இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும் – றவூப் ஸெய்ன்
Posted onமனிதகுலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் கடமையை
இலக்கியம் மட்டுமே வெளிப்படுத்த முடியுமா?
நெருக்கடியான காலங்களில்
மனிதப் பேரழிவுகளின் இடையே
எழுத்தாளன் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரம் என்ன?
எழுத்தைத் தவிர வேறு வடிவங்களிலும்
தனது தார்மீகப் பாத்திரத்தை அவன் தேடுகின்றான் .
அவனது பாத்திரம் அவனது
இலக்கிய நேர்மையை உறுதி செய்கின்றது.
உயர்ந்த விழுமியங்களை நோக்கி
மனித இனத்தை அழைக்கின்றது.
சுதந்திரம்தான் அந்த விழுமியங்களில் உன்னதமானது.
எழுத்தாளர்கள் வார்த்தைகளை வளைப்பதில் வல்லவர்கள்
இருப்பினும் இரத்தம் பெருகும் மண்ணில்
சொற்பெருக்கு எதற்கு?
அணியலங்காரங்கள் எதற்கு?
எங்கள் சொற்கள் எளிமையானவை
எமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் போல.
– மஃமூத் தர்விஷ் (பலஸ்தீனக் கவி)
தர்விஷ் கூறுவது போன்று நெருக்கடியான காலங்களில், பேரழிவுகள் மனித இனத்தையே காயப்படுத்தும் கணங்களில் எழுத்தாளன் வகிக்கும் பங்கு எத்தகையது என்பது முக்கிய வினாவாகிறது. எழுத்து மிகவும் பலமானது என்பது எவ்வளவு பெரிய உண்மையோ அதனால் நாம் விரும்பிய அரசியலை வாழவைக்க முடியும் என்பதும் ஒரு பெரிய உண்மை. இங்குதான் வெளிப்படைத் தன்மையும் அரசியல் தூய்மையும் நமக்குத் தேவைப்படுகின்றன. நமது மனப்பரப்பின் அடியாழத்தில் புதையுண்டு கிடக்கும் இலட்சிய ஊற்றுகளின் கசிவு நமது பேனா முனைகளை உலுக்கும் போது எழுத்து சூல் கொள்கிறது. நமது சுதந்திர வேட்கையும் இலட்சியத் தாகமும் மட்டுமின்றி நமது புறச் சூழலில் மேலெழுந்து நம்மைப் பலமாகத் தாக்கும் அதிர்வுகளும் பல உதிர்வுகளை உண்டு பண்ணுகின்றன. அவற்றுள் எழுத்தே மிகவும் வலிமையானது. இதனால் எழுத்து என்பது வார்த்தைகளின் வளைவு சுழிவும் மொழியின் முறிவும் உடைவும் என்பதைக் கடந்து ஏதோவொரு இலக்கை நோக்கி நீட்சி பெறுகின்றது. அது வகிக்கும் பங்கு பல்வேறு தளங்களில் மெல்லியதாய் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
சிலபோது மௌனங்களின் உடைவாகவும் பின்னடைவுகளின் மரணமாகவும் அது உயிர்த்தெழுகிறது. நமது கண்ணில் மிதக்கும் கனவுகளையும் நெஞ்சில் நிறையும் இலட்சியங்களையும் அது பிரதிபலிக்கின்றது. ஒடுங்கியும் ஒடுக்கப்பட்டும் அடங்கியும் அடக்கப்பட்டும் வாழும் மனித குலத்தின் மன்றாட்டங்களைக் கூட அது பிரதி செய்கிறது. சுரண்டல், சர்வாதிகாரத்தைக் காணும்போதும் நமது அகவெளியில் கொப்பளித்துக் கொண்டு வெளியே பாயும் கோபக் கனல்களாகவும் சிலவேளை அது வெளிப்படுகின்றது. இவ்வகையில் எழுத்து வரலாற்றின் இயங்கு திசையை மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்ட ஆயுதம் என்பதில் நாம் நகர்த்த முடியாத நம்பிக்கை கொள்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில் எழுத்தின் மூலமும் இயங்கியலும் இப்படித்தான் நகழ்கின்றது என உறுதியாக நம்புகின்றேன். இந்தப் பின்னணியிலேயே எழுதி வருகின்றேன். 9/11 இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகும் என்ற இந்நூலும் அத்தகைய ஒரு எழுத்தியக்கத்தைப் பிரதிபலிக்கும் எனக் கருதுகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வீறுகொண்ட இஸ்லாமிய எழுச்சி அதன் இறுதி எல்லைகளைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அது முகங்கொடுத்து வருகின்றது. இஸ்லாமிய ஆட்சி (கிலாபத்) என்ற அதன் உச்ச இலக்கை எட்டுகின்ற பாதையில் மூன்று முக்கியமான காரணிகள் தடையாக உள்ளன. இஸ்லாமிய சக்தியைக் கண்டு அஞ்சும் மேற்குலகம் அவற்றுள் முதலாவது காரணி. முஸ்லிம் உலகின் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் தேசியவாத கொடுங் கோலர்கள் இரண்டாவது காரணி எனலாம். தென்மேற்கு ஆசியாவின் ஆட்சியில் நீண்டகாலமாகவே நிலைத்திருக்கும் தலையாட்டி பொம்மைகள் மூன்றாவது காரணியாக உள்ளனர்.
உண்மையில் செப்.11 சமகால சர்வதேச அரசியலின் போக்குகளை மாற்றிவிட்டதாகக் கற்பிதம் செய்யப்படும் கட்டுக்கதை நம்மில் பலரைத் தவறான பார்வைக்கு இட்டுச் சென்றுள்ளது. நிகழ்வுகளை மேலோட்டமாகவும் சில்லறைத்தனமாகவும் விளங்க முயன்றவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மீது மேற்கொள்ளப்படும் மேற்குலகின் இராணுவத் தாக்குதல்களைக் கண்டு விரக்திப்பட்டு நிற்கின்றனர். இந்த எதிரும் புதிருமான இரண்டக நிலையிலிருந்து சரியான புரிதலுக்கு வரவேண்டிய தேவை வலுக்கின்றது. இவ்வகையில் கிலாஃபத்தின் பூமியை விட்டும் வெகு தொலைவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் சமகால முஸ்லிம் உலகு முகங்கொடுக்கும் இந்நெருக்கடிகளை எவ்வாறு நோக்குகின்றனர் எவ்வாறு நோக்க வேண்டும் என்பது தொடர்பான சில கவன ஈர்ப்புகளையும் ஆய்வுக் குறிப்புகளையும் இந்நூல் முன்வைக்க முனைகிறது. குறிப்பாக மேற்குலகு கையாண்டு வரும் இராணுவ நிடவடிக்கைகளின் பின்னணி அரசியலைப் புரிந்துகொள்வதற்கான ஓர் எளிய பாதையை இந்நூல் வரைந்து காட்ட முயல்கின்றது.
நிறையவே எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. எனினும் பாலைவனத் தூறல் போல் எதிர்பாராத விதமாய் ஒரு புத்தகக் கனவு நினவாகின்றது. வாழ்வில் மரம் வளர்க்க வேண்டும்; மணம் முடிக்க வேண்டும்; புத்தகம் எழுதவேண்டும் இவை மூன்றும் ஒரு மனிதனின் சராசரிச் சாதனைகள் என்று ஒரு நண்பர் அடிக்கடி என்னிடம் கூறுவார். மரம் வளர்க்கலாம்; மணமும் முடிக்கலாம்; ஆனால் புத்தகம் வெளியிடுதல் என்பது அவ்வளவுக்கு எளிதானது அல்ல. ஒரு புத்தக வெளியீட்டுப் பாதையில் ஏகப்பட்ட நெருக்கடிகள் நம்மைக் குறுக்கிடுகின்றன. நிதிப் பிரச்சினை என்பது ஓர் எழுத்தாளனை எப்பொழுதும் நிழல் போல் தொடரும் ஒரு பெரும் இடையூறு. அதிலும் நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் அனைத்து வகை அரசியலுக்கும் அப்பாற்பட்டு சுதந்திரமாக எழுவது என்பது மிகவும் கடினமானது.
பெண்ணாக இல்லாமலே பெரும் பிரசவ வேதனையை உணர்ந்த அனுபவம் இம்முயற்சியில் எனக்குக் கிடைத்தது. எனினும் இடையறாத தேடலும் ஆய்வு முயற்சியும் தரும் மன ஆறுதல் எல்லாவற்றையும் விட உயர்ந்து நிற்கிறது. நூல் வெளியீடு என்பது ஒரு சுகப் பிரசவம். நெல்லிக்கனி உண்ணும் அனுபவம். மரங்களை நடுதல், மணம் முடித்தல் என்பவற்றுக்கு அப்பால் நமது வாசிப்பும் கருத்துகளும் பார்வையும் மக்களைச் சென்றடைவதில் உள்ள ஆத்ம திருப்தியே எல்லாவற்றிலும் மேலோங்கி நற்கிறது. இந்நூல் வெற்றிகரமாக வெளிவருவதற்குத் துணைநின்ற அனைவரையும் நிறைந்த நெஞ்சுடன் நினைவு கூர்கின்றேன்.
– றவூப் ஸெய்ன்