சிரியாவின் நிலை (பகுதி 1) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்
Posted on♣ ♣ ♣ ♣ ♣
YouTube Link: The Syrian Situation Part 1
உரையாற்றிய நாள்: 08-12-24
♣ ♣ ♣ ♣ ♣
பஷார் அல் அசத் நாட்டை விட்டு தப்பிவிட்டார். அவர் மாஸ்கோவிற்கு சென்றிருக்கலாம். சிரியா விடுதலைக்கான(!) குழுவான ‘ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS)’ என்ற பதாகையுடன் இயங்கி வரும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு குழுக்கள் எந்தவொரு பெரிய சண்டையும் இன்றி மின்னல் வேகத்தில் நகரங்களை கைப்பற்றின. இதை அனுமதிப்பதற்காக பல்வேறு ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒருவித ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
சிரிய இராணுவ படைகளின் உயரதிகாரிகள் சண்டையிட வேண்டாம் என்று முடிவு செய்ததைப் போல் தெரிகிறது. அவர்கள் அநேகமாக HTS தளபதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம். மேலும் சண்டையிடாமல் இருப்பதற்காக பொதுமன்னிப்பு வழங்கக் கேட்டிருக்கலாம்.
தலைநகர் உட்பட முக்கிய நகரங்களை, வடக்கில் இருந்து தெற்கே 350 கிலோமீட்டர் நிலபரப்பை இரண்டு வாரங்களுக்குள் எதிர்ப்பு குழுக்கள் கைப்பற்றியதை வேறு எப்படி விளக்குவது?
சிரியாவில் தற்போது முன்னாள் பிரதமராக மாறிவிட்ட முஹம்மது காஸி அல் ஜலாலி தொலைக்காட்சியில், ‘புதிய ஆட்சியிடம் அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்றார்.
ஹயாத் தஹ்ரீர் அல் ஷாமின் தலைவரான அபூ முஹம்மது அல் ஜொலானியும்; “எந்த பழிவாங்கும் கொலைகளும் இருக்கக்கூடாது, அரசாங்க கட்டடங்கள் அல்லது நிறுவனங்களுக்கு எந்த சேதமும் இருக்கக்கூடாது, சிரிய மக்களின் உயிர்களும் உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.
இதுவொரு நம்பிக்கையான அறிகுறி தான். எனினும், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம். அதற்கு முன் அந்நிகழ்வுகள் பற்றிய ஒரு பரவலான கண்ணோட்டத்தை பார்ப்போம்:
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு பேரம் நடந்ததாகத தெரிகிறது. ‘உக்ரைனில் மாஸ்கோ தன் விருப்பப்படி செயல்படுவது, தான் கைப்பற்றிய நிலப்பகுதிகளை வைத்துக்கொள்ள அனுமதிப்பது ஆகிய சலுகைகளுக்கு பதிலாக அசத் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை ரஷ்யா வாபஸ் வாங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
டிசம்பர் 7ம் தேதி சனிக்கிழமை, கத்தாரின் தோஹா மன்ற நிகழ்வுகளின் போது, துருக்கியின் முன்னாள் உளவுத்துறை தலைவரும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹக்கான் ஃபிதான் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார். ‘சிரியா தற்போது துருக்கியின் கட்டுபாட்டில் உள்ளது’என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் வெற்றித் தொனியில் பேசினார்.
சில நாட்களுக்கு முன்பு துருக்கிய குடியரசு தலைவர் எர்டோகன், “கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸிற்கு படையெடுத்துள்ளனர். மேலும் அதிக இரத்தம் சிந்தப்படாது என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
தன்னை இரண்டாம் உஸ்மான் காஜி என்று கற்பனை செய்துக் கொள்ளும் எர்டோகன் ‘உஸ்மானிய பேரரசை மீண்டும் நிறுவ வேண்டும்’ என்று விரும்புகிறார். சாத்தியமற்ற இந்த கனவிற்கான அவரது பாதை, ஒரு நூற்றாண்டுக்கு முன் அரேபியர்கள் உஸ்மானியர்களுக்கு செய்த காரியத்தை அவர்களுக்கு திரும்ப செய்வதாக உள்ளது.
அரபு கோத்திரத் தலைவர்களான அப்துல் அஜிஸ் இப்னு சவூத் மற்றும் மக்காவின் ஷரீஃப் ஹுசைன் ஆகியோரிடம், உஸ்மானியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு பலனாக அவர்களை மொத்த அரேபியர்களுக்கும் மன்னராக ஆக்கப்படுவார்கள் என்ற பிரிட்டிஷார் தனித்தனியாக வாக்குறுதி அளித்தனர்.
அவர்களிடம் “உஸ்மானியர்கள் அரபியர்கள் அல்ல” என்று பிரிட்டிஷார் கூறினர். உண்மைதான். ஆனால் ஆங்கிலேயர்கள் கிறிஸ்துவர்கள். வஹாபி சந்தர்ப்பவாதிகளின் வார்ததையில் சொன்னால் ‘நிராகரிப்பவர்கள்’ (காஃபிர்கள்) .
அரபுகளின் நம்பிக்கை துரோகம் உஸ்மானிய அரசை சிதைப்பதற்கும், மத்திய கிழக்கில் சவூதி அரேபியா, ஜோர்டன் மற்றும் லெபனான் போன்ற செயற்கை நாடுகள் உருவாவதற்கும், ஃபாலஸ்தீனில் சியோனிஸிய அரக்கத்தனம் நிலைபெற்று வளருவதற்கும் வழிவகுத்தது.
இன்று எர்டோகன் அரேபியர்களை காட்டிக் கொடுப்பதற்காக சியோனிஸம் மற்றும் அமெரிக்காவுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்வோம். இந்த மொத்த பிரச்சனையும் பஷார் அல் அசத் அல்லது அவரது ஆட்சியைப் பற்றியதல்ல. மாறாக சிரியாவில் நடைப்பெறும் இந்நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க உதவுமா? என்பதே கேள்வி. அவற்றில் மிக முக்கியமானவை காஸா, முழு ஃபாலஸ்தீனம் மற்றும் அல் அக்ஸா பள்ளிவாசலை மீட்பது.
எதிர்ப்பு படைகள் டமாஸ்கஸில் நுழைந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய படைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகளுக்கு (Golan heights) அருகே கொயன்டாவை (Konta) ஆக்கிரமித்தன.
இப்போது சிரியாவின் உள்நாட்டு விவகாரத்திற்கு வருவோம். வருந்தத்தக்க விதமாக, பஷார் அல் அசத் சீர்திருந்தங்களை செய்யவும், அவரது நேசநாடுகளின் குறிப்பாக ஈரானின் முறையீடுகள் இருந்த போதிலும் உள்ளடக்கிய அரசாங்கத்தை (inclusive government) உருவாக்கவும் மறுத்துவிட்டார். அவரது சிறுபான்மை அலவி (alawid) குழு அதிகாரத்தை யாருடனும் பங்குபோட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவரது ஆட்சி பல வருட தடைகளால்(Sanctions) நிச்சயமாக பலவீனமடைந்தது.
சிரியாவைக் கைப்பற்றிய ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (HTS) அவநம்பிக்கையால் எதற்கும் துணிந்த குழுக்களால் ஆனது. அவர்களது வெளித்தோற்றம் வெவ்வேறாக உள்ளது.
பிப்ரவரி 1989ல் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு, ஆப்கானியர்களைப் போல் அவர்களுக்கு மத்தியில் மோதல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. சிரியா மக்களின் நலனுக்காக இது நடக்காது என்று நம்பலாம்.
வெளிப்படையாக, இத்தகைய மாற்றங்களில் வெற்றியாளர்களும், தோல்வியாளர்களும் உள்ளனர். ஃபாலஸ்தீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானை தோல்வியாளர்களாக கூறலாம். அவர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். வெற்றியாளர்களில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். துருக்கி தனது ஆதாயங்களை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதும் ஊகமாகவே இருக்கிறது.
அக்டோபர் 2011ல் முஅம்மர் கடாஃபி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு லிபியா மக்களின் முடிவைப் போல் சிரியா மக்கள் முடிவு இருக்காது என்று நம்பலாம். நாம் நம்பிக்கை வைக்க மட்டும் தான் முடியும். பொது அறிவு மேலோங்கும் என்றும் சிரியா மக்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும் என்றும் நம்புகிறோம்.
♣ ♣ ♣ ♣ ♣