் கருத்துகளை ஆட்சேபித்தனர்.

இதற்குப் பதிலடியாக மிர்சா அலி, அறிஞர்களை நயவஞ்சகர்கள் என்று அழைத்தார். அவர்கள் உலக நலன்களில் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் அன்றைய அதிகார வர்க்கத்தின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார். அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ஒருவர் —அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக— இயல்பாகவே பிரபலமடைவார் என்று பார்த்தோம். இப்படியாக மிர்சா அலியும் பிரபலமடைந்தார். எனினும் அவரைப் பின்பற்றியோர் எத்தனை பேர் என்ற செய்தி எதையும் நான் பார்க்கவில்லை. ஊகத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகபட்சம் சில பத்தாயிரம் பேர் இருந்திருப்பர் என்று கணிக்கலாம். அன்றைய காலத்தில் அது கணிசமான எண்ணிக்கையே ஆகும்.

தனி மதம்

மிர்சா அலி இத்தோடு நிற்கவில்லை. இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் என்று சராசரி முஸ்லிம்கள் கருதும் சிலவற்றைக் குறித்தும் அவர் கருத்துரைத்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் பஹாயி மதம் என்று அழைக்கப்படப் போகும் ஒரு தனி “மதத்தின்” கொள்கைகளை அவர் உருவாக்குவதைப் பார்க்கிறோம். ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்த ‘அல் பாப்’ கொள்கை, அவருக்கு முன்னரும் இருந்தது.

பஹாயி மதத்தில் வெளிப்படையாகவே காணப்படும் பிறழ்வுகளில் ஒன்று அவர்கள் மறுமை வாழ்வை நம்புவதில்லை. நரக நெருப்பு, சுவன இன்பம், தீர்ப்பு நாளின் கேள்விக் கணக்கு போன்றவற்றை இவர்கள் நம்புவதில்லை. அவர்கள் இவற்றை மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் அடையாளங்கள் என்று புரிந்துகொள்கின்றனர். மற்ற முஸ்லிம்கள் நம்புவதைப் போல அவர்கள் இவற்றை நம்புவதில்லை. நம் காலத்தில் வாழும் யூத மதத்தின் ஒரு பிரிவினரும் இவ்வாறு மறுமை, சுவனம்-நரகம் போன்றவற்றை நம்பாமல் இருப்பது என் நினைவுக்கு வருகிறது.

அடுத்து, இதுவரை வந்த எல்லா இறைச்செய்தியாளர்கள் மற்றும் இறைத்தூதர்களின் பிரதிநிதி தான்தான் என்றார். யூத மதம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என வரலாற்றில் தோன்றிய முக்கிய மதங்கள் அனைத்தும் தன்னிடம் வந்து குவிந்து நிற்கின்றன என்றும் கூறினார். எனவேதான் பஹாயிகள் இம்மதங்களுக்கு இடையே எந்தப் பாகுபாட்டையும் காண்பதில்லை. இதுதான் இவர்களின் சமத்துவக் கொள்கை போலும்.

பஹாயிகள் அவதாரக் கோட்பாட்டை நம்புகின்றனர். மேலும் அவர்கள் அல்லாஹ் (ஸுப் அம்ம யகூலுன உலுவன் கபீரா) மிர்சா ஷிராஸியினுள் அவதரித்துள்ளதாக நம்புகின்றனர். இந்நபர் முஹம்மதிய தூதுத்துவத்தை அறுதியானதாகக் கருதவில்லை. அல்லாஹ் தன்னுள் அவதரித்துள்ளதாகக் கூறி அதையே பிரச்சாரமாக மேற்கொண்ட இவர், தனக்குப் பிறகு வேறொருவரிடம் அவன் அவதரிப்பான் என்றும் கூறினார். இவ்வாறு தான் இறைவனின் அவதாரம் என்று சொன்னதையும் தாண்டி, தனக்குப் பிறகு வருவோருக்காகவும் இத்தகைய சமய அவமதிப்புக் கருத்துக்களை பரப்புவதற்கான வாயிலை திறந்து வைத்தார்.

அரபி எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எண்கள் உண்டு. மிர்சா அலியின் சிந்தனை முழுவதையும் இந்த எண்கள் ஆட்கொண்டிருந்தன. அரபிச் சொற்களில், குர்ஆனிய வசனங்களில், அத்தியாயங்களில் இந்த எண்களின் மதிப்பு, தொகுப்பு, அவற்றின் கூட்டுத் தொகை ஆகியவற்றைக் கொண்டு அதிசய எண்களை உருவாக்கினார். இப்படியாக எண் 19-க்கு அவர் கிட்டத்தட்ட ஒரு புனிதத் தன்மையை கொடுத்தார். இந்த எண்ணை பஹாயிகள் மிக முக்கியமான எண்ணாகக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் தன் கூற்றுகளுக்கு இஸ்லாத்தின் பெயரால் நியாயம் கற்பிக்கத் துவங்கிய அவர், நாட்கள் செல்லச் செல்ல, இவர் செய்வது அனைத்தும் இஸ்லாத்துக்குப் புறம்பானது என்று சராசரி முஸ்லிமும் நினைக்கும் அளவுக்குச் சென்றார்.

நடைமுறை மாற்றங்கள்

கோட்பாடுகளைத் தாண்டி, அன்றாட வாழ்வில் மிர்சா அலி தன் பின்பற்றாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய நடைமுறைகளை பார்ப்போம். முதலில், ஆண்களும் பெண்களும் எல்லா விதத்திலும் முற்றிலும் சமமானவர்கள் என்றார். உரிமைகள், வாழ்க்கைப் பொறுப்புகள், அவர்களுக்கிடையே உள்ள சமூக உறவுகள் என எல்லாவற்றிலும் ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் கருதப்பட வேண்டும் என்று கூறினார். இது முஸ்லிம்கள் இதுவரை அறிந்து வைத்துள்ள நடைமுறைகளுக்குப் புறம்பானது. இதை இவர் மேலும் விளக்கிச் சொன்னார்.

ஆணும் பெண்ணும் சமம் என்று அவர் கருதியதால் குர்ஆனில் சொத்துரிமை (மீராஸ்) குறித்து வரும் வசனங்கள் செல்லாது என்றார். இந்தச் சட்டம், ஆணுக்கு பெண்ணைப் போல இருமடங்கு சொத்தை விதிப்பதால் இது தவறான வசனம் என்றார். அவரைப் பின்பற்றியோர் அவருடைய இந்தக் கருத்தையும் ஏற்றுக் கொண்டனர்.

ஆணும் பெண்ணும் எல்லா விதத்திலும் சமம் என்று சொன்னவர், அடுத்து எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றார். அதாவது மனிதர்களிடையே தேசிய இனம், கலாச்சாரம், உடல் ரீதியான இனம், சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் பாராட்டக் கூடாது என்றார். இவை அனைத்தும் எந்தப் பிரச்சனையும் இன்றி ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துகள்தான். ஆனால் இவற்றோடு சேர்த்து மக்களிடையே மதத்தின் பெயராலும் எந்த வேறுபாடும் பாராட்டக் கூடாது என்றார். இதன் பொருள் ஒரு யூதரும் கிறிஸ்துவரும் முஸ்லிமும் ஒன்றுதான் என்றாகிவிடும். இதை ஏற்றுக் கொள்வது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. மேலும் இவ்வாறு செய்வது இஸ்லாமிய சுயாதிகாரம், தனித்துவம் போன்றவற்றை விட்டுக் கொடுப்பதாகிவிடும்.

இக்கருத்துக்கள் அனைத்தையும், அவர் எழுதிய ‘அல் பயான்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். குர்ஆன், இஞ்ஜீல் மற்றும் தவ்ராத் போல இதுவும் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதம் என்று கூறி தன் மக்களை முட்டாள்களாக்கினார். பஹாயிகளின் ஆலயங்களில் இந்நூல் விற்பனை செய்யப்படுவதை நீங்கள் காண முடியும்.

மற்றொரு பக்கம் இவருக்கு எதிர்ப்பும் இருந்தது. அன்று இருந்த இஸ்லாமிய அறிவுசார் வட்டத்திலும், அரசு அமைப்பிலும் ஓரளவு இஸ்லாமிய நம்பகத்தன்மை இருந்தது. இவரது பேச்சைக் கேட்ட அறிஞர்களும், அரசு நிறுவனத்தைச் சார்ந்தவர்களும், ‘மத நிறுவனத்தைச்’ சார்ந்தவர்களும் இவருடைய சமய அவமதிப்புக் கருத்துக்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். எனவே அன்றைய ஈரானிய அரசாங்கம் 1850-ல் அவருக்கு மரண தண்டனை வழங்கி நிறைவேற்றியது. அப்போது அவருக்கு 30 வயதே ஆகியிருந்தது.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 07 / பஹாயி மற்றும் காதியானி பிறழ்வுகள் (பாகம் 2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *