இஸ்லாமிய வரலாறு – 14 / ளாஹிரி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, தலைப்புகளை அளித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப்  சேனலில்  உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 01-06-2009, இடம்: வாஷிங்டன் டி.சி.

YouTube Link: Islamic History, Al Dhahiriyyah school of thought (Incomplete)

♣ ♣ ♣ ♣ ♣

இன்று நாம் முஸ்லிம்களின் கவனத்தில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து போன ஒரு சிந்தனைப் பள்ளியைப் பற்றி பார்க்கப் போகிறோம். “நீங்கள் எந்த சிந்தனைப் பள்ளியை பின்பற்றுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, சிலர் “ஷாஃபியி” என்றும், சிலர் “ஜாஃபரி” என்றும், வேறு சிலர் வேறு சிந்தனைப் பள்ளிகளையும் குறிப்பிடுவதை கேட்டிருக்கிறோம். இவை அனைத்தும் நமக்குப் பரிச்சயமான சிந்தனைப் பள்ளிகள். ஆனால் ஒருவர், “நான் ளாஹிரி சிந்தனைப் பள்ளியை பின்பற்றுகிறேன்” என்று சொன்னால், ‘அப்படியா? அது என்ன சிந்தனைப் பள்ளி?’ என்ற கேள்விதான் எழும். இச்சிந்தனைப் பள்ளி குறித்து அதிக தகவல்கள் புழக்கத்தில் இல்லை. நமக்கிருக்கும் இக்குறுகிய ஒன்றரை மணியளவு காலத்தில் இது பற்றிய ஒரு புரிதலை அடைய முயற்சிப்போம்.

ளாஹிரியாகள்

‘ளாஹிரி மத்ஹப்’ என்றால் என்ன? ‘மத்ஹப்’ என்றால் என்ன என்று எல்லொருக்கும் தெரியும். ‘அள் ளாஹிரியா’ என்றால் என்ன? இதை ‘சத்தார்த்தம்’ (literal) என்று புரிந்து கொள்ளலாம். எனினும் ‘வெளிப்படையானது’ என்று சொல்வது மொழியியல் ரீதியாக இன்னும் நெருக்கமான பொருளைத் தரும். ஆக, ‘வெளிப்படையாகத் தெரிவதை பின்பற்றும் சிந்தனைப் பள்ளி’ என்றாலும் ‘அதிகம் சத்தார்த்தவாதிகளாக (literalists) இருப்பவர்களின் சிந்தனைப் பள்ளி’ என்று சொன்னாலும் இதன் பொருள் தெளிவாகும்.

மற்ற சிந்தனைப் பள்ளிகளைப் போலவே இதுவும், சட்டவியலின் தலையூற்று மூலபாடங்களில்தான் (அந் நுசூஸ்) உள்ளது என்கிறது. மூலபாடங்கள் என்று சொல்லும் போது இறைவாக்கான சங்கைமிகு குர்ஆனையும் நபிமொழிகளையும் (ஹதீஸ் அல் ஷரீஃப்) குறிக்கிறது. ஒரு பிரச்சனை குறித்து பேசும்போது இவ்விரு ஆதாரங்களையும் தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை என்று இச்சிந்தனைப் பள்ளி கூறுகிறது. அதாவது சுயமுடிவு (ரயீ) எதுவும் தேவையில்லை. இச்சிந்தனைப் பள்ளி குறித்த பொதுப்படையான தொகுப்பு இது.

அவர்கள் இஸ்லாமிய அபிப்பிராயங்கள் என்று அறியப்படுபவற்றை எதிர்க்கின்றனர். எனவே —சட்டவியலின் நுணுக்கங்களுக்குள் புகுந்து பார்த்தால்— ஒப்புநோக்கல் (கியாஸ்), ஒப்புதல் (இஸ்தஹ்சான்), பொதுநலன் கோட்பாடு (ளராயா முர்சலாஹ்) போன்ற, பிற சிந்தனைப் பள்ளிகளில் காணப்படும் சிந்தனை முன்னேற்றங்கள் இவர்களிடம் இல்லை. திருக்குர்ஆனின் ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு நபிமொழி என்ன சொல்கிறது என்று விளங்க முற்பட்டால், அவர்கள் அதன் மூலத்துக்குச் சென்று ‘இந்த வசனம் இதைத்தான் சொல்கிறது; இந்த நபிமொழி இதைத்தான் சொல்கிறது; நமக்கு வேறெதுவும் வேண்டாம்; இதைச் சுற்றியுள்ள பிற அபிப்பிராயங்கள் எல்லாம் வெறும் அபிப்பிராயங்களே. எங்கள் அக்கறை முழுவதும் மூலபாடம் என்ன சொல்கிறதோ அதில்தான் உள்ளது’ என்கின்றனர்.

பிரச்சனைகளை நேரடியாக அணுகி பதிலளிக்கும்படியான, அவற்றைத் தீர்த்து வைக்கும்படியான மூலபாடம் —குறிப்பான ஒரு குர்ஆன் வசனம் அல்லது நபிமொழி— இல்லாதபோது, அவர்கள்  ‘அல்லாஹ் பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்கு பயன்படுவதற்காகப் படைத்தான் (‘ஹுவல்லதி ஹலக லகும் மா ஃபில் அர்ளி ஜமிஅ [2:29])’ என்ற குர்ஆன் வசனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வசனத்தை ஒரு மாற்று ஏற்பாடு போல அமைத்துள்ளனர். அதாவது, ஒரு வசனம் அல்லது நபிமொழியால் நேரடியாக, விரிவாக குறிப்பிடப்படாத எந்த ஒன்றும் மனிதச் செயல்பாட்டின் எல்லைக்குள் அடங்கும். சட்டவியலாளர்களின் மொழியில் இது ‘அல் இபாஹா அல் அஸ்லியா’ அல்லது ‘அல் அஸ்லு ஃபில் ஷியா அல் இபாஹா’ என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள், ‘அல்லாஹ் படைத்த அனைத்தும் அவற்றின் இயல்பில் அனுமதிக்கப்பட்டவையே; சட்டப்பூர்வமானவையே; பயன்பாட்டுப் பொருட்களே’ என்பதாகும்.

எனவே, ஒரு பிரச்சனை குறித்து அல்லாஹ் மற்றும் இறைத் தூதரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனும்போது, ‘அனைத்தும் அனுமதிக்கப்பட்டதே என்ற அடிப்படையில் அவ்விஷயத்தை மனிதனின் புரிதலுக்கு விட்டுவிட வேண்டும்’ என்கின்றனர்.

இந்த அடிப்படையில், இந்தப் பின்னணியில் அவர்கள் பிற இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளின் பெரும்பாலான கருத்துகளுக்கு முரணான கருத்துகளை உருவாக்கினர். அவர்கள் முரண்பாட்டாளர்களாக, வித்தியாசமானவர்களாகக் கருதப்பட்டனர். ‘இப்படியொரு கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. இத்தகைய ஒரு மனோபாவத்தில்தான் அறிஞர்கள் அவர்களை, அன்றும் இன்றும், அணுகுகின்றனர். இப்படியே அவர்கள் முத்திரை குத்தப்பட்டனர்.

சில எடுத்துக் காட்டுகள்

இதை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வாரிசுரிமை சட்டத்தில் (அல் இர்ஸ்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குச் சமமான பங்கு கிடைக்கும் என்பது பொதுவான இஸ்லாமிய விதி. ‘லி தகரி மிஸ்லு ஹள்ளில் உன்ஸயைன்’ (4:11). இதைச் சுற்றி மேலும் பல விதிகள் உள்ளன. கணித நுணுக்கங்களுக்குள் அது சென்றுவிடுகிறது. இதை அலசி ஆராயும்போது, இஸ்லாத்தின் மையநீரோட்ட சட்டவியலாளர்களிடையே இதுகுறித்து நுட்பமான வேறுபாடுகளும் உள்ளன.

இவ்விஷயத்தில் இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே எழுந்த கேள்விகளுள் ஒன்று: மரண தருவாயில் இருக்கும் ஒரு மனிதனுக்கு, தன் செல்வத்தின் —தன் வாரிசுகள் உரிமையாகப் பெறவிருக்கும் செல்வத்தின்— ஒரு பகுதியை, வாரிசுரிமை சட்டங்களில் தலையிட்டு, பங்கீடு செய்யும் சுதந்திரம் உண்டா? இதில் பல அம்சங்கள் உள்ளன. நான் இதன் சாராம்சத்தை மட்டுமே உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். ஆரோக்கியமாக, திடகாத்திரமாக, சுறுசுறுப்பாக இருக்கும் மனிதன் தன் செல்வத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதில் எல்லா சட்டவியலாளர்களும் உடன்படுகின்றனர். ஒருவருக்கு ஊனமுற்ற ஒரு மகன் அல்லது மகள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் செல்வத்திலிருந்து தொண்ணூறு விழுக்காட்டை அந்த மகனுக்கு கொடுக்க அவர் விரும்புகிறார் எனில் அது அனுமதிக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

பிரச்சனை எங்கு வருகிறதென்றால் அந்த மனிதர் இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஏதோ படுகாயம் ஏற்பட்டு அதனால் அவர் இறக்கப் போகிறார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய ஒருவர் தன் செல்வத்தை தன் சந்ததிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாமா? கூடாதா? அல்லது ஏதாவது வரம்புகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்யலாமா?

இதற்கு மையநீரோட்ட சிந்தனைப் பள்ளிகள் பின்வருமாறு பதிலளித்தனர்: ‘இல்லை. அத்தகைய மனிதர் தன் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும். அதற்கு மேல் எதையும் ஒதுக்கீடு செய்ய முடியாது’. ஏனெனில் அவர் தன் செல்வம் முழுவதையும் எப்படி வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்யலாம் என்ற சுதந்திரத்தை பெற்றுவிட்டால், வாரிசுரிமை சட்டங்களே ரத்தாகிவிடும். அது நடந்துவிடாமல் இருக்க, இப்படி ஒரு புரிதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் சொல்லாமல் ஒருவர் இறந்துவிட்டால், ‘தகரி மிஸுல் ஹயாத்’ (4:11) என்ற சட்டம் அமுலுக்கு வந்துவிடும். இதுதான் கிட்டத்தட்ட எல்லா சட்டவியலாளர்களின் பொதுவான புரிதலாக இருந்தது.

ஆனால் ளாஹிரிகளோ ‘இல்லை, இல்லை. மரண தருவாயில் இருக்கும் ஒரு மனிதன், முழு சுய கட்டுப்பாட்டில் இருக்கிறான் எனில், புத்தி பேதலிக்காமல் சீராகச் சிந்திக்கும் சக்தி பெற்றுள்ளான் எனில், அவனுக்கும் சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனைப் போலவே தன் சொத்தை ஒதுக்கீடு செய்யும் உரிமை உண்டு’ என்றனர். மேலும் மற்ற எல்லா சட்டவியலாளர்களோடும் ‘உங்கள் கருத்து நேரடியாகக் குர்ஆன் மற்றும் தூதர் வழிகாட்டுதலிலிருந்து வருவதல்ல. ‘தீமையின் வழியை அடைத்தல்’ (ஸத் தராய்) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள். அதாவது, சொத்துகளை இவ்வாறு ஒதுக்கீடு செய்ய அனுமதித்தால், அது வாரிசுரிமை சட்டங்களில் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். வாரிசுரிமை சட்டங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற முன் முடிவின் காரணமாகவே இப்படிச் சொல்கிறீர்கள்’ என்று வாதம் புரிந்தனர்.

மேலும் அவர்கள் “உங்கள் கருத்தை உண்மைப்படுத்தும் ஒரு குர்ஆன் வசனம் அல்லது ஒரு நபிமொழி கூட இல்லை” என்று மற்ற சட்டவியலாளர்களிடம் கூறினர். அவர்கள் ஏன் சத்தார்த்தவாதிகள் (ளாஹிரிகள்) அல்லது மூலபாடங்களின் வெளிப்படையான அர்த்தங்களின் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். மூலபாடம் என்பது இங்கே குர்ஆன் மற்றும் தூதர் வழிமுறைகளைக் குறிக்கிறது.

இதை மேலும் விரிவாகப் பார்ப்போம். இறைத்தூதரிடமிருந்து வரும் ஒரு செய்தி (ஹதீஸ்), மனித சிறுநீர் அசுத்தமானது (நஜீஸ்) என்கிறது. இதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சரி, அப்படியெனில் பன்றியின் சிறுநீரும் அசுத்தமானதா? என்று கேட்டால், மற்ற எல்லா சட்ட அறிஞர்களும் “ஒப்புநோக்கல் (கியாஸ்) என்ற எளிய முறையின்படி மனித சிறுநீர் போல பன்றியின் சிறுநீரும் அசுத்தமானது என்பது இயல்பறிவு” என்றனர்.

ஆனால் ளாஹிரிகளோ “இல்லை. இல்லை. மூலபாடங்களோடு விளையாடாதீர்கள். பன்றியின் சிறுநீர் அசுத்தமானது என்று சொல்லும் ஒரு வசனம் அல்லது நபிமொழி கூட இல்லை. எனில் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டனர். “இவ்விலங்கு முற்றிலும் அசுத்தமானதுதானே? அதன் மாமிசம், தோல் என எல்லாமே அசுத்தம் எனும்போது சிறுநீருக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டால், அவர்கள் “அதை அசுத்தம் என்று சொல்வதற்கு நாங்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்கவில்லை. இதை உறுதிப்படுத்தும் ஒரு வசனம் அல்லது நபிமொழியையேனும் மேற்கோள் காட்ட உங்களால் முடியுமா?” என்று கேட்டனர். அப்படி மேற்கோள் காட்ட முடியாதபோது இரு கருத்துகளிடையே, இரு சிந்தனா முயற்சிகளுக்கிடையே முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதிலிருந்து ளாஹிரி சிந்தனைப் பள்ளி பற்றி ஒரு புரிதலை பெறலாம்.

தாவூத் அல் அஸ்பஹானி

அடுத்து இதன் வரலாறு, இது எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது, இதன் ஆளுமைகள் யார் என்பது பற்றி பார்ப்போம். தானாக இது வந்துவிடவில்லை. இதற்கென ஒரு வரலாறு உள்ளது. ளாஹிரி சிந்தனைப் பள்ளி குறித்து பேசும்போது பிராதானமாக இரு அறிஞர்கள் நம் முன் நிற்கின்றனர். முதலாமவர் தாவூத். இது அரபுப் பெயர். பாரசீக மொழியில் இது அஸ்பஹானி என்றாகும். இதிலிருந்து அவருடைய பூர்வீகம் ஈரானின் இஸ்பஹானில் இருந்தது என்பது தெளிவாகிறது. இவர்தான் இத்தகைய கருத்துக்களை முதலில் வெளிப்படுத்தினார். எனவே புலமைத்துவ கண்ணோட்டத்தில், இவர்தான் இச்சிந்தனைப் பள்ளியை தோற்றுவித்தவர் என்று சொல்லலாம்.

ளாஹிரி என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வரும் மற்றொரு முக்கியமான, பிரபல அறிஞர் இப்னு ஹஸ்ம் அல் அந்தலூசி ஆவார். இவர் இன்றைய போர்ச்சுகல் அல்லது ஐபீரியாவைச் சார்ந்தவர். குர்ஆன் மற்றும் நபிவழியை முதன் முதலில் இப்படிப் புரிந்து கொண்டதாகக் கருதப்படும் தாவூத் அல் அஸ்பஹானியை விட இச்சிந்தனா முறையில் இப்னு ஹஸ்ம் ஆழமான செல்வாக்கும் அதிக கருத்துகளையும் பெரும் அக்கறையும் கொண்டிருந்தார்.

தாவூத் அல் அஸ்பஹானி ஹி. 202-ல் பிறந்து 270-ல் மறைந்தார். ஆக இந்தக் காலகட்டத்தில்தான் இச்சிந்தனைப் பாங்கு தோன்றியது. இச்சிந்தைனைப் பள்ளியை துவங்குவதற்கு முன், சிந்தனா முறைகள் என்று பார்த்தால், அவர் ஷாஃபியீ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்திருந்தார். இமாம் ஷாஃபியீ-ஆல் பெரிதும் கவரப்பட்ட அவர், அவரையே தன் ஆசிரியராகக் கருதினார்.  இமாம் ஷாஃபியீ-ன் அருமை பெருமைகளை பேசியும் எழுதியும் வந்தார். ஷாஃபியீ சிந்தனையை கற்பதோடு சேர்த்து நபிமொழிகளையும் கற்றார். சமகால ஹதீஸ் அறிஞர்கள் பலரின் வகுப்புகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி நபிமொழிகளை அறிவிக்கவும் செய்தார்.

அவரது பூர்வீகம் இஸ்பஹானில் இருந்தாலும் பாக்தாதில்தான் அவர் வசித்தார். அதுதான் அவருடைய நாடாகக் கருதப்பட்டது. மேலும் நீசாப்பூர் போன்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டவராகவும் இருந்தார். குர்ஆன் மற்றும் ஹதீஸ் குறித்த அவரது இத்தகைய புரிதலை ஆரம்பத்தில் வெளிப்படுத்தத் துவங்கிய போது, தான் கற்று, புரிந்து கொண்டு, மனனம் செய்த ஹதீஸ்களின் அடிப்படையில்தான் அப்படிக் கூறினார்.

ஷாஃபியீ-ன் சட்டவியலிலிருந்து இப்புதுவகை சட்டவியலை நோக்கிய இவருடைய மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒப்புநோக்கல்  மற்றும் சட்டநீட்சி ஆகியவற்றை கிட்டத்தட்ட  மறைத்தாற்போலவே அஷ்-ஷாஃபியீ,  குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் அளித்தார். இஸ்லாமிய சட்டவிதிகளைப் (ஷரியத்) பொருத்தவரை அவை மூலபாடங்களின் —குர்ஆன் மற்றும் ஹதீஸ்— நேரடி உற்பத்தி என்றே அவர் கருதினார். அஷ் ஷாஃபியீ தன் சிந்தனைப் பள்ளியில் ஒப்புநோக்கலை(கியாஸ்) ஒரு அங்கமாகக் கொண்டிருந்தாலும், அதில் ஒரு தெளிவான அழுத்தம் இருக்கவில்லை.

இத்தகைய அறிவுசார் சூழலில் இருந்த தாவூத் அல் அஸ்ஃபஹானிக்கு ‘நான் புதிதாக ஒன்றும் உருவாக்கவில்லை. பொதுவாகப் பார்த்தால் இமாம் ஷாஃபியீ-ம் இதைத்தான் கூறியிருக்கிறார்’ என்று சொல்வது கடினமாக இருக்கவில்லை. இப்படியாக தாவூத் அல் அஸ்பஹானி இறுதியாக, ஷாஃபியீ வழியிலிருந்து கிட்டத்தட்ட விலகி மற்ற அபிப்பிராயங்களை பொருட்படுத்தாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நேர் அர்த்தங்களை வலியுறுத்தத் துவங்கினார்.

அக்காலச் சூழலுக்கு பயணம் செய்து நாம் இதைப் பார்க்க வேண்டும். அன்றைய பாக்தாதும் ஈராக்கும் இன்றைய அமெரிக்காவைப் போல இருந்தன. ஊடக மொழியில் சொல்வதானால், பாக்தாத் உலக அறிஞர்களின் மக்காவாகத் திகழ்ந்தது. கல்வி கற்க, அறிவைப் பெருக்கிக்கொள்ள, பட்டங்கள் பெற விரும்பும் மக்கள் அங்குதான் சென்றனர். அத்தகைய சூழலில்தான் தாவூத் அல் அஸ்பஹானி வாழ்ந்தார். எனவே தாவூத் அல் அஸ்பஹானி பிறருக்கு எதிர்வினை ஆற்றும் நோக்கத்திலோ அல்லது போதிய அறிவில்லாமலோ மற்ற சட்டவியலாளர்களை, அறிஞர்களை, மேதைகளை, அவர்களுடைய கருத்துகளை அலட்சியம் செய்யவில்லை.“நீங்கள் எப்படி ஒப்புநோக்கல் (கியாஸ்) முறையை ரத்து செய்கிறீர்கள்?” என்று அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எப்படி அஷ் ஷாஃபியீ ஒப்புதல் (இஸ்திஹ்சான்) முறையை ரத்து செய்தாரோ அப்படித்தான் நானும் ஒப்புநோக்கலை ரத்து செய்தேன்” என்றார்.

இஸ்திஹ்சான் என்றால் ‘ஒப்புதல்’ என்று பொருள். ஒரு பிரச்சனைக்கு குர்ஆன் வசனம், ஹதீஸ், ஒப்புநோக்கல், ஒருமித்த கருத்து போன்ற முறைமைகளில் தீர்வு கிடைக்காத போது குர்ஆன்-ஹதீஸோடு முரண்படாத வேறு வழிகளில் அதற்கு தீர்வு காணும் முறைதான் இஸ்திஹ்சான் எனப்படும். அதாவது உகந்த ஒரு தீர்வை கண்டடைதல் என்று இதைக் கூறலாம். ஒப்புதல் என்பதை உகந்தது என்றும் புரிந்து கொள்ளலாம். ஒன்றைச் செய்வதற்கு குர்ஆன்-சுன்னாஹ்வோடு (நபிவழி) வெளிப்படையாக முரண்படாத உகந்த முறை என்று இதைச் சொல்லலாம்.

ஒப்புநோக்கல் (கியாஸ்) இல்லை

சட்டவியலாளர்கள் மத்தியில் ‘அத் தலீல்’ (சான்று) என்றொரு சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கான சான்று எங்கே? எப்படி இந்தக் கருத்தை அடைந்தீர்கள்? இதுதான் இதற்கான விடை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? போன்ற கேள்விகளுக்கு ஒரு குர்ஆன் வசனமோ நபிமொழியோ மேற்கோள் காட்டப்படும். இதுதான் ‘சான்று’ (அத் தலீல்) என்று சொல்லப்படுகிறது. சில சமயம் இத்தகைய சான்றுக்கு இரு பாகங்கள் இருப்பதுண்டு. அவ்விரு பாகங்களிலிருந்து பெறப்படும் முடிவு ஐயமற்றதாக இருப்பதில்லை. இதை ஒரு உதாரணம் மூலம் விளங்க முயற்சிப்போம்.

இறைத்தூதரிடமிருந்து வரும் ஒரு செய்தி (ஹதீஸ்) இவ்வாறு கூறுகிறது: போதை ஏற்படுத்தும் எந்தப் பொருளும் ‘க்ஹம்ர்’ ஆகும். ‘க்ஹம்ர்’ அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். (குல்லு முஸ்கிரின் க்ஹம்ர் வ குல்லு க்ஹம்ரின் ஹராம்). இதில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. இது இறைத்தூதரிடமிருந்து (ஸல்) வந்த செய்தி என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? இங்குதான் மனிதச் சிந்தனையில் உள்ள வித்தியாசங்களையும் அதன் விசாலத்தையும் நாம் எதிர்கொள்ளத் துவங்குகிறோம்.

நாம் இங்கு வரலாற்றில் இருந்த ஒரு முஸ்லிம் சமூகத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க. பல்வேறு கொள்கை, கோட்பாடுகளையும் புரிதல்களையும் நாம் ஏற்கனவே படித்துள்ளோம். இப்போது அதுபோல மற்றொரு கருத்தை நாம் சந்திக்கிறோம். போதை ஏற்படுத்தும் எந்தப் பொருளும் க்ஹம்ர் ஆகும். ‘க்ஹம்ர் அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.’  என்று சொல்லும்போது, போதை ஏற்படுத்தும் எல்லா பொருட்களும் தடை செய்யப்பட்டவை என்று இச்செய்தி சொல்கிறதா? நம் சிந்தனை ஒன்றுபோல இயங்குவதில்லை, பார்த்தீர்களா?

பெரும்பாலான சட்டவியலாளர்கள், “ஆம்! இதன் அர்த்தம் ‘போதை ஏற்படுத்தும் எல்லா பொருட்களும் தடை செய்யப்பட்டவையே’” என்று கூறினர்.ஆனால் ளாஹிரிகள், “இல்லை, இல்லை. நீங்கள் அளவு கடந்து சிந்திக்கிறீர்கள். அது உங்கள் சொந்தக் கருத்து. இச்செய்தி அப்படிச் சொல்லவில்லை. அதை படித்துப் பாருங்கள். ‘போதையூட்டும் எல்லா பொருட்களும் ‘க்ஹம்ர்’ என்றுதான் இறைத்தூதர் கூறினார். ‘போதையூட்டும் எல்லா பொருட்களும் தடை செய்யப்பட்டவை’ என்று அவர் சொல்லவில்லை.” என்று கூறினர்.

ஒரு பொருளை ஒருவன் உட்கொண்டு அதனால் அவன் மதிமயங்கினால் அது ‘க்ஹம்ர்’ எனப்படுகிறது. இன்றைய மொழியில் இதை குடிமயக்கம் என்று சொல்லலாம். மனிதச் சிந்தையை பாதிக்கும், அவனது புலனுணர்வுகளை, அவனுடைய விழிப்புநிலையை, அவனுடைய முடிவெடுக்கும் ஆற்றலை பாதிக்கும் ஒவ்வொரு பொருளையும் இது குறிக்கும். ஆக இறைத்தூதர் ‘குல்லு க்ஹம்ரின் ஹராம்’ என்று சொல்லும்போது, இவற்றை ஏற்படுத்தும் எல்லா பொருட்களும் தடுக்கப்பட்டவை என்றுதான் அவர் கூறுகிறார். இது ஒரு தீவிரமான விவாதமாக மாறக் கூடும் என்பதை நீங்கள் உணரலாம். அது அப்படித்தான் நடந்தது. அன்றைய அறிஞர் சமூகம் முழுவதும், இத்தகைய சிந்தனை முறையை, முடிவெடுக்கும் முறைகளை மிகக் கடுமையாக எதிர்த்தது.

‘போதையூட்டும் எல்லா பொருட்களும் க்ஹம்ர். ‘க்ஹம்ர்’ அனைத்தும் தடை செய்யப்பட்டவை’ என்று இறைத்தூதர் கூறுவதை, ஒப்பிட்டுப் பார்த்தால், போதையூட்டும் எல்லா பொருட்களும் தடை செய்யப்பட்டவை என்றாகிறது. இதுதான் ஒப்புநோக்கல் (கியாஸ்). இத்தகைய ஒப்புநோக்கலை ளாஹிரி சிந்தனைப் பள்ளி கேள்விக்குட்படுத்துகிறது. ‘இதன் பொருள் அதுவல்ல. இதை அப்படிப் புரிந்து கொள்ள முடியாது’ என்கிறது.

இதை மேலும் விளக்கமாகப் பார்ப்போம். அன்றைய காலத்தில் க்ஹம்ர் என்பது திராட்சை ரசத்தை நொதிக்கச் செய்து உருவாக்கப்பட்டது. எனவே க்ஹம்ர் என்பது குறிப்பான ஒரு போதைப் பொருளை சுட்டியது. இன்றோ பலவகை போதை மருந்துகள் (முஸ்கிர்) உள்ளன. ஹெராயின், கோகெய்ன், ஆம்ஃபிடமைன் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் போதையூட்டுபவை. மேலும் இவை க்ஹம்ர் போல செயல்படுகின்றன. ஆனால் அவையே க்ஹம்ர் அல்ல. அன்றைய காலத்தில் மற்றொரு க்ஹம்ர் இருந்தது. அங்கு பேரீத்த மரங்கள் அதிகம் இருந்ததால் பேரீத்தம் பழச்சாற்றை நொதிக்க வைத்து க்ஹம்ர் உருவாக்கப்பட்டது. இவை எல்லாமே மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தின. எனவே பெரும்பாலான சட்டவியலாளர்கள், ஒப்புநோக்கல் முறையைக் கையாண்டு போதையூட்டும் எல்லா பொருட்களும் தடுக்கப்பட்டவையே என்று ஒருமித்துக் கூறினர். ளாஹிரிகள் மட்டும் விதிவிலக்காக “நீங்கள் இதன் பொருளை அளவு கடந்து இழுத்துச் செல்கிறீர்கள். இந்த ஹதீஸ் அசலில் அப்படிச் சொல்லவில்லை” என்றனர்.

கே: போதையூட்டாத ஆனால் க்ஹம்ர் என்று அழைக்கப்பட்ட பொருள் ஏதேனும் உள்ளதா? அதற்கு ளாஹிரிகள் ஏதேனும் உதாரணத்தைக் கொடுத்தார்களா?

ப: அப்படி எதையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அன்று நடந்த விவாதம் முழுவதும், இந்தத் தடை (ஹராம்) திராட்சை அல்லது பேரீத்தம் பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட போதைப் பொருள்களுக்கு (க்ஹம்ர்) மட்டும் பொருந்துமா? அல்லது அதுவல்லாத பிற போதைப் பொருள்களுக்கும் பொருந்துமா? என்பதைச் சுற்றியே இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் அன்று வேறு என்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்த தகவல்கள் இல்லை.

கே: இன்றைய நவீன கால ளாஹிரிகள் கஞ்சா போன்றவற்றை அனுமதிக்கிறார்களா?

ப: அது அவர்களுடைய புரிதலைப் பொருத்து இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் முற்றிலும் சத்தார்த்தவாதிகளாக (literalists) இருந்தால், அதை வெறுக்கப்பட்டது (மக்ரூஹ்) என்றோ பகுதியளவு தடை செய்யப்பட்டது என்றோ சொல்லக் கூடும். அவர்கள் அதற்கு பரிந்து பேசமாட்டார்கள். அதேவேளை, அது தடை செய்யப்பட்டது (ஹராம்) என்றும் கூறமாட்டார்கள். ஏனெனில் நபிமொழி அப்படிச் சொல்லவில்லை.

கே: நீங்கள் சொல்லும் சம்பவம் விதிவிலக்கான ஒருஉதாரணம்தானா? அல்லது இச்சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்கள், தங்கள் சத்தார்த்தப் புரிதல்களால் மேலதிகமாக கட்டற்றவர்களாக இருக்கிறார்களா? அதேவேளை அவர்கள் கறாரானவர்களாகவும் இருக்கிறார்களா?

ப: குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் இப்படி அணுகியதால், இப்படிப் புரிந்து கொண்டதால் அவர்களை யாரும் கட்டற்றவர்கள் என்று குற்றம் சாட்டவிலை. பிறரைப்போல அவர்களும் ஒழுக்கமானவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் பூரண உளச்சான்றுடனே பேசினர். இவ்வுரையின் பிற்பகுதியில் இப்னு ஹஸ்ம் அக்கால மெய்யிலைக் கற்றார் என்றும், அறிவுசார் தளத்தின் உச்சத்தில் இருந்தார் என்றும் நாம் படிப்போம். உளச்சான்றுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் அப்படிக் கூறினர். பிறரிடமிருந்து மாறுபட்டு நிற்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. தங்களால் இயன்ற அளவு துல்லியமாக குர்ஆன் வசனங்களை புரிந்து கொள்ளவும், இயன்ற அளவு உளச்சான்றோடு நடந்து கொள்ளவும்தான் அவர்கள் விரும்புகின்றனர். அதன் விளைவாக அவர்கள் கண்டடைந்ததுதான் இத்தகைய புரிதல்.

பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பார்ப்பொம்: நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (8:38)

இதை பார்க்கும் ளாஹிரிகள், “இவ்வசனம் ‘அல்லதீன கஃபரு’ என்று சொல்வதால் இது இறை மறுப்பாளர்களையே (காஃபிர்) குறிக்கிறது. உங்களுடைய கருத்தை அல்லாஹ் சொல்வதாக ஏற்றிச் சொல்லாதீர்கள்” என்று சொல்கின்றனர். ஆனால் பிற —பெரும்பாலான— சட்டவியலாளர்களோ, “இதில் அல்லதீன கஃபரு என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவர்களை ஒத்த பண்புகளைக் கொண்ட இணைவைப்பாளர்கள் (முஷ்ரிகீன்), அநியாயக்காரர்கள் (ளாலிமீன்) போன்றோருக்கும் இது பொருந்தும்” என்கின்றனர். இங்கு மீண்டும் ஒரு கருத்து வேறுபாட்டை, மற்றொரு வியாக்கியாணத்தை, மற்றொரு புரிதலை பார்க்க முடிகிறது. அவர்கள் சத்தார்த்த ரீதியில், ‘அல்லாஹ் இங்கு அல்லதீன கஃபரு என்று கூறுகிறான் எனவே வார்த்தைகளோடு விளையாடாதீர்கள்’ என்பது போல கூறுவர்.

ஒப்புநோக்கலின் ஒரு முறைமை இந்த வசனத்தில் உள்ளடங்கியுள்ளதை, மனிதச் சிந்தனை உணர்கிறது. ஏனெனில் அல்லதீன கஃபரு என்பவர்களுக்கு இது பொருந்தும் எனில், இந்த வரைமுறையை ஒத்த பிறருக்கும் இது பொருந்தும். அவர்களும் தங்கள் பகைமையை கைவிட்டால் அல்லாஹ் அவர்களையும் மன்னித்துவிடுவான்.ஆனால் ளாஹிரிகள், “இல்லை இல்லை. இந்த ஒப்பு நோக்கலை நாங்கள் ஏற்க மாட்டோம். இவ்வசனம் இதைத்தான் சொல்கிறது. இதன் அர்த்தம் இதுதான். நாங்கள் புரிந்துகொண்டது இதுதான். இதற்கு மேல் நீங்கள் எதுவும் ஏற்றிச் சொல்ல வேண்டாம்” என்பதாகச் சொல்கிறார்கள். இது அவர்களுடைய நேர்மையான கருத்து. மக்களில் ஒரு சில வர்க்கத்தினரை பாதுகாப்பது அல்லது வார்த்தை விளையாட்டு புரிவது அவர்களின் நோக்கம் அல்ல. தங்கள் சிந்தனை மற்றும் மனதில் உள்ள நன்னடத்தையின் பொருட்டே அவர்கள் இதைச் செய்கிறார்கள். ஆக ளாஹிரிகள் பற்றிய ஒரு பிம்பம் இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஓரவஞ்சனை

இந்த தாவூத் அல் அஸ்பஹானி, நபிமொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். ஆனால் அவருடைய சிந்தனா முறை காரணமாக அவரை மேற்கோள் காட்டுவதை பிறர் தவிர்த்தனர். “அவர் அறிஞராகவே இருந்தாலும் நாங்கள் அவரை மேற்கோள் காட்ட மாட்டோம்” என்றனர். அறிஞர்கள் மத்தியில் அவருக்கு எதிராக ஒருவித ஓரவஞ்சனைப் போக்கு இருந்ததாகத் தெரிகிறது. அவருடன் கருத்து வேறுபாடு கொண்ட ஒரே காரணத்தால் அறிஞர்கள் அனைவரும் அணிதிரண்டு “அவரை புறக்கணிக்கிறோம். அவர் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம்” என்பதாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால் அவர் தன்னளவில் ஒரு அறிஞராகவே இருந்தார்.

அதே சமயம் வேறு பல பிரச்சனைகளும் எழுந்தன. குர்ஆனின் படைப்புத்தன்மை குறித்த பிரச்சனை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இவர் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற நிலைப்பாட்டை எடுத்தார். அல் மஃமூன் காலத்தில் அப்பாஸி அரசாங்கம் இதை அதிகாரப்பூர்வமாக ஆதரித்தது என்றும் அதன் பிறகு மக்கள் மத்தியில் இக்கருத்து செல்வாக்கிழந்தது என்றும் பார்த்தோம். இந்தச் சமயத்தில்தான் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தினார். சக அறிஞர்களிடமிருந்து இவர் தனிமைப்படுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்று அவர் சொன்னதைக் கேட்ட அறிஞர்கள், இது மற்றொரு —நம் காலத்தில் குற்றம் சாட்டப்படுவது போல— நூதனம் (பித்ஆ) என்று கூறி, அவரை  நூதனவாதி (முப்ததா) என்று அழைத்தனர்.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட அவர், தான் கொண்டிருந்த கருத்துகாக மேலும் தனிமைப்படுத்தப்பட்டார். அறிஞர்கள் என்ற நிலையிலிருந்து அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் போது, அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் காட்டும் நேர்மையின் பொருட்டே அப்படிச் செய்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இவ்வரலாறுகளை படிக்கும் சமயம், அறிஞர்கள் மத்தியில் பரஸ்பரம் இந்த நல்லெண்ணம் கூட இல்லை; அவர்கள் மத்தியிலும் கசப்பான எண்ணங்கள் இருக்கிறது என்று பார்க்கும் போது சங்கடமாக உள்ளது. ஒருவர் மற்றவரோடு கருத்து வேறுபடலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் அறிவுசார் பொதுத்தளத்திலிருந்து பிறரை விலக்கி வைப்பது கூடாது.

சட்டவியல் விவகாரங்களில் ளாஹிரிகளுக்கும் பிற சட்டவியலாளர்களுக்கும் இடையே தோன்றிய மற்றொரு பிரச்சனை நேரடியாக குர்ஆனை பற்றியதே ஆகும். திருக்குர்ஆனில் ‘தூய்மையானவர்களை தவிர வேறெவரும் இதை தொட மாட்டார்கள்’ (லா யமஸ்ஸுஹு இலல் முதஹ்ஹரூன் (56:79)) என்றொரு வசனம் உள்ளது. இதை மைய நீரோட்ட அறிஞர்கள் ‘ஒருவர் —பெரிய அல்லது சிறிய— தொடக்கு நிலையில் (ஜுனுப்) இருக்கும் சமயம் குர்ஆனை தொட முடியாது’ என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால் ளாஹிரிகள் ‘இல்லை. நீங்கள் சொல்வது தவறு. அப்படிச் சொல்லும் வசனத்தைக் காட்டுங்கள்’ என்றனர்.  இந்தப் பிரச்சனையில் ‘லமாஸா’ மற்றும் ‘மஸ்ஸா’ என்ற இரு சொற்களுக்கு இடையிலுள்ள வேறுபாடு வெளிப்பட்டது. ‘லமஸா’ என்றால் உடலால் தொடுவது. ‘மஸ்ஸா’ என்றால் விளைவு அல்லது தாக்கம் என்று பொருள். ஆகவே ‘தூய்மை நிலையில் இருப்பவர்களே (தஹாரா) குர்ஆனோடு அதன் விளைவுகளால், அது ஏற்படுத்தும் தாக்கத்தால் தொடர்பு கொள்ளலாம் எனும்போது இதன் பொருள் யாரும் அதைத் தொடக் கூடாது என்பதல்ல’ என்று கூறினர்.

இவ்விவகாரத்தில் என்னுடைய கருத்து என்று கேட்டால், குர்ஆனை நோக்கி மக்களை அழைக்கிறீர்கள் எனில் அது திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தை அடைவதற்கு வசதியாக, குர்ஆன் எல்லோரும் எளிதில் அடையும் இடத்தில் இருக்க வேண்டும். அவர்கள் அதிலுள்ளதைப் படித்து புரிந்து கொள்ளட்டும். தூய்மை நிலை (தஹாரா) என்பதைக் காட்டி அவர்களைத் தடுக்க முடியாது.

அஹ்மது இப்னு ஹம்பலோடு

தாவூத் பாக்தாதில் வசித்த போது ஒரு நிகழ்வு நடந்தது. அஹ்மது இப்னு ஹம்பலின் காலத்தில் வாழ்ந்த தாவூத், அவரை சந்திக்க விரும்பினார். ஆனால் இப்னு ஹம்பல் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். பல முறை முயற்சித்தும் தாவூதால் இப்னு ஹம்பலை சந்திக்க முடியவில்லை. தன்னுடைய வகுப்புகளில் தாவூதை அனுமதிக்க முடியாது என்பதாக இப்னு ஹம்பல் சொல்லிவிட்டார். எனினும் இப்னு ஹம்பல் போன்ற ஒரு அறிஞரின் பாடத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் தாவூத், இப்னு ஹம்பலுடைய மகன் சாலிஹிடம் சென்று “உங்கள் தந்தை தன் வகுப்புக்கு என்னை அனுமதிப்பதில்லை. நான் அதில் பங்கேற்க விரும்புகிறேன். எனவே எப்படியாவது அவரை சம்மதிக்க வைக்க முடியுமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட சாலிஹ், தன் தந்தையிடம் சென்று, “உங்கள் வகுப்புகளில் ஒருவர் கலந்து கொள்ள விரும்புகிறார்” என்றார். இப்னு ஹம்பல் “அவர் யார்?” என்று கேட்க, தாவூதின் பெயரை குறிப்பிட விரும்பாத சாலிஹ் “அவர் உங்கள் அபிமானி. உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல நாட்களாக யோசிக்கிறார். அதற்காக உங்கள் அனுமதியை கோருகிறார்” என்று பதிலளித்தார். “இருக்கட்டும்! முதலில் அவர் யார் என்று சொல்” என்று இப்னு ஹம்பல் மீண்டும் கேட்க, “அவர் தாவூத்” என்று மகன் சொன்னார். இதைக் கேட்ட இப்னு ஹம்பல், “இல்லை. அவரை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார். இப்படியாக இப்னு ஹம்பல் தன் வகுப்புகளில் கலந்துகொள்ள தாவூதை அனுமதிக்கவே இல்லை.

இதைப் படிக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. ஒருவரை தன் வகுப்புகளில் அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? நீங்கள் அவருடன் கருத்து வேறுபாடு கொள்வது இருக்கட்டும். மக்கள் கருத்து வேறுபாடு கொள்பவர்கள்தான். ஆனால் அவருடைய கருத்துகளை கவனிப்பதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? இப்னு ஹம்பல் அவரை  தன் வகுப்பில் அனுமதித்திருக்கலாம். அவருடைய பேச்சைக் கேட்க விருப்பமில்லை எனில், அதை அவரிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் ‘அவரை வகுப்பிலேயே அனுமதிக்க மாட்டேன்’ என்று சொல்வது நமக்கு உகந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இதுவும் நம் வரலாற்றின் ஒரு பாகம்தான்.

கே: தாவூத் அள் ளாஹிரியின் பண்பு மோதல் போக்கு கொண்டதாக இருந்ததா? அதனால் அவர் அனுமதிக்கப்படவில்லையா?

ப: இல்லை. அவர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் பேச்சாற்றல் மிக்கவராகவும், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியவராகவும் அறியப்பட்டார். விவேகம் மிக்கவராகவும், தக்க ஆதாரங்களோடு பேசுபவராகவும் இருந்தார். ஆதாரங்களின்றி பேசுபவராகவோ, கேள்வி கேட்கப்படும்போது விடையின்றி அந்நேரத்தில் யோசித்துக் கொண்டிருப்பவராகவோ அவர் இருக்கவில்லை. கேள்விகளுக்கு தக்க பதில்களை கொண்டிருந்தார். மொத்தத்தில் அவர் ஒரு அறிஞர்.

கே: ‘”இறைத்தூதர் ஆரஞ்சுப் பழம் சாப்பிடாததால் நானும் சாப்பிடமாட்டேன்” என்று இப்னு ஹம்பல் கூறினார்’ என்று பார்த்தோம். இதுவும், சத்தார்த்தவாதிகளாக இருக்கும் ளாஹிரிகளை ஒத்த பண்பில்லையா?

ப: ஆம். இந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் இருவருக்கும் ஒற்றுமை இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் பொதுவாகப் பார்த்தால் இருவருக்கும் இடையில் வேறு ஒற்றுமைகள் எதுவும் இல்லை.

மேலும் தாவூத் அள் ளாஹிரி, மனதில் தோன்றியதை மிகவும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேசுபவராக அறியப்பட்டார். அப்படியிருந்தும் அஹ்மது இப்னு ஹம்பலின் மகனிடம் “நான் அமைதியாக இருப்பேன்; பதட்டப்பட மாட்டேன்; தோன்றியதையெல்லாம் பேச மாட்டேன்” என்று சொல்லி அதிகம் விட்டுக்கொடுத்துப் பேசினார். ஒரு மனிதர், ஒரு அறிஞரை சந்திப்பதற்கு இந்த அளவு இறங்கிப் போகத் தேவை இல்லைதான். அப்படி இருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தாவூத், இன்றைய மொழியில் சொல்லப்படுவது போல, பக்திமானாகவும், அற விழுமியங்களை கடைபிடிப்பவராகவும் இருந்தார். குறைந்த அளவு வருமானத்தை ஈட்டுபவராகவும், வசதியான குடும்பப் பின்னணி இல்லாதவராகவும் இருந்தார். மக்கள் அறிஞர்களை சந்திக்க வரும் போது அவர்களுடன் நல்லுறவு பேணும்பொருட்டு பரிசுகள் வாங்கி வருவர். ஆனால் முன்னிருந்த பிற சட்டவியலாளர்களைப் போலவே இவரும் அப்பரிசுகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

மேலும் அவர் பணிவு மிக்கவராக இருந்தார். இன்றைய மொழியில் சொல்வது போல, ஜனரஞ்சகமானவராக இருந்தார்; மக்களோடு மக்களாக காணப்பட்டார். சில அறிஞர்கள் மக்களிடமிருந்து விலகி ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர். ஆனால் தாவூத் அப்படிச் செய்யவில்லை. கடை வீதிகளிலும் பள்ளிவாசல்களிலும் மக்களோடு மக்களாகக் கலந்து, சாதாரண ஒரு மனிதராகவே வாழ்ந்தார். தன்னுடைய அறிவு அல்லது ‘சமயம் சார்ந்த தகுதிகளைக்’ கொண்டு தன்னை மேலானவர் என்று ஒருபோதும் அவர் கருதவில்லை.

கண்மூடி பின்பற்றல்

தாவூத் பற்றி நீங்கள் அறிய வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால், அவர் கண்மூடிப் பின்பற்றலை (தக்லீத்) நூறு சதவீதம் எதிர்த்தார். எந்த நிலையிலும், யாரும் யாரையும் பின்பற்றக் கூடாது (மம்னூ மன்ன அல் முத்லகன்) என்றார். இதுவும், பல பின்பற்றாளர்களை, அபிமானிகளைக் கொண்டிருந்த பிற அறிஞர்களுக்கு எதிராக, அவரை நிறுத்தியது.

கல்வியறிவற்ற ஒருவர் (ஆமி) கூட கண்மூடிப் பின்பற்றல் முறையை பயன்படுத்த முடியாது என்றார் அவர். அப்படிப்பட்ட ஒருவரும் சிந்தனா முயற்சி (இஜ்திஹாத்) செய்ய வேண்டும் என்றார். தனக்கு இருக்கும் அறிவை —அது எவ்வளவு குறைவாக இருந்தாலும்— வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். ஒருவர் அறவே அறிவற்றவராக, ஒன்றும் புரியாதவராக இருந்தால், அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு, அவர் பிறரிடம் கேட்டு அறிவைப் பெற வேண்டும் என்றும் பிறரை அப்படியே பின்பற்றி பின்பற்றாளர் (முகல்லித்)ஆவதற்கு கேட்கக் கூடாது என்றும் கூறினார். அவர் கண்மூடிப் பின்பற்றலுக்கு முற்றிலும் எதிராக இருந்தார். அறிவற்ற ஒருவர் மற்றவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ளும்படியான பதில் கிடைக்கவில்லை எனும்போது, விடை கிடைக்கும் வரை மற்றவர்களிடம் கேட்க வேண்டும் என்றும், இப்படியாக சிந்தனா முயற்சி செய்வதற்கு பழக வேண்டும் என்றும் கூறினார். இப்படியே கேட்டுக் கேட்டு அதில் பெறும் பதில்களைக் கொண்டு அவர்கள் தங்கள் புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மூலபாடங்களை (அந் நஸ்) —குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகளை— கற்றறிவதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு என்று அவர் நம்பினார். கண்மூடிப் பின்பற்றுவதால் இதில் தடை ஏற்படுகிறது, எனவே அதைத் தடுக்க வேண்டாம் என்றார் அவர். அவர் இன்று நம்மோடு இருந்திருத்தால் இக்கேள்விகளுக்கு எப்படி பதிலளித்திருப்பார் என்பதற்கான என் புரிதலை உங்கள் முன்வைக்கிறேன். “ஒவ்வொரு மனிதனிடத்தும் இக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் சரளமாக இயல்பாக வழிந்தோடுவன. நீங்கள் இதில் குறுக்கிடுகிறீர்கள்” என்று அவர் சொல்லியிருப்பார்.

கே: அரபு மொழி பிரதான மொழியாக இல்லாத பகுதிகளில் வாழும் மக்கள், குர்ஆனைப் புரிந்து கொள்ளாமல் அதை எப்படி பின்பற்ற முடியும்?

ப: அத்தகைய ஒருவர், அதை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். வேறொருவரை அப்படியே பின்பற்றுவதை விட இது சிறந்தது. அந்த வேறொருவர் அவருடை வாழ்க்கைக்கு பொறுப்பாவார். இவர் தன் வாழ்வுக்கு பொறுப்பாவார். எனவே குறைந்தபட்சம் ஓரளவாவது தகவல்களை சேகரியுங்கள் என்றார். ஏனெனில் கண்மூடிப் பின்பற்றும் முறையானது தேவையான அறிவைப் பெறுவதை தடுக்கிறது. எனவே அவருடைய கருத்துப்படி, ஒருவர் சுயமாக பெற்ற சிறிதளவு அறிவு கூட எதுவுமே இல்லாமல் பிறர் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வதைவிடச் சிறந்தது.

இதை அறிந்த மற்ற அறிஞர்கள் —நான் இச்சொற்களை பயன்படுத்த விரும்பவில்லை; ஆனால் இவற்றைப் படிக்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது— ‘இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது’ என்பது போல கூறினர். காரணம் இவர் அனைவரையும் முஜ்தஹித்களாக (சிந்தனா முயற்சி செய்பவர்களாக) மாற்ற முயற்சிக்கிறார். அப்படிச் செய்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்றாகிவிடும். பொதுமக்கள் மத்தியில் தாவூத் வாய்ப்புகள் பெறுவதிலிருந்து அவரை அந்நியப்படுத்துவதில் இதுவும் ஒரு அங்கமாகச் சேர்ந்துவிட்டது.

இத்தனைக்கு மத்தியிலும், இச்சிந்தனா முறை பரவத் துவங்கியது; சில பற்றாளர்களை வென்றெடுக்கத் துவங்கியது. ஒரு விஷயத்தில் ளாஹிரிகள் முரண்பட்டால் அதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று பிற அறிஞர்கள் கருதும் அளவுக்கு இது சென்றது. அதாவது ளாஹிரிகள் அல்லாத பிற அறிஞர்களின் ஒருமித்த கருத்துதான், ஒருமித்த கருத்தாகக் கொள்ளப்படும். ளாஹிரிகளின் கருத்து கணக்கில் கொள்ளப்படாது. அவர்கள் அவ்விஷயத்தை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை என்ற நிலை உருவானது.

இந்த சிந்தனாமுறை பரவக் காரணமாக இருந்தது அதில் இயற்றப்பட்ட புத்தகங்களும் தாவூத் அல் அஸ்பஹானியின் மாணவர்களும் ஆவர். குறிப்பாக அவருடைய மகன், அபூ பக்கர் முஹம்மது இப்னு தாவூத், இச்சிந்தனாமுறையை பிரபலமாக்குவதில் தந்தைக்கு பெரிதும் உதவினார். இஸ்லாத்தின் 3-ம் மற்றும் 4-ம் நூற்றாண்டுகளில் இச்சிந்தனைப் பள்ளி ஈராக் முழுவதும் பரவியது. அங்கு ஹனஃபி, ஷாஃபியி மற்றும் மாலிகி சிந்தனைப் பள்ளிகளுக்கு அடுத்து நான்காவது சிந்தனைப் பள்ளியாக இது கருதப்பட்டது. ஈராக்கில் ஒரு சமயத்தில் ஹன்பலி சிந்தனைப் பள்ளி மிகப் பிரபலமாக இருந்தது. ஆனால் அந்த 200 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முறை, ளாஹிரி சிந்தனைப் பள்ளி ஹன்பலி சிந்தனைப் பள்ளியை விட பல மடங்கு பிரபலமாக இருந்தது. பின்னர் ஹிஜ்ரி 5-ம் நூற்றாண்டில் அஹ்மது இப்னு ஹன்பலின் மாணவர் அபூ யஃளா வந்த பிறகு ளாஹிரி சிந்தனைப் பள்ளியின் செல்வாக்கு குறைந்து அது சுருங்கத் துவங்கியது.

அந்தலூசில்

அடுத்து இந்த சிந்தனா முறை அல் அந்தலூஸில் எப்படி வளர்ந்தது என்று பார்ப்போம். அங்கு இப்னு ஹஸ்ம் என்றொரு பிரபலமான நபர் இருந்தார். இப்னு ஹஸ்முக்கும் அபூ யஃளாவுக்கும் இடையே அறிவுசார் பூசல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இருவரும் பல்வேறு கருத்துக்களை பரிமாறுவதும் அதை முஸ்லிம்கள் கவனிப்பதுமாக இருந்தது. இச்சிந்தனாமுறை ஈராக்கிலிருந்து அல் அந்தலூசுக்கு எப்படி இடம்மாறியது? ஹி. 3-ம் நூற்றாண்டில் கணிசமான அறிஞர்கள் அல் அந்தலூசிலிருந்து பாக்தாதுக்குச் சென்றனர். அன்று பாக்தாதும் ஈராக்கும் இஸ்லாமிய அறிவுக்களத்தின் மையமாக இருந்தன என்று ஏற்கனவே பார்த்தோம். இதில் பெரும்பாலானவர்கள் குர்துபாவைச் சார்ந்த அறிஞர்களாக இருந்தனர். இன்று படித்து பட்டம் பெறுவதற்காக மக்கள் பல்கலைகழகங்களுக்கு செல்வது போல அறிவைத் தேடியவர்களாக அவர்கள் அங்கு சென்றனர்.

அங்கு இருந்த போது அவர்கள் பல அறிஞர்களை சந்தித்தனர். அஹ்மது இப்னு ஹன்பல், தாவூத் அல் அஸ்பஹானி போன்றோரையும் அவர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ளாஹிரி சிந்தனைப் பள்ளியின் அறிமுகம் கிடைத்தது. மாணவர்-அறிஞர் என்ற ரீதியில் கல்வி கற்கும் பொருட்டு இச்சந்திப்புகள் நடந்தன. இங்கு பெற்ற அறிவை அவர்கள் தங்கள் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். தாவூத் அல் அஸ்பஹானி கூறுவதையும், அஹ்மது இப்னு ஹன்பல் கூறுவதையும், பிற சட்டவியலாளர்கள் கூறுவதையும் தங்கள் பகுதி மக்களிடம் விளக்கிக் கூறினர். இதிலிருந்து ளாஹிரி சிந்தனைப் பள்ளி ஆர்வலர்களை வென்றெடுக்கத் துவங்கியது. ‘இது சரியாகப் படுகிறதே’ என்று சிலர் கூறினர். இவ்வாறாக இச்சிந்தனைப் பள்ளி மீது அவர்கள் ஆர்வம் கொள்ளத் துவங்கினர்.

இதில் ஒருவர்தான் முன்திர் இப்னு சயீத். சிறந்த பேச்சாளராக இருந்த அவர், அல் அந்தலூசில் நீதிபதியாகவும் இருந்தார். ஹி. 355-ல் அவர் மறைந்தார்.அக்கல்வியாளர்கள் நாடு திரும்பி தங்கள் மக்களோடு தொடர்பு கொண்ட பிறகு, அல் அந்தலூசில் ளாஹிரிய்யா சிந்தனைப் பள்ளி பிரபலமடையத் துவங்கியது. அங்கு ஹனஃபி, ஷாஃபியி மற்றும் ஹன்பலிகளை விட ளாஹிரிய்யா பிரபலமாக இருந்தது. ளாஹிரி சிந்தனா முறையை விட கூடுதல் பிரபலமாக இருந்த ஒரு சிந்தனைப் பள்ளி என்றால் அது மாலிகி சிந்தனா முறை மட்டுமே. பின்னாட்களில் இவர்கள் இருவருக்கும் இடையே அறிவு நயம் வாய்ந்த மோதல் ஏற்பட்டது.

அல் அந்தலூசில் மஸ்வூத் இப்னு சுலைமான் என்றொரு அறிஞர் இருந்தார். இப்னு ஹஸ்ம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இவர்தான் அவருக்கு ளாஹிரி சிந்தனைப் பள்ளியை கற்றுக் கொடுத்தார். ஹி. 426-ல் இவர் மரணமடைந்தார். மஸ்வூத் —நம் கால மொழியில் சொல்வதானால்— ஒரு தாராளவாத சிந்தனையாளராக அறியப்பட்டார். சுயமாக சிந்திக்கக் கூடியவராக இருந்த அவர், தன்னை எந்தவொரு சிந்தனா முறையை பின்பற்றுபவராகவும் கருதவில்லை. எந்தவொரு அறிஞரையும் கண்மூடிப் பின்பற்றக் (தக்லீத்) கூடாது என்றும் அப்படியே யாரையாவது பின்பற்ற வேண்டுமெனில் இறைத்தூதர்களை மட்டுமே அப்படி பின்பற்ற முடியும் என்றார். இவரும் பணிவான ஒருவராகவே இருந்தார். நாம் பேசும் பெரும்பாலானவர்கள் பணிவு மிக்கவர்களாகவும் அறிஞர்களாகவும் இருந்தனர் என்பதை நினைவில் கொள்க. அறிவை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட அவர், அது எங்கிருந்து கிடைத்தாலும், யாரிடமிருந்து கிடைத்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டார். அறிவைத் தேடுவதில் அவர் எந்தவிதத் தடைகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இப்னு ஹஸ்ம்

இப்னு ஹஸ்ம் ஹி. 384-ல் பிறந்தார். 72 ஆண்டுகள் வாழ்ந்த அவர், ஹி. 456-ல் மறைந்தார். அவருடைய அசல் பெயர் அலீ இப்னு அஹ்மது இப்னு சஈத் இப்னு ஃகாலிப் இப்னு சாலிஹ். இதற்கு அடுத்து வரும் அவருடைய இரு பாட்டனார் பெயர்களை நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. அப்பெயர்களைச் சொல்வது உங்கள் சிந்தனைகளில் தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்கிறேன். அப்பெயர்களைக் கேட்டு நம் சிந்தனை ஆற்றல் நாசமடைவதற்கு முன் நான் சொல்லும் தகவல்கள் உங்களை அடைய வேண்டும் என நினைக்கிறேன். ஆகவே ஒரு சில மாதங்கள் கழித்துக் கேளுங்கள். அப்போது சொல்கிறேன். இப்னு ஹஸ்ம் அபூ முஹம்மது என்று அவர் அழைக்கப்பட்டார். இப்னு ஹஸ்ம் என்பது அவருடைய பெயராக இருந்தது. அவருடைய தந்தையின் பெயர் அஹ்மது. அவர் அந்தலூசில் உமவிகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு நன்கறியப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்.

இங்கு ஒரு சிறிய வரலாறை பார்த்துவிடுவோம். இன்றைய ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் அப்போது உமவிகளுக்கும் அப்பாஸிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உமவிகள் தங்கள் இறுதி காலத்தில் இருந்தனர். பிற முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளால் பொதுக்கருத்து அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. உமவிகள் இறங்கு முகத்தில் இருந்த போது அப்பாஸிகள் ஏறுமுகத்தில் இருந்தனர். அப்போது சில உமவிகள், லிவான்ட் பகுதியை விட்டு அல் அந்தலூசுக்குச் சென்று அங்கு ஆட்சியாளர்கள் ஆயினர். இப்படியாக உமவி ஆட்சி வர்க்கத்தோடு இணக்கமாக இருந்த ஒரு குடும்பம்தான் இப்னு ஹஸ்மின் குடும்பம். அவருடைய தந்தை அந்தலூசின் அரசாங்கப் பணியாளர்களுள் ஒருவராக இருந்தார்.

இப்னு ஹஸ்மின் பூர்வீகம் பாரசீகத்தில் உள்ளது என்று சொல்லும் ஒரு தகவல் காணக் கிடைக்கின்றது. ஆனால், சற்றுமுன் நான் உங்களிடம் சொல்ல மறுத்த தகவலோடு இது முரண்படுகிறது. எனினும் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது அவசியம் எனக் கருதுகிறேன்.அபூ ஹய்யான் அத் தவ்ஹீதி என்றொரு பிரபல அறிஞர் இருந்தார். வரலாறு மற்றும் வரலாற்று ஆளுமைகள், செல்வாக்கு மிக்க அறிஞர்கள் மற்றும் பலர் குறித்து இவர் சில நூல்களை இயற்றியுள்ளார். இவர் இப்னு ஹஸ்ம் பாரசீகப் பின்னணி கொண்டவர் என்றும் அவருடைய குலப் பின்னணி பற்றி குறிப்பான தகவல்கள் இல்லை என்றும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வரை இவர்கள் கிறித்துவர்களாக இருந்தனர் என்றும் இழிவாகப் பேசி அவரை மட்டம்தட்டுகிறார். ஆனால் இப்னு ஹஸ்மை அரேபியா அல்லது பாரசீகத்தோடு தொடர்புபடுத்தும் தகவல்களோடு இது முரண்படுகிறது. இதுதான் உண்மை என்று நான் சொல்ல வரவில்லை. எனினும் இப்படியும் ஒரு தகவல் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதால் இதைச் சொல்கிறேன்.

பெரும்பலான சட்டவியலாளர்களின் பிறந்த தேதி குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இப்னு ஹஸ்மின் பிறந்த தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் துல்லியமாக நமக்குக் கிடைக்கின்றன. அவர் ஹி. 384-ல் ரமழானின் கடைசி நாளில் அதிகாலை மற்றும் சூரிய உதயத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் பிறந்தார்.அவர் குர்துபா நகரின் கிழக்குப் பகுதியில் பிறந்தார். அறிவுசார், கலாச்சார மற்றும் அறிவியல் துறைகளில் பாக்தாதைத் தொடர்ந்து குர்துபாவும் ஒரு நவீன மையமாக இருந்தது. அது இன்றைய இஸ்தான்பூலைப் போல இருந்தது. இஸ்தான்பூலைச் சேர்ந்தவர்கள், ஓரே சமயத்தில் ஐரோப்பியர்களாகவும் முஸ்லிம்களாகவும் இருப்பதில் பெருமை கொள்கின்றனர். அப்படித்தான் அன்றைய குர்துபாவும் இருந்தது.

ஆக அந்நாட்டு நிர்வாகத்தில் அங்கம் வகித்த ஒரு செல்வந்தக் குடும்பத்தில் அவர் பிறந்தார். வணிகராக இருந்த அபூ ஹனீஃபாவும் செல்வந்தராக இருந்தார் என்று பார்த்தோம். இப்னு ஹஸ்மைப் பொருத்தவரை அவரது குடும்பம் —சில காலத்துக்காவது— பிரபுத்துவ குடும்பமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பின்னாட்களில் அவர்களுடைய செல்வ வளம் குன்றிவிட்டது. எனினும் இப்னு ஹஸ்ம் தன் 15-வது வயது வரை ஒரு உயர்மட்ட குடும்பத்தில்தான் வாழ்ந்தார் என்று சொல்லலாம். சிறுவயது முதலே அவர் புத்திகூர்மை உடையவராகவும் சிந்திக்கக் கூடியவராகவும் இருந்தார்; கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு அமைந்த சொகுசான வாழ்வும் செல்வமும், கல்வி கற்பதில் அவர் கொண்டிருந்த பேரார்வத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. கல்வி கற்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

பிற சட்டவியலாளர்களைப் போலவே இவரும் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்தார். அவர் மேல்தட்டு குடும்பத்திலிருந்து வந்தார் என்று பார்த்தோம். இத்தகைய குடும்பங்களில் வழக்கமாக நடப்பதைப் போல அவரை அவருடைய பெண் உறவினர்கள் கவனித்துக் கொண்டனர். அவர்கள்தான் அவரை குர்ஆன் மனனம் செய்ய வைத்தனர். அவர் பிற வகுப்புகளுக்குச் சென்றார் என்றாலும் குர்ஆன் மனனம் செய்வதற்கென்று எந்த அறிஞரிடமும் செல்லவில்லை. அவர் குர்ஆனை மனனம் செய்ததென்பது முற்றிலும் அவருடைய பெண் உறவினர்களின் மூலமே நிகழ்ந்தது. அவர்கள் அவரை நன்கு கவனித்துக் கொண்டனர். குறிப்பாக அவர் பருவ வயதை எட்டிய போது அவர் வழிதவறி பாவங்களில் வீழ்ந்துவிடாமல் இருக்க உதவினர்.

அவரது 15-வது வயதில் அவருடைய செல்வ வளம் குன்றியது. இதன் பொருள் அவர் மேல்தட்டு நிலையிலிருந்து கீழ்நிலைக்கு மாறிவிட்டார் என்பதல்ல. நடுத்தட்டு நிலைக்கு மாறினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு பெரும் சமூக பொருளாதார வீழ்ச்சியாக இருக்கவில்லை. அதற்குப் பின்னரும் அவர் ஓரளவு வசதியுடன்தான் வாழ்ந்தார். மேலும் அன்று குர்துபாவில் நடந்து கொண்டிருந்த சில அரசியல் நிகழ்வுகளால் அவருடைய குடும்பம் அந்நகரத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இது ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியது. இதனால் இதுவரை சந்தித்திராத சில சங்கடங்களை அவர் சந்திக்க நேரிட்டது. ஆனாலும் அவர் உறுதியுடன் இருந்தார்.

குர்துபாவில் இருந்து அல் மிரியாவுக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். நேரமின்மை காரணமாக, அல் மிரியா என்ற அரபுப் பெயருக்கு இணையான லத்தீன் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. குர்ஆனை மனனம் செய்த பின், அவர் நபிமொழிகளைக் கற்றார். பின்னர் தர்க்கவியல், மெய்யியல் மற்றும் சட்டவியல் கல்வி பயின்றார்.அச்சமயத்தில் அல் அந்தலூஸ் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் முதன்மையாக இருந்த மாலிகி சிந்தனைப் பள்ளியை கற்கத் துவங்கினார்.

குறிப்பு: இவ்வுரையின் தொடர்ச்சி நமக்குக் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *