இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 5) இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)
♦ ♦ ♦ ♦ ♦
ஆகத்தகுதியானவர் ஏன் பதவி ஏற்க முடியவில்லை?
இமாம் அலீயின் தகுதிகள் குறித்து யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது. இறைத்தூதரே அவரை சிறப்பித்து கூறிய கூற்றுகள் ஏராளமாக உள்ளன. அது மற்ற எல்லோரையும் விஞ்சி நிற்கிறது. இதுபற்றி வெள்ளிக்கிழமை உரைகளில் மிக விரிவாக பேசியுள்ளேன். முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு இமாம் அலீதான் ஆகத் தகுதியானவர் என்றும் அபூ பக்கரும் உமரும் இதே கருத்தை கொண்டிருந்தார்கள் என்றும் பார்த்தோம். அப்படியெனில் மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் கட்டுப்படுத்தவும் இமாம் அலீ தகுதி பெற்றிருப்பார் தானே. அவ்வாறு இருக்கையில் அபூ பக்கரும் உமரும் ஏன் முதலில் பதவி ஏற்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.
அபூ பக்கரும் உமரும் இமாம் அலீக்கு உரிய தலைமைப் பதவியை பறித்து அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு இமாம் அலீதான் ஆகத் தகுதியானவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால் —கொஞ்சம் மிகைப்படுத்திக் கூறினால்— அவர் வழிநடத்துவதற்கு ஏற்ற முஸ்லிம்கள்தான் இல்லாமல் போய்விட்டனர். இறைத்தூதரின் இறப்பிற்குப் பிறகு இமாம் அலீ தலைமைப் பதவியை ஏற்றிருந்தால் உண்மையான முஹாஜிர்களையும் அன்சார்களையும் சீராக வழிநடத்தியிருப்பார்தான். மதீனாவில் கிளம்பும் எதிர்ப்பை வீரத்தோடு சிலகாலம் சமாளித்திருப்பார்தான். எனினும் நாளடைவில், அவருக்கு எதிராக இருந்த பொதுக்கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கும். ஏனெனில் இப்போது அதிகாரம் ஒரு குடும்பத்தின் தனிச்சிறப்பாக மாறிவிட்டது.
சமீபத்தில் முஸ்லிம்களாக மாறிய அம்மக்களிடம் இதுகுறித்து விளக்கியிருக்க முடியாது. அவர்கள் இதை புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் இஸ்லாத்தை ஏற்று ஒரு நூறு ஆண்டுகள் ஆகியிருந்து, தங்கள் விசால மனப்பான்மையை வளர்த்தெடுத்து பண்பட்டிருந்தால், அப்போது அவர்கள் இதை விளங்கியிருக்கக் கூடும். மேலும் அன்றைய சமூகம் பின்தங்கிய சமூகமாக இருந்தது. தேள்களையும், புழுப் பூச்சிகளையும், ஒட்டகத்தின் ரோமத்தையும் உணவாக உண்டு கொண்டிருந்த சமூகம் அது. இவ்விஷயங்களின் ஆழத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அம்மக்கள் பெற்றிருக்கவில்லை.
இமாம் அலீயின் தகுதிகள் குறித்தோ அவரது பண்புகள் குறித்தோ அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களின் அக்கறையெல்லாம் அவர் எந்த கோத்திரம், எந்த குடும்பத்திலிருந்து வருகிறார் என்பதில்தான் இருந்தது. அவர்களை பொருத்தவரை, எந்த அளவிற்கு அதிகாரம் பரவலாக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நீதி நிலைநாட்டப்படுகிறது என்று பொருள். ‘அதிகாரம் குடும்பச் சொத்தாக மாறிவிட்டால் அதை எதிர்ப்போம். நீதியான இறைவன், அதிகாரத்தை ஒரு குடும்பச் சொத்தாக இருப்பதை அனுமதிக்கமாட்டான்’ போன்ற கருத்துக்களையே அவர்கள் கொண்டிருந்தனர்.
அன்று மட்டும் இமாம் அலீ பதவி ஏற்றிருந்தால் அதற்கான எதிர்வினை மிகக் கடுமையாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அன்று இமாம் அலீயை ஆதரித்த அன்சார்கள் சில நூறு பேர் இருந்திருப்பர். முஹாஜிர்கள் சில ஆயிரம் இருந்திருக்கக் கூடும். மற்ற முஸ்லிம்கள் ஓரிரு லட்சம் பேர் இருந்திருப்பர் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு போர்ப்படையை நிறுவி இமாம் அலீயை எதிர்த்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். கர்பலாவுக்கு முன்னரே இவர்கள் அனைவரும் கொல்லப் பட்டிருப்பர். இவ்வாறு நடக்காமல் போனது இறைவனின் அருள் என்றே நான் சொல்வேன். நிலைமை அந்த அளவுக்கு உக்கிரமாக இருந்தது. இமாம் அலீ பதவி ஏற்ற போது அவருக்கு எதிராக ஒன்று திரண்ட கூட்டம், சில ஆண்டுகளுக்கு முன்னர் கூடியிருந்தால் அவர்களுடைய பழியுணர்வு இன்னும் மூர்க்கமாகவும் உக்கிரமாகவும் இருந்திருக்கும். அபூ பக்கர், உமர் மற்றும் உஸ்மானின் பதவி காலம் அவ்வுணர்வை சில காலம் ஆறப்போட உதவியது. அது மட்டும் இல்லாமலிருந்தால் நிலைமை மிக மோசமாகி இருக்கும். அபூ சுஃப்யானின் வஞ்சகம் நிறைந்த சொற்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.
இதை உணர்ந்த அபூ பக்கரும் உமரும் இந்நிகழ்வுகளை சில காலம் தள்ளிப்போடலாம் என எண்ணினர். இமாம் அலீயோடு சேர்ந்து அவர்களும் வீழ்ந்து போக விரும்பவில்லை. இதை அவர்கள் பெருமளவிற்கு சரியாகவே கணித்தனர் என்று நான் கூறுவேன். காத்திருக்கும் எதிர்ப்பை முன்னறிந்து அதை தாமதப்படுத்தவாவது அவர்கள் நினைத்தனர் போலும்.
மேலும் உமைய்யாக்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் ஆகியோரைவிட இமாம் அலீயை அதிகம் வெறுத்தனர். ஏனெனில் குறைஷிகளிலிருந்து கிளம்பிய இறைத்தூதரின் எதிரிகளை போர்களில் அதிகமாகக் கொன்றது இமாம் அலீதான். இதை மனதில் வைத்துத்தான் உமைய்யாக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதை உணர்ந்துதான் உமர் தன் மரண தருவாயில் கூட இது குறித்து அறிவுரை செய்தார். குடும்பத்தினருக்கு பதவி பொறுப்புகள் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் உஸ்மான் பதவி ஏற்றவுடன் அபூ சுஃப்யான், அல் ஹகம், இப்னு அபி சுர்ஹா, இப்னு ஆமிர், முஆவியா போன்றோர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இங்குதான் நிலைமை கைமீறி போனது.
இறைத்தூதரின் கருத்து
மற்ற எல்லோரையும் விட இறைத்தூதர் அறிவு ஞானம் மிக்கவர். நிகழப்போகும் சம்பவங்கள், நடக்கப் போகும் உட்சண்டைகள் பற்றி எந்த அளவுக்கு அவர் முன்னறிந்திருப்பார்?
தனக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிய ஒரு உள்ளுணர்வு அவருக்கு ஓரளவு இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனினும் எந்த தினத்தில் எந்த இடத்தில் என்ன நிகழும் போன்ற துல்லியமான விவரங்களை அறிந்திருந்தாரா என்பதை நான் அறியேன். ஆனால் தன் சமூகம் எப்படிப்பட்டது என்பது குறித்து ஒரு பொதுவான கருத்தை அவர் கொண்டிருந்தார். எப்படிப்பட்ட மக்களை அவர் வழிநடத்துகிறார் என்பதை அவர் அறிந்தே இருந்தார். இன்னும் சொல்லப் போனால், பிற்காலத்தில் வரலாற்றில் தடம் பதித்த இத்தகைய மக்களின் பண்புகளால் அவரே நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தார்.
ஒருமுறை ஒரு நபர் இறைத்தூதரிடம் வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெருக்கி அவரை உலுக்குகினார். பின்னர், “நீதமாக நடந்து கொள்ளும் முஹம்மத், நீதமாக நடந்து கொள்ளும்” என்றார். பள்ளிவாசலில் அனைவர் முன்னிலையிலும் இது நிகழ்ந்தது. அவர்கள் அவரை கட்டுப்படுத்த முயற்சித்தனர்; “நீர் யார்? என்ன செய்கிறீர் என்று தெரிந்துதான் செய்கிறீரா?” எனக் கேட்டனர். அவர், “நீர் செல்வத்தை நீதமான முறையில் பங்கிடவில்லை என நான் சந்தேகம் கொள்கிறேன்”, என பதிலளித்தார். இதைக் கேட்ட இறைத்தூதர், முதலில் அங்கிருந்த மக்களை சமாதானம் செய்தார். பின்னர் “நான் நீதமாக நடக்கவில்லை என்றால் வேறு யார்தான் நீதமாக நடக்கிறார் என்று நீர் கருதுகிறீர்?” என அவரிடம் கேட்டார். அந்த மக்கள் எளிதில் பற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட, ஒருநிலையற்ற மக்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்தவில்லையா?
மற்றொருமுறை, பள்ளிவாசலுக்குள் இறைத்தூதர் அமர்ந்திருந்த போது ஒருவர் உள்ளே வந்து அனைவர் முன்னிலையிலும் சிறுநீர் கழித்தார்! பள்ளிவாசல் நடுவில். மக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். எனினும் இறைத்தூதர் அவர்களை சமாதானம் செய்து, “அவரை விட்டுவிடுங்கள். ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றிவிடுங்கள்” என்றார். இப்படியாக அம்மக்களின் தன்மையை அவர் உணர்ந்திருந்தார்.
இப்போது கேள்வி என்னவென்றால், ‘இம்மக்களின் தன்மையை உணர்ந்த இறைத்தூதர் சுமூகமான ஆட்சி மாற்றம் நிகழும் வண்ணம் ஒரு முறைமையை நிறுவியிருக்கக் கூடாதா?’ இதற்கான பதில், ‘அவர் அதைத்தான் செய்ய முயன்றார்’ என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மக்களின் பண்புகளை அறிந்த அவர், ‘எனக்குப் பிறகு இமாம் அலீ தலைமைப் பொறுப்பை ஏற்பார்’ என்று வெளிப்படையாக சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சொல்லியிருந்தால் —ஏற்கனவே வெளியிலிருந்து பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த இறைத்தூதர்— இவர்களிடமிருந்தும் எதிர்ப்பை சந்தித்திருப்பார்.
அப்போது முளர், தமீம், அத்னானிய்யா, கஹ்தானிய்யா போன்ற அரேபிய கோத்திரங்களிடமிருந்து மட்டுமின்றி அரேபியாவுக்கு வெளியிலிருந்து வந்த எதிர்ப்பையும் இறைத்தூதர் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே எதிர்நோக்கியிருக்கும் எதிர்ப்பை கட்டுப்படுத்தி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இமாம் அலீ குறித்து பேசியபோதெல்லாம் அவரது தலைமை குறித்த கருத்தை மக்கள் மத்தியில் விதைத்தார். இந்த விதை தக்க சமயத்தில் வளர்ந்து, தனக்குப்பின் மக்கள் ஆகத்தகுதியானவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பினார். இதுதான் அவருக்கு நடைமுறை சாத்தியமாக இருந்தது. தக்கசமயம் வரும்போது மக்கள் ‘இமாம் அலீ இறைத்தூதரின் உறவினர் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவர் தகுதியுடையவர் எனில் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்க வேண்டும்’ என்று கூறுவர் என்று நம்பினார். ஆனால் தக்க சமயத்தில் அவ்விதைகள் முளைக்கவில்லை.
தக்க சமயத்தில் என்ன! இன்றும் கூட அவை முளைக்கவில்லை. அவ்விதைகள் உறுதியான கற்பாறைகளில் விதைக்கப்பட்டுவிட்டன போலும். 1400 வருடங்களுக்கு முன் இறைத்தூதர், அம்மக்களுக்கு கல்வி புகட்டி, நன்மை செய்ய வலியுறுத்தி அவர்களின் பொறுப்புணர்வை உயர்த்த முயற்சித்தார் என்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். இன்றும் கூட இவற்றை சரியான கோணத்தில் நாம் பார்க்கத் தவறிவிட்டோமே. உங்களைச் சுற்றிப் பாருங்கள். எத்தனை பேர் இந்த வரலாறுகளின் மீது சரியாக கவனம் குவித்து அதிலிருந்து பாடம் படிக்க முயற்சிக்கிறார்கள்?
சில முஸ்லிம்கள் நம்பும் சில விஷயங்களைக் கொண்டு அவர்கள் ஒரு குழுவாகவும், வேறு சில முஸ்லிம்கள் நம்பும் வேறு சில கருத்துக்களைக் கொண்டு அவர்கள் மற்றொரு குழுவாகவும்தானே இன்று நாம் உள்ளோம்! மேலும் ஒரு தரப்பைச் சார்ந்தவர் தன்னிட்சையாகவே பிற தரப்பினரை வெறுக்கிறார். இதுதானே நடக்கிறது! இத்தனைக்கும் மத்தியில் நாம் நம் சிந்தனையை தட்டி எழுப்பாமல் இருக்கிறோம். இது பற்றி சிந்தித்து மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த யாரும் முயற்சி செய்வதில்லை. இதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
முடிவுரை
இந்த வரலாறுகளை பின்வருமாறும் பார்க்கலாம். இதைச் சொல்வதன் மூலம் சன்னி-ஷியா என இரு தரப்பு மக்களையும் நான் சங்கடத்துக்கு உள்ளாக்கப் போகிறேன். எனினும் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். சன்னிகளை பொருத்தவரை அவர்கள் நேர்வழி நடந்த கலீஃபாக்கள் (கிலாஃபா அர் ராஷிதா) காலத்தை நீட்டித்து, உமைய்யாக்களையும் அப்பாஸிகளையும் அதில் உள்ளடக்கி அவர்களை கலீஃபாக்கள் என்று அழைக்கின்றனர். இது தவறு. உமைய்யாக்களும் அப்பாஸிகளும் தெளிவாகவே வழிதவறி இருந்தனர்.
ஷியாக்களைப் பொருத்தவரை அவர்கள் உமைய்யா மற்றும் அப்பாஸி காலத்தில் நடந்த துர்சம்பவங்களையும் அத்துமீறல்களையும், இறைத்தூதர் இறந்து முதல் முப்பது ஆண்டு காலகட்டத்தில் பொருத்திப் பார்க்க முயற்சிக்கின்றனர். இதுவும் தவறு. இவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. ஆக இவர்கள் இருவருமே நியாயமாக நடக்கவில்லை.
இந்த வரலாறுகளை படிக்கும் நாம், சாமானிய முஸ்லிம்கள் தங்களுக்கிடையே சதி செய்து சண்டையிட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் சதி செய்தார்களா என்றால், ஆம், செய்தார்கள். ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்பினார்கள். சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். தக்க சமயத்தில் தாம் நினைத்ததை சாதித்துக் கொண்டார்கள். இதுதான் வரலாறு. ஆனால் இதே கண்ணோட்டத்தில் பொது மக்களையும் பார்ப்பது தேவையற்ற கற்பனை என்றே கருதுகிறேன்.
இப்போது கேள்வி என்னவென்றால், இச்சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால், அன்று நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு நாம் அறிவை வளர்த்துக் கொண்டோமா என்பதுதான். இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய செயல்பாடுகள் அனைத்தும் நாம் நம் வரலாற்றுப் பாத்திரங்களை மீட்க விரும்புகிறோம் என்பதையே காட்டுகின்றன. அத்தகைய ஒரு சூழலை அடைந்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதே தவறுகளை செய்யப் போகிறோமா? ஏற்கனவே இத்தகைய நிகழ்வுகளை நமக்கு காட்டித் தந்து இத்தகைய சூழலில் நம்மை வாழச்செய்து அவற்றிலிருந்து பாடம் படிக்கும் வாய்ப்பை வழங்கியது அல்லாஹ் நமக்குக் காட்டும் கருணையின் வெளிப்பாடு இல்லையா? இதுதான் நம் முன் உள்ள கேள்வி.
வெறும் கோட்பாட்டளவில் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. இன்று உண்மையிலேயே பல இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுகின்றன; ஒவ்வொன்றும் தனித்தனியாக கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து இயங்குகின்றன. ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவிவிட்டு, வரலாறுகால சந்தேகங்களின் அடிப்படையில் குத்தல் பேச்சுக்களால் பிறரை தாக்கிக் கொண்டும் “நீங்கள் இதற்கு சரிபட்டு வர மாட்டீர்கள்” என்று பேசுவதும் அழகல்ல. எங்களைப் பார்த்து இப்படிக் கூறுகிறீர்கள் என்றால், நீங்கள் யார்? ஏன் இந்த தன்னலம்? ஏன் இந்த விசித்திர பண்பு?!
அன்றைய மக்கா மதீனாவைப் பார்த்து அபூ சுஃப்யானையும் முஆவியாவையும் சுயநலக்காரர்கள் என்று கூறுவது இருக்கட்டும். இன்றும் அத்தகைய மக்கள் இருக்கிறார்களே! அன்று அவர்கள் கொண்டிருந்த அதே நோக்கத்தையும் மன நிலையையும் இவர்கள் கொண்டிருக்கிறார்களே! மேலும் ‘நீங்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல’ என்று கூறி பிற முஸ்லிம்களை தகுதி நீக்கம் செய்கிறார்களே. இதன் பொருள்தான் என்ன? நம் தவறுகளிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நீங்களே இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் எடுத்துப் பாருங்கள். இன்னும் வெளிப்படையாக இதைச் சொல்ல வேண்டுமா என்ன?
மக்களே! நாம் ஒரு அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், 1400 வருடங்களாக நம் வரலாறை மீட்டிப் பார்க்காமல், அதிலிருந்து படிப்பினை பெறாமல், தவறுகளை திருத்திக் கொள்ளாமல் நம்மில் பலர் தனிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களால் கிளர்ச்சியடைந்தவர்களாக இருக்கின்றனர். இது என்னுடைய தவறோ அல்லது உங்களுடைய தவறோ அல்ல. இது நம்முடைய தவறு; நம்முடைய பலவீனம்; நம்முடைய ஆற்றல். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டால் இத்தவறை எளிதாக திருத்திக் கொள்ள முடியும். மாறாக, ‘நான்தான் சரியானவன், என் கருத்துதான் மற்ற முஸ்லிம்கள் கொண்டுள்ளதை விட சிறந்தது’ என்று ஒருவர் கருதுவாரானால், நம்மால் எதுவும் செய்ய இயலாது. இங்கு, யார் ‘மற்ற முஸ்லிம்’? இச்சொல் எங்கிருந்து வந்தது?! அப்படிக் கூறும் ஒருவர் தன்னை மட்டுமல்ல, மற்றவரையும் சேர்த்து படுகுழியில் தள்ளுகிறார். நாம் வாழ்ந்தால் ஒன்றாகவே வாழ்வோம்; வீழ்ந்தாலும் ஒன்றாகவே வீழ்வோம்.
♦ ♦ ♦ ♦ ♦