இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 5) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

♦ ♦ ♦ ♦ ♦

மைமூனிய்யா

மைமூனிய்யா என்று அறியப்பட்ட மற்றொரு வகை கவாரிஜ்கள், குர்ஆனில் தடுக்கப்படவில்லை என்று காரணம் காட்டி பேரப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ளலாம் என்றனர். இதைத் தோற்றுவித்தவர் மைமூன் அல் அஜ்ரதி என்பவர். இருபக்கமும் உள்ள பேரப்பிள்ளைகளை (பனாத் அல் அவ்லாத்) மணம் முடிப்பது கூடும் என அவர்கள் கூறினர். அதாவது ஒரு பாட்டனார் உள்ளார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருப்பார்களெனில், அவர்களிருவரின் பேரப்பிள்ளைகளும் இவருக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்பதே இதன் கருத்து.

அத்தியாயம் நிஸாவில் ஹுர்ரிமத் அலைக்கும் உம்மஹாத்துக்கும் வ ஃகாலாத்துக்கும்…’ என வரும் வசனத்தில் பேரப்பிள்ளைகள் என்று குறிப்பிடப்படவில்லைதான். எனினும் குர்ஆன் இதை மேலோட்டமான அர்த்தத்தில் சொல்லவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு, இவ்வாறு மணமுடிப்பது அனுமதிக்கப்பட்டது என அவர்கள் பொருள் கொண்டனர். இறைவன் ‘ஃகாலா, ‘அம்மா’ எனச் சொல்லும்போது அதன் விரிந்த பொருளில் அவர்களின் பிள்ளைகளையும்தான் குறிப்பிடுகிறான். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?! ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இவ்வாறு மணமுடிப்பது தடுக்கப்பட்டது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் போது, இவர்கள் மட்டும் ‘நாங்கள் புதிதாக கண்டுபிடித்து விட்டோம்’ என்ற ரீதியில் பேசுகின்றனர். உண்மையில், அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை; மாறாக அவர்கள் அவ்வசனத்தின் உள்ளர்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது அவர்களிடம் உள்ள கோளாறு.

மேலும் மைமூனிய்யா வகை கவாரிஜ்கள், யூசுஃப் அத்தியாயம் திருக்குர்ஆனிலேயே இல்லை என்றனர். அதை ஒரு காதல் கதை என்றனர். சதா போர் செய்து கொண்டே இருந்த அவர்களின் மனநிலை யூசுஃப் அத்தியாயத்தை குர்ஆனோடு பொருத்திப் பார்ப்பதை அனுமதிக்கவில்லை. “யூசுஃப்! ஒரு இறைத்தூதர் ஃபிர்அவ்னின் அரசாங்கத்தில் பங்கு பெறுவதா?! இது குர்ஆனாக இருக்க முடியாது. நிச்சயமாக இது ஒரு காதல் கதைதான்” என்றனர்.

சதாவும் போரில் ஈடுபட்டிருந்த இவர்கள் ‘கஸ்ர் மற்றும் ஜம்வு’ தொழுகைகளை தங்கள் வாழ்வின் அங்கமாகவே ஆக்கிக் கொண்டனர். நான்கு ரக்ஆத்களுக்கு பதிலாக எப்போதும் அவர்கள் இரண்டு ரக்ஆத்கள்தான் தொழுவர். காரணம் கேட்டால், “நான்கு ரக்ஆத்கள் தொழ வேண்டுமெனில் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆனால் நாங்கள் வீட்டில் இருந்தாலும் பாதுகாப்பாக உணர்வதில்லை. என்றுமே தேடப்படுபவர்களாகவும் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருக்கிறோம். எனவே இரண்டு ரக்அத்கள்தான் தொழுவோம்” என்றனர்.

இவையனைத்தும் வினோதமாக உள்ளன. எனினும் நம் ஆரம்பகால துவக்கத்தின் ஒரு உண்மைப் பகுதிதான் இது. எனவே இவர்களை முஸ்லிம்கள் அல்ல என சொல்லப் போகிறீர்களா?

யஸீதிய்யா

கவாரிஜ்களின் வரிசையில் அடுத்து வருவது யஸீதிய்யா. நாம் என்னதான் திறந்த மனப்பான்மையுடன், எல்லோரையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம்களைக் கருதி, இயன்றவரை எல்லோரோடும் இணங்கிச் செல்ல முயன்றாலும் சிலர் தங்கள் கொள்கைகளில் ஒரு எல்லைக்குச் சென்று விடுகின்றனர். கவாரிஜ்களிலும் இவ்வாறு சிலர் இருந்தனர். அவர்களை ‘இஸ்லாமிய வட்டத்துக்குள்தான் இருக்கின்றனர்’ என தயக்கமின்றி கூற முடிவதில்லை —யஸீதிய்யாக்களைப் போல. இவர்களுக்கும் முஆவியாவின் மகன் யஸீதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யஸீத் இப்னு அபீ அனீஸா என்பவரின் காரணமாக இவர்கள் இப்பெயரைப் பெற்றனர்.

இவரையும் இவரைப் பின்பற்றியவர்களையும் பிற கவாரிஜ்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய ஒரு அம்சம் என்னவெனில், இவர் ‘அல்லாஹ் அரபு அல்லாத (அஜமி) மற்றொரு இறைத்தூதரை அனுப்புவான்; அவர் அரபு அல்லாதவர்களிடமிருந்து தோன்றுவார்; அவருக்கு புதிதாக ஒரு வேதம் வழங்கப்படும். மேலும் முஹம்மதிய ஷரியத் சட்டத்தை ரத்து செய்வார். மற்ற இறைத்தூதர்களுக்கு நடந்தது போலவே திருக்குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தொடர்பான அனைத்தும் அழிக்கப்படும்’ என்றார். நிச்சயமாக இவற்றை குர்ஆனோடும் இறைத்தூதரின் வாழ்வோடும் பொருத்த முடியாது.

கவாரிஜ்கள் மத்தியில் இருந்த ஒரு சில மட்டுமீறிய, வெறுப்புக்குரிய அம்சங்கள் இவை. இதன் பொருள், எல்லா கவாரிஜ்களும் இப்படி இருந்தார்கள் என்பதல்ல. இதை ‘சிறு எண்ணிக்கை கொண்ட, இப்போது இல்லாத ஓரிரு பிரிவுகள் இத்தகையை கொள்கைகளை ஒருகாலத்தில் கொண்டிருந்தன’ என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அவர்கள் சென்றுவிட்டார்கள். நாம் கூறிய புதிய இறைத்தூதர் வருவது, பேரப்பிள்ளைகளை திருமணம் செய்ய அனுமதிப்பது போன்ற கொள்கைகளை பிற கவாரிஜ்கள் கொண்டிருக்கவில்லை. இவை குறிப்பிட்ட இரு பிரிவுகளுக்கு மட்டுமே உரியது. அவர்கள் காலப்போக்கில் தேய்ந்து அழிந்து விட்டனர்.

எண்ணிக்கை

கவாரிஜ்களின் எண்ணிக்கை என்னவாக இருந்தது? அவர்கள் எப்படி மக்களை தம் பக்கம் ஈர்த்தனர் என்று பார்ப்போம்.

கவாரிஜ்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அஸாரிக்கா, நஜ்தாத் மற்றும் பிற எல்லா கவாரிஜ்களையும் சேர்த்துப் பார்த்தாலும் ஆரம்பத்தில் அவர்கள் குறைவாகவே இருந்தனர். இவர்களின் எண்ணிக்கையை கூறும் நூல் எதையும் நான் காணவில்லை. எனினும் யூசுஃப் அத்தியாயத்தைப் பற்றிப் பேசியவர்களை ஒரு 40 அல்லது 50 பேர் என்றும் அதேபோல் பேரப்பிள்ளைகளை மணமுடிக்க அனுமதித்தவர்களை ஏறக்குறைய 100 பேர் என்றும் கணிக்கலாம். நான் ஏற்கனவே சொன்னது போல ஹிஜ்ரி 66 இல் கவாரிஜ்கள் தம் உச்சத்தில் இருந்தனர். பஹ்ரைன், ஹல்ரமவுத், யெமன், தாயிஃப் பகுதிகளில் அதிகாரம் செலுத்தினர். அதன் பிறகு அவர்களிடம் எதுவும் இல்லை; தங்கள் கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு அவர்களிடம் ஒரு சமூகம் கூட இருக்கவில்லை.

1960-70களில் இருந்த கருஞ்சிறுத்தைகள் (Black Panthers) போன்ற தலைமறைவு குழுக்களோடு இவர்களை ஒப்பிடலாம். தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால், அவ்வப்போது பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகள் மற்றும் நாட்டுப்புற அரபிகள் மத்தியில் தோன்றி பிரச்சாரம் செய்வர். இதைவிடுத்து அவர்கள் நகரங்களில் தோன்றியதாக எந்த குறிப்பையும் நான் காணவில்லை. இமாம் அலீயோடு கருத்துவேறுபாடு கொண்ட போதிலும், அவர்கள் கூஃபா அல்லது பஸ்ரா போன்ற நகரங்களுக்குச் சென்று தங்கள் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. மாறாக தங்களுக்கென ஒரு தனிப் பகுதியை ஏற்படுத்திக் கொண்டு அங்கேயே பிரச்சாரம் செய்தனர்.

இன்று, அவர்களின் எண்ணிக்கையை நாம் ஊகித்தால் அதிகபட்சம் 40 அல்லது 50 இலட்சம் இருக்கக்கூடும். முஸ்லிம் உலகில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடப்பதில்லை. எனினும் அறிவார்ந்த ஊகத்தின் அடிப்படையில் இதை நாம் கூறுகிறோம். அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய இவர்கள் இன்று ஓமன் நாட்டில் மட்டுமே காணப்படுகின்றனர். இவர்கள்தான் நான் முன்னர் குறிப்பிட்ட ‘இபாதிய்யாக்கள்’. இது தவிர பிற பகுதிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் வட ஆப்பிரிக்கா —அதாவது அரேபிய அல்ஜீரியா, மொராக்கோ, துனீசியா, லிபியா மற்றும் ஸன்ஜிபார் (இன்றைய தான்ஸானியாவின் ஒரு பகுதி)— பகுதிகளில் இவர்களைக் காணலாம்.

கவாரிஜ்கள் குறித்து இமாம் அலீ

இஸ்லாத்தில் இத்தகைய கவாரிஜ்கள் உருவாகத் துவங்கியபோது, இமாம் அலீ இவர்களை குறித்து கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொலை செய்யும் எண்ணத்தோடு தன்னை கத்தியால் குத்தியது இவர்களுள் ஒருவர் என்று அறிந்த அவர் இவ்வாறு கூறினார்:  “சத்தியத்தைத் தேடி அதை அடையும் முயற்சியில் வழிபிறழ்ந்தவர்களையும் அசத்தியத்தைத் தேடி அதை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்களையும் நாம் சமமாகப் பார்க்க முடியாது (லைச மன் தலபல் ஹக்க ஃப ஃகாதபஹு கமன் தலப அல்பாதிலஹு ஃப நாலஹூ)”.

இதன் பொருள் என்னவெனில் கவாரிஜ்களாகிய முதல் வகையினரையும், உமைய்யாக்கள் மற்றும் இப்போரில் இமாம் அலீக்கு எதிராக இருந்த பிறரையும் உள்ளடக்கிய இரண்டாம் வகையினரையும் நாம் சமமாகப் பார்க்க முடியாது. அக்காலத்தில் தோன்றியவர்கள், இப்போது தோன்றியுள்ளவர்கள், மேலும் இவர்கள் எப்போதெல்லாம் முளைப்பார்களோ அப்போதெல்லாம் இத்தகையவர்களை இக்கூற்றின் அடிப்படையில்தான் நாம் பார்க்க வேண்டும் எனக் கருதுகிறேன்.  தீவிரவாதம் தலைதூக்கும் இன்றைய காலத்திலும், அது தலைதூக்கும் பகுதிகளிலும் இதுதான் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இருக்க வேண்டும். நாம் படிக்கும் வரலாறு மீண்டும் நிகழாது என்று நினைத்து விடாதீர்கள். நம்மைச் சுற்றி நம் கண் முன்னே இப்போது இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் படித்துக் கொண்டிருப்பது நம் வரலாறை மட்டும் அல்ல; நம் நடப்பு நிகழ்வுகளையும்தான்.

இமாம் அலீ இவர்கள் குறித்து ஒரு விசாலமான பார்வையை கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம். தன்னைத் தாக்கியவர் ஒரு கவாரிஜ் என்பதை அறிந்தும் அக்குற்றத்தை அவர் பொதுப்படுத்தவில்லை. இதிலிருந்து இமாம் அலீயின் மேன்மையை நாம் உணர முடிகிறது. அசத்தியத்தை நாடி அதை அடைந்துவிட்டவர்கள் —உமைய்யாக்கள்— இருக்கையில், இவர்களை எதிர்கொள்ளும் முக்கியப் பணியை உணர்ந்து, கவாரிஜ்கள் மீது பிற முஸ்லிம்கள் பொத்தாம்பொதுவான தாக்குதல் நடத்துவதை அவர் தடுத்தார். அவர் மரணதருவாயில் கூட பிரதான எதிரிக்கெதிரான தன் கவனத்தைச் சிதற விடவில்லை. ஆகச்சிறந்த ஆளுமைகளுக்கும் இது மிக அரிதாகவே சாத்தியப்படும். எனினும் இமாம் அலீ தனிச்சிறப்பு வாய்ந்தவராயிற்றே.

இறுதியாக, இவ்வரலாறுகளைப் பார்க்கையில் இத்தகைய ‘ஷிஆ’, ‘சன்னி’, ‘கவாரிஜ்’ போன்ற வகைப்படுத்தல் அரசியல் ரீதியாக ஏற்பட்டவை என்பது தெளிவாகிறது. இவை தோன்றிய அக்காலத்துக்குச் சென்று பார்த்தால், எப்படி தலைவரை தேர்ந்தெடுப்பது அல்லது எதன் அடிப்படையில் முடிவெடுப்பது போன்ற கேள்விகள்தான் முன்னிலையில் இருந்தன. இன்று போல மக்கள் தொழும் முறைகளைக் கொண்டோ அல்லது அவர்களுடைய பிற சடங்குமுறைகளைக் கொண்டோ அன்று முஸ்லிம்களை பிரித்து அறிந்திருக்க முடியாது. அன்று வெவ்வேறு முறைகளில் தொழும் மக்கள் எல்லா ‘பிரிவு’களிலும் காணப்பட்டனர்.

காலப்போக்கில் இந்த அரசியல் வரையறுக்கப்பட்ட பின்னர், சடங்குகள் அதில் பொருந்திக் கொண்டன. அதன் பிறகு முஸ்லிம்களை அவர்களின் தொழுகை முறைகளைக் கொண்டு அடையாளம் காணும் போக்கு ஏற்பட்டது. அன்று அது தொழுகைக்கான வெவ்வேறு முறைகள் என்றே அறியப்பட்டன. இன்று போல அதுவே ஒரு பிரிவினையாகப் பார்க்கப்படவில்லை. இரண்டுக்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *