இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)
இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)
இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 5)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு ஐந்து பாகங்களாகப் பிரித்துள்ளோம் – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 05-02-2008
YouTube link: Islamic History / Ahl Al Sunnah wa Al Jamaah School of Thought
இமாம் அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம் .
♦ ♦ ♦ ♦ ♦
(பாகம் 1)
முஸ்லிம்கள் தம் ஆரம்பகால வரலாற்றில் மூன்று விஷயங்களில் வெவ்வேறு விதமான பார்வையைக் கொண்டிருந்தனர் என்று பார்த்தோம். முதலாவது அரசியல் சார்ந்தது என்றும் இரண்டாவது சித்தாந்தம் அல்லது தத்துவம் சார்ந்தது என்றும் மூன்றாவது சட்டவியல் (ஃபிக்ஹ்), அதாவது அல்லாஹ்வோடு நாம் கொண்டுள்ள ஈடுபாட்டின் செயலாக்கம் பற்றியது என்றும் பார்த்தோம்.
அரசியல் சார்ந்த வரலாற்றில் ‘ஷியா கண்ணோட்டம்’ என்று அழைக்கப்படுவது குறித்தும் அதற்கடுத்து அல் கவாரிஜ் குறித்தும் ஆரம்பகால வரலாறு பற்றிய அவர்களது பார்வை குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். அவ்வரிசையில் இந்த அத்தியாயத்தில் தங்களை அஹ்ல் அல் சுன்னாஹ் அல்லது ஜம்ஹூர் அல்லது அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் எனக் கருதுபவர்களின் சிந்தனைப் பார்வையை இயன்ற அளவு தெளிவுபடுத்த முயற்சிப்போம்.
இவ்வகை முஸ்லிம்களைக் குறிக்க இம்மூன்று பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பகால இஸ்லாமிய வரலாறை இவர்கள் எப்படி வியாக்கியானம் செய்தனர் என்று பார்ப்போம். ஒரு கோணத்தில் பார்த்தால், தங்களை ‘ஷியா’ என கூறிக் கொண்டவர்கள் முக்கியமான இந்த காலகட்டத்தை நன்கு சிந்தித்து, முஸ்லிம்களின் தலைமை சாசன முறைப்படிதான் (வசிய்யத்) நிறுவப்பட வேண்டும் என நம்பினர். அதாவது முந்தைய தலைவர் தன் பொறுப்பை அடுத்த தலைவருக்கு ஒப்படைப்பதன் மூலம் முஸ்லிம்களின் தலைமை நிறுவப்படும் என்றனர்.
ரத்தக் களரியோடு பரபரப்பாக செயல்பட்ட கவாரிஜ்கள், பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டிய தலைமையே பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டதாகக் கருதினர். எனவே மத்தியிலுள்ள இஸ்லாமிய தலைமையின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று முஸ்லிம்கள் சில சமயம் தலைவர் மற்றும் அரசாங்கம் இல்லாமலேயே செயல்படலாம் என்றும் கூறினர். இங்கு நம் வரலாற்றின் அரசியல் கூறை மட்டுமே பார்க்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தலைமை
இப்போது —இன்றைய மொழிவழக்கில்— தம்மை சன்னி என்று அழைத்துக் கொள்பவர்களைப் பற்றி பார்ப்போம். தலைமை குறித்த கருத்தை இவர்கள் எப்படி அணுகினார்கள் என்பதை நியாயமாகவும் நேர்மையாகவும் அறிய முயற்சிப்போம். முதலில் தலைமை என்பது இவ்வுலகில் செயல்படும் தெய்வீக ஒழுங்கின் முழுமையான ஒரு அங்கம் என அவர்கள் நம்பினர். இஸ்லாமிய அரசாங்கம் இன்றி இஸ்லாமிய சமூகம் இருக்க முடியாது என்றும் இஸ்லாமியத் தலைமை இன்றி இஸ்லாமிய மக்கள் இருக்க முடியாது என்றும் நம்பினர். மேலும் தலைவர்கள் குறைஷிகளிலிருந்தே வரவேண்டும் எனப் பொருள்படும் இறைத்தூதரின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டினர். ‘அல் இம்மத்து மின் குறைஷ்’ என்பது இறைத்தூதரின் ஒரு ஹதீஸ். இதே அர்த்தத்தில் வேறுபல ஹதீஸ்கள் உள்ள போதிலும் இது மற்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே இந்த ஹதீஸைக் கொண்டு ‘முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு தலைவரைக் கொண்டிருப்பது இன்றியமையாதது’ என்று நிறுவ முயன்றனர்.
பிற இலக்கியங்களை விட சன்னி இலக்கியங்களில் கலீஃபா எனற சொல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனினும் நாம் முன்னர் மேற்கோள் காட்டிய ஹதீஸ் ‘இமாம் அல் இம்மத்து’ என்ற சொற் பிரயோகத்தையே கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். ஆகவே சன்னி இலக்கியங்களில் இமாம் என்பதிலிருந்து கலீஃபா என்பதாக அச்சொல் பெயர்ச்சி அடைந்துள்ளது என்று அறிய முடிகிறது. எனினும் நம் பேசுபொருளுக்கும் வரலாற்றின் இத்தகைய கருத்துருவாக்கத்துக்கு காரணமாயிருந்த அறிஞர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டுமெனில், இவர்களைப் பொருத்தவரை கலீஃபா என்பதும் இமாம் என்பதும் ஒருபொருள் தரும் இரு சொற்கள் என்றே கூற வேண்டும்.
நான்கு கூறுகள்
இமாம் அல்லது கலீஃபா குறித்து இவர்களின் புரிதல் என்னவாக இருந்தது? இவர்களைப் பொருத்தவரை அது நான்கு கூறுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, நாம் ஏற்கனவே சொன்னது போல தலைவர் குறைஷி குலத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்; வேறு எந்த குலத்தைச் சார்ந்தவரும் தலைவராக முடியாது. தலைமையை இஸ்லாமியத் தலைமையாக மாற்றும் இரண்டாவது கூறு ‘பற்றுறுதி’ (பைஅத்) ஆகும். தலைவருக்கு மக்கள் பற்றுறுதி அளிக்கவில்லை எனில் அவர் உண்மையான தலைவராக முடியாது. ‘பற்றுறுதி’ என்பது தலைமைத்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை அங்கம் ஆகும். இஸ்லாமியத் தலைமையின் மூன்றாவது கூறு ‘கலந்தாலோசனை’ (ஷூறா) ஆகும். பிற முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு, தலைமைக்கு வலுவூட்டி உண்மைப்படுத்துவதன் மூலம் அதை சட்டப்பூர்வமானதாக மாற்றுகிறது. நான்காவது கூறு நீதி (அதாலா) ஆகும்.
தன் பண்பு நலன்களில் நீதியை பிரதானமாகக் கொண்டிராத ஒருவர் தலைவராக முடியாது. நீதி எல்லா துறைகளிலும் வெளிப்பட வேண்டும். தனிமனித உறவுகளிலும் சரி, சமூக பொருளாதார மட்டத்திலும் சரி, எல்லா இடத்திலும் அவர் நீதியை நிலைநாட்டுபவராக இருக்க வேண்டும். ஆகவே இந்த எல்லா கூறுகளையும் ஒன்றிணைத்துப் பார்த்தால் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இது கலீஃபா அல்லது இமாம் என்பதற்கான அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத்தின் (சன்னி) கோட்பாட்டு ரீதியான விளக்கம் ஆகும்.
குறைஷி தலைவர்
இந்த நான்கு கூறுகளும் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் கூறியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. நாம் ஏற்கனவே குறைஷ் குறித்த ஒரு செய்தியை (ஹதீஸ்) பார்த்தோம். மற்றொன்றில் அக்கால மக்கள் குறித்து இறைத்தூதர் கூறியதாக அறிவிக்கப்படுவதாவது, “அன்னாசு தபவுன் லி குறைஷின் ஃபீ ஹாதஷ் ஷ’அன். முஸ்லிமுஹும் தபவுன் லி முஸ்லிமிஹிம் வ காஃபிருஹும் தபவுன் லி காஃபிரிஹிம்”. இதன் பொருள்: “ஏதோ ஒரு வகையில் குறைஷிகள் தலைவர்கள்தான். குறைஷிகளில் உள்ள முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்; குறைஷிகளில் உள்ள நிராகரிப்பவர்கள் (குஃப்பார்கள்) பிற நிராகரிப்பவர்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்”.
புஹாரியில் வரும் மற்றொரு செய்தி (ஹதீஸ்) இவ்வாறு சொல்கிறது: “இன்ன ஹாதல் அம்ர ஃபீ குறைஷ். லா யுஆதீஹிம் அஹதுன் இல்லா கப்பலல்லாஹு அலா வஜ்ஹிக். மா அகாமுத் தீன்”. இதன் பொருள்: “இஸ்லாமிய அரசாங்கம் பற்றிய விவகாரம் முழுமையாக குறைஷிகளுக்கு உரியது. அவர்கள் தீனை நிலைநாட்டும் வரையில் அவர்களுக்கு விரோதம் பாராட்டும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புற விழச் செய்வான்”.
அல் புஹாரி அறிவிக்கும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் பொய்யர்கள் யாரும் இல்லை. இறுதியாக இந்த ஹதீஸ் இறைத்தூதர் கூறியதாக முஆவியாவால் அறிவிக்கப்படுகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நான் இங்கு இந்த ஹதீஸ்களை மேற்கோள் மட்டுமே காட்டுகிறேன். இவை நம் வரலாற்றின் மேன்மையான பகுதிகள். என்னை அறிந்தவர்கள் இதுபற்றிய என் கருத்தை அறிவார்கள் என நம்புகிறேன். ஆதலால், இயன்றவரை இப்பேசுபொருளுக்கு நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன்.
இதுவரை இமாமத் கோட்பாடு பற்றியும் யார் இமாம் ஆக முடியும் என்பது பற்றியும் பார்த்தோம். மேம்போக்காகப் பார்க்கையில் இதுவரையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றே தோன்றுகிறது. இப்போது இவற்றை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். குறைஷிகளிலிருந்தே தலைவர் வரவேண்டும் என்பதன் பொருள் என்ன? இத்தகைய ஹதீஸ்களை மேற்கோள் காட்டும் முஸ்லிம்கள், இறைத்தூதர் இவற்றை கூறினார் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளவில்லை என்றே நம்புகிறேன். எனில் இது காலவரம்பற்ற கூற்றா? அதாவது என்றென்றைக்கும் முஸ்லிம்களின் தலைவராக ஒரு குறைஷிதான் இருக்க வேண்டுமா? அல்லது அவர் கூறியது, அன்றைய வாழ்வின் எதார்த்தத்தில் அமைந்த இயல்பான வாக்கியமா? இங்குதான் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்த ஹதீஸ்களை மேற்கோள் காட்டும் பிற மக்கள் கருத்து வேறுபடுகின்றனர். சிலர் “இது கால வரையறையற்ற கூற்று” என்கின்றனர். காலாகாலத்துக்கும் குறைஷிகளிலிருந்தே தலைவர் அமைய வேண்டும் என்கின்றனர். இன்றிலிருந்து லட்சம் ஆண்டுகள் ஆனாலும் சரி, அது அப்படித்தான் அமைய வேண்டும் என்கின்றனர். மேலும் சிலர் “இல்லை, இது தலைமுறை கடந்த கூற்று அல்ல. அது அக்காலத்து அரேபியாவில் ஏற்பட்ட குறிப்பான சில சந்தர்ப்ப சூழல்களை கருத்தில் கொண்டு கூறப்பட்ட வாக்கியம். எனவே, அத்தகைய சூழலில் மட்டும் குறைஷியை தலைவராகக் கொள்ளலாம்” என்கின்றனர்.
அன்றைய மாறுபட்ட அரேபிய சூழலில் இக்கூற்றின் விளைவு என்னவாக இருந்தது? நாடோடி கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகம் பண்பாட்டு வளர்ச்சியடைந்து, நாகரீகமடைந்த சமூகமாக மாறியிருந்தது. இறைத்தூதர் மற்றும் குர்ஆனின் வருகைக்கு முன்னர் பல்வேறு குழுக்களாக, கோத்திரங்களாகப் பிரிந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த சமூகம், இவர்களின் வருகைக்குப் பிறகு புதிய நிலை மக்களைக் கொண்டதாக மாறியது. இப்புதிய மக்கள், முந்திய அரேபிய மக்களின் விவரணங்களை மாற்றியமைப்பவர்களாக மேலோங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
நமக்குப் பரிட்சயமான அத்தகைய ஒரு மாற்றம் அல் அன்சார் மற்றும் அல் முஹாஜிரீன்களின் உருவாக்கம் ஆகும். இதற்கு முன்னர் இல்லாத இவ்விரு வகை மக்கள், இப்போது சமூகத்தின் முக்கிய அங்கமாக மாறினர். ‘அல் இம்மத்து மின் குறைஷ்’ எனக் கூறி இறைத்தூதருக்கு பின் வந்த ஆட்சியாளர்களை நியாயப்படுத்துபவர்கள், மறைமுகமாகக் கூறுவது என்னவெனில் ‘அன்சார்கள் தலைவர்களாவதற்கு தகுதியற்றவர்கள்’ என்பதே. ஏனெனில் அன்சார்கள் குறைஷிகள் அல்லர். இவ்வாறாக, ஒற்றை ஹதீஸைக் கொண்டு அன்சார்கள் தலைமைப் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இறைத்தூதருக்கு ஆதரவளித்து, முதல் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ முயன்ற மதீனத்து மக்கள் இந்த ஹதீஸ் குறித்த இவ்விளக்கத்தைப் பற்றி எவ்வாறு உணர்ந்தார்கள் என விளங்க இது உதவும்.
இஸ்லாத்தின் நியதியோடு பொருந்தாத ஹதீஸ்: மேலும் சிந்தித்தால் இந்த ஹதீஸை இஸ்லாத்தின் நியதியோடு பொருத்துவது மிகக் கடினம் என்பது தெளிவாகிறது. ஏனெனில் அல்குர்ஆனின் வசனங்களும் இறைத்தூதரின் பொன்மொழிகளும் முஸ்லிம்களை சமப்படுத்த வந்தவை. ஆனால் இந்த ஹதீஸ் சிலருக்கு வேறு சிலரைவிட மேல் அந்தஸ்து கொடுப்பதாகத் தெரிகிறது; அல்லது சமத்துவ இஸ்லாத்தில் பாகுபாட்டை புகுத்துவதாகப் படுகிறது. இது பொதுவான இஸ்லாமிய அமைப்பில் பொருந்தாது.
இந்த ஹதீஸின் கருத்தோடு பொருந்தாத வேறு நம்பகமான ஹதீஸ்களும் உள்ளன. இத்தகைய ஹதீஸ்களின் முழுப்பட்டியல் அல்ல இது. அவற்றுள் சிலவற்றை மட்டுமே நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன். முதலாவதாக, அபூதர் அறிவிப்பதாவது “இன்ன ஃகலீலி அவ்ஸானி அன் அஸ்ம’அ வ உதிய்ய வ லவ் உம்மிர் அலைக்கும் அப்துன் ஹபஷி முஜத்தவுல் அன்ஃப்”. இதன் பொருள்: ‘என் அருமை நண்பர் (அதாவது முஹம்மது ஸல்) எனக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: சப்பை மூக்கு கொண்ட ஒரு ஆப்பிரிக்கர் உமக்கு தலைவராக வந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு கீழ்படியும்.’
அதேபோல் புகாரியில் உள்ள மற்றொரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது: “இஸ்மவு வ அதீவு வ இனிஸ்து’மில அலைக்கும் அப்துன் ஹபஷி க அன்ன ர’ஸஹு ஸபீபா”. இதன் பொருள்: “உலர் திராட்சை போன்ற தலை கொண்ட ஒரு ஆப்பிரிக்க பணியாள் உங்களுக்கு தலைவராக வந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு கீழ்படியுங்கள்”.
ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள மற்றொரு ஹதீஸ் பின்வருமாறு: “இனிஸ்து’மில அலைக்கும் அப்துன் அஸ்வத் முஜத்த யகூலுக்கும் பி கிதாபில்லாஹி த’ஆலா ஃபஸ்மவு வ அதீவு” என்கிறது. பொருள்: “சப்பை மூக்கு கொண்ட ஒரு கறுப்பர் உயர்வான் அல்லாஹ்வின் நூலைக் கொண்டு உங்களை வழிநடத்தினால் அவருக்கு கட்டுப்பட்டு கீழ்படியுங்கள்”.
இந்த ஹதீஸ்களை விளங்குவது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். இவற்றின் சொற்பிரயோகத்திலேயே இனவாதமும் பாகுபாடும் பொதிந்து உள்ளதாக சிலர் உணரலாம். இறைத்தூதர் எப்படி இப்படிப்பட்ட ஹதீஸ்களை சொல்லலாம் என்று கூட அவர்கள் கேட்கலாம். எனினும் இவை இஸ்லாத்துக்கு முந்தைய சமூக எதார்தத்தை பிரதிபலிக்கின்றன. அன்று நிலவிய கலாச்சார முரண்பாடுகளைத்தான் இறைத்தூதர் குறிப்பிடுகிறார் என்றும் இஸ்லாம் இவற்றைக் களைந்துவிட்டது என்றும் உணர்ந்தால், இவற்றை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
இந்த ஹதீஸ்களின் மூலம் இறைத்தூதர் உணர்த்துவது என்னவெனில் ‘உங்கள் பார்வையில் கீழ் நிலையில் இருக்கும் ஒருவர் தகுதி பெற்று உங்களுக்கு தலைவராக வந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு கீழ்படியுங்கள்’ என்பதே. இத்தகைய விவரணங்கள் எதிலும் ஒரு குறைஷி அடங்கமாட்டார் என்பது தெளிவு. ஆகவே இத்தகைய ஹதீஸ்களையும் நாம் முன்னர் கூறிய குறைஷிகளின் தலைமை குறித்த ஹதீஸையும் அருகருகே வைத்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே உள்ள முரண் தெளிவாகிறது. இந்த ஹதீஸ்கள் அனைத்துமே அங்கீகரிப்பட்ட சன்னி இலக்கியங்களிலும் மேற்கோள்களிலும் உள்ளவைதான். யாரும் இவற்றுள் சிலதை எடுத்துக் கொண்டு சிலதை நிராகரிக்க முடியாது. ஏனெனில் எல்லாமே நம்பகமான, உண்மையான அங்கீகரிப்பட்ட ஹதீஸ்கள். ஆகவே நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில் இத்தகைய ஹதீஸ்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே. தங்களை அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத்தினர் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள், தங்கள் நம்பகமான நூல்களிலுள்ள இந்த ஹதீஸ்களை அருகருகே வைத்து அதிலிருந்து ஒரு அரசியல் வியாக்கியானத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)