ஹஜ் – நாஸிர் குஸ்ரோ
Posted on(கவிஞர் நாஸிர் குஸ்ரோ (ஹி. 394-481) எழுதிய பாரசீகக் கவிதையின் உரைநடை மொழிபெயர்ப்பு)
யாத்ரிகர்கள் மாபெரும் பாக்கியம் பெற்றோராக, தனிப்பெரும் கருணையாளனான அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அறஃபாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் வழிநெடுக உணர்ச்சிப் பெருக்குடன் “லப்பைக்” என்று மீட்டி மீட்டி முழங்கிச் சென்றனர்.
ஹிஜாஸ் பாலைவனத்தின் கஷ்டங்களை அனுபவித்து சோர்வுற்ற போது, நெருப்பிலிருந்தும் வேதனையிலிருந்தும் தப்பினோம் என்று நெஞ்சம் குதூகலித்தனர்.
இப்போது ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு, உம்றாவை பூர்த்தி செய்துவிட்டு, பாதுகாப்பாக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
பொதுவாக எனது வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வழக்கமல்ல என்ற போதிலும், நான் அவர்களை வரவேற்கச் சென்றேன்.
காரணம், அந்த பயணக் கூட்டத்தில் எனக்கு நெருங்கியவோர் உண்மை நண்பர் இருந்தார்.
இந்த கடினமான, அபாயம் நிறைந்த பயணத்தை எப்படிச் செய்து முடித்தீர் என்று நான் அவரிடம் வினவினேன்.
அவர் என்னை தனியே விட்டுச் சென்றதிலிருந்து நான் அடைந்த மனவருத்தத்தையும் துயரத்தையும் அவரிடம் கூறினேன்.
“நீர் ஹஜ்ஜை நிறைவேற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எமதூரில் நீர் தான் ஒரே அல்-ஹாஜ்.”
“இனி சொல்லும், எப்படி ஹஜ் செய்தீர்? புனித பூமிக்கு எப்படி மரியாதை செய்தீர்?”
“ஆடை களைந்து இஹ்றாம் அணியும் வேளையில், பரவசம் நிறைந்த அந்த கணப்பொழுதில் நீர் வைத்த நிய்யத் என்ன?”
“தவிர்க்க வேண்டிய யாவற்றையும் விட்டு தவிர்ந்து கொண்டீரா? எல்லாம் வல்ல இறைவனுக்கு விருப்பமில்லாத தாழ்ந்தவை யாவற்றையும் விட்டு தவிர்ந்து கொண்டீரா?” என்று அவரிடம் கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“பூரணமாக அறிந்த நிலையில், மகத்தான மதிப்பச்சத்துடன் “லப்பைக்க” என்று சொன்னீரா? அல்லாஹ்வின் கட்டளையை செவியேற்றீரா? இப்ராஹீமை போல் கீழ்ப்படிந்தீரா?” என்று அவரிடம் கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“அறஃபாவில் அல்லாஹ்வுக்கு அருகே நிற்கும்போது, அவனை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததா? அவ்வறிவை சற்றேனும் பெற வேண்டுமென்ற ஆர்வம் மிகைக்கவில்லையா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“கஅபாவில் நுழையும்போது கஹ்ஃபு மற்றும் ரகீம் (குகை மற்றும் சாசன) மக்கள் செய்தது போல் தன்னல மறுப்பை மேற்கொள்ளவில்லையா? மறுமையின் தண்டனைக்கு அஞ்சினீரா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“சிலைகளின் மீது கல்லெறியும் போது அவற்றை தீமை என்று கருதினீரா? அதன் பிறகு தீய செயல்கள் அனைத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீரா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“ஏழைக்கு அல்லது அநாதைக்கு உணவளிக்கும் பொருட்டு குர்பான் கொடுத்தபோது முதலில் அல்லாஹ்வை நினைத்தீரா? பின்பு சுயநலத்தை அறுத்துப் பலியிட்டீரா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“இப்ராஹீமின் இடத்தில் நின்றபோது உண்மையுள்ளத்துடனும் வலிமையான இறைநம்பிக்கையுடனும் பூரணமாக அல்லாஹ்வை மட்டுமே ஆதரவு வைத்தீரா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“வலம் வந்தபோது, கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்தபோது வானவர்கள் யாவரும் இவ்வுலகை சதாசர்வ காலமும் வலம் வந்துகொண்டுள்ளது ஞாபகம் வந்ததா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“சஈயின் போது, ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையில் ஓடியபோது தூய்மையுற்றுப் புனிதமடைந்தீரா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“இப்போது மக்காவிலிருந்து திரும்பிவிட்ட நிலையில், கஅபாவை எண்ணி ஏங்குகின்ற நிலையில், உம்முடைய ‘சுயத்தை’ அங்கேயே புதைத்துவிட்டு வந்தீரா? அங்கேயே திரும்பிப் போய்விட வேண்டுமென்ற ஆவல் மீறுகிறதா?” என்று கேட்டேன்.
அவர் “இல்லை!” என்றார்.
“இதுவரை நீர் கேட்ட எதுவுமே எனக்குப் புரியவில்லை” என்றார் அவர்.
அதற்கு நான் சொன்னேன்,
“நண்பரே, நீர் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை.”
“நீர் அல்லாஹ்வுக்கு முற்றாக கீழ்ப்படியவுமில்லை.”
“மக்காவுக்குப் போய் கஅபாவை தரிசித்து வந்துள்ளீர்.”
“காசை செலவழித்து நீர் வாங்கிக் கொண்டது பாலைவன கஷ்ட அனுபவங்களை மட்டும்தான்!”
“நீர் மீண்டும் ஹஜ் செய்வதாக தீர்மானித்தால், இதுகாறும் நான் அறிவுறுத்திய படி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீராக!”
♦ ♦ ♦ ♦ ♦