நெதன்யாஹுவின் போர் தொடங்கி ஓராண்டு ஆகிறது; சின்வாருடைய போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது – டேவிட் ஹெர்ஸ்ட்

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

Middle East eye என்ற ஊடகத்தின் தலைமை ஆசிரியரான David Hearst நிகழ்த்தி உள்ள Netanyahu’s war is a year old, Sinwar’s war has only just started என்ற உரையை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்.

♣ ♣ ♣ ♣ ♣

கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி, நான் உட்பட எந்த கருத்துரையாளரும், ஒரு வருடம் ஆகியும் இந்தப் போர் இன்றும் உச்சகட்ட மூர்க்கத்துடன் நடத்தப்படும் என்று கணிக்கவில்லை. 1948-ல் இஸ்ரேல் தனது அரசை நிறுவியபோது, இவ்வளவு நீண்ட ஒரு போரை எதிர்கொள்ளும் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இதுவரை இஸ்ரேல் நிகழ்த்திய போர்கள் அனைத்தும், உச்சபட்ச ஆற்றலின் சுருக்கமான வெளிப்பாடுகளாகவே இருந்துள்ளன. எனினும் இஸ்ரேல் வெற்றிக்கான முழு முயற்சியை செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

இஸ்ரேல் காஸாவை வாழத் தகுதியற்றதாக ஆக்கிவிட்டது. அதன் 70 சதவீததிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இப்போது இஸ்ரேல் லெபனானின் டயர் மற்றும் பெய்ரூட் பகுதியை தகர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் வெள்ளைக் கொடியை உயர்த்தவில்லை.

41,000 க்கும் அதிகமானவர்களை நேரடி குண்டு வீச்சினாலும், அதைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமானவர்களை பிற காரணங்களாலும் இழந்து கூடாரங்களில் இருக்கும் மக்களிடம் கிளர்ச்சிக்கான அறிகுறிகள் இல்லை. இந்த மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்; நோயுற்று இருக்கிறார்கள்; இரண்டாவது குளிர்காலத்தை கூடாரங்களில் எதிர்கொள்ளப் போகிறார்கள்; தினமும் குண்டுகள் வீசப்படுகின்றன. இத்தனைக்குப் பிறகும் அவர்கள் பணியவில்லை. முந்தைய தலைமுறை பாலஸ்தீனர்களுக்கு இந்த அளவு துன்பங்கள் வந்ததில்லை. ஆனால் யாரும் தப்பி ஓடவோ படகுகளை நோக்கிச் செல்லவோ இல்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் யஹ்யா சின்வார் ஆகிய இப்போரின் இரண்டு தளபதிகளிடமும் ஆரம்பத்தில் இருந்தே இரு தெளிவான உத்திகள் உள்ளன.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாஹு  பணயக் கைதிகளை மீட்பது, அனைத்து எதிர்ப்புகளையும் தகர்ப்பது, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, இஸ்ரேலை முன்னிறுத்தி பிராந்தியத்தை மறுசீரமைப்பது என நான்கு இலக்குகளை அறிவித்தார்.

ஆனால் பணயக் கைதிகளின் குடும்பங்கள், நெதன்யாஹுவின் பேச்சு வார்த்தைக் குழுவினர், ஹமாஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கு விரைவிலேயே ஒரு விஷயம் தெளிவாகியது. நெதன்யாஹுவிற்கு பணயக் கைதிகளை மீட்கும் எண்ணமே இல்லை. அவர் ஹமாஸை சுக்குநூறாக்குவதிலும் தோல்வியுற்றார்.

இருமுறை அரசாங்கத்தை மாற்ற முயற்சித்தும், அந்த இயக்கம் இன்றும் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இஸ்ரேலிய துருப்புகள் இல்லாத பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் எழுந்து வந்து விடுகிறது. பிரச்சனைகளின் போது ஒழுங்கை நிலைநாட்டவும் உதவிகளை ஏற்பாடு செய்யவும் சாதாரண உடையில் இருக்கும் அதிகாரிகள் சில மணி நேரத்தில் வந்து விடுகிறார்கள்.

ஹமாஸ் பலவீனமடைந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இஸ்ரேலிய துருப்புகளால் இரண்டு முறை  ஆக்கிரமிக்கப்பட்டு, பாழாக்கப்பட்ட கான் யூனுஸில் இருந்து வரும் ராக்கெட்டுகளால் டெல் அவிவ் தொடர்ந்து அதிர்ச்சியடைகிறது.

கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ்

எதிர்ப்பு இயக்கங்களின் தலைவர்களை கொல்வதன் மூலம், அவற்றை செயலிழக்க வைத்து விடலாம் என்று இஸ்ரேலிய தளபதிகள் நினைக்கிறார்கள். பொறி வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்ததில் தொடங்கி, ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை தொடர் உளவுச் சதிகளால் மோசமாக தாக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 14 அடுக்குகள் கீழே உள்ள பதுங்கு குழியில் இருந்த அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ், 81 டன் வெடிபொருட்கள் மூலம் கொல்லப்பட்டார். அதன் துணைத் தலைவர் பதவியேற்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்திருக்கக் கூடும்.

ஆனால் தெற்கு லெபனானில் இப்போது ஹிஸ்புல்லா போரிடும் முறையைப் பாருங்கள். (இஸ்ரேலின் உளவு அமைப்பு) கொலானி படையணி (Golani Brigade) கண்டு பிடித்துள்ளதுபோல அது ஒரு போர்ப்படையாக செயலிழந்து போகவில்லை.

நிச்சயமாக, படுகொலைகள் குறுகிய கால நடவடிக்கைகளே. நீண்ட கால நடவடிக்கைகளாக புதிய தலைவர்கள் அமர்த்தப் படுகின்றனர்; தளவாடங்கள் மீண்டும் நிரப்பப்படுகின்றன; நினைவுகள் வஞ்சம் தீர்க்கப்படுகின்றன. இஸ்ரேலின் பயங்கரவாதம் மேலும் பயங்கரவாதத்தையே வளர்க்கிறது.

ஈரான், அணு சக்தியாகவும் பிராந்திய சக்தியாகவும் உருவெடுக்காமல் தடுப்பது நெதன்யாஹுவின் மூன்றாவது இலக்கு. ஆனால் உண்மை என்னவெனில் பாலஸ்தீன் விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் மையமாக இருந்ததில்லை. 1978-ல் நடந்த புரட்சிக்கு பின்னரே ஈரான் களத்துக்கு வந்தது. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் தாங்களாகவேதான் போராடி வந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு உண்மையான அச்சுறுத்தல் ஈரானிடமிருந்து இல்லை. அது ஜெனின் பகுதியில் இருக்கும் ஒரு இளம் பாலஸ்தீனரிடமிருந்து அல்லது ஹெப்ரானில் இருக்கும் ஒரு முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து அல்லது நகாபில் இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற ஒரு பாலஸ்தீனரிடமிருந்தே உள்ளது. ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்த இவர்கள் அனைவரும் சொந்த முடிவுகளை மேற்கொண்டுள்ளனர். யாருக்கும் (ஈரான் தலைநகர்) டெஹ்ரானின் தூண்டுதல் தேவைப்படவில்லை.

நெதன்யாஹுவின் நான்காவது இலக்கு, இஸ்ரேலை பிரதானமாக வைத்து அப்பிராந்தியத்தை மறுசீரமைப்பது. இப்போது இஸ்ரேலிய அதிகாரிகள், ‘மிதவாதிகள்’ என்று அவர்கள் வரையறுக்கும் அரபு தலைவர்களிடமிருந்து தங்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட ரீதியான ஆதரவுக் கருத்துகளைக் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் அந்தொனி பிளின்கின்

ஆனால் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் அந்தொனி பிளின்கினிடம் என்ன கூறினார் என்று அட்லாண்டிக் செய்தி நிறுவனத்தில் வந்ததை மீண்டும் ஒருமுறை பாருங்கள். முஹம்மது பின் சல்மான் பிளின்கினிடம், “நான் தனிப்பட்ட முறையில் பாலஸ்தீன் விவகாரம் குறித்து அக்கறை கொண்டுள்ளேனா? இல்லை. ஆனால் என் மக்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்” என்றுக் கூறினார். இதன் காரணமாக சவூதி அரேபியாவின் நிலை கடினமாகிவிட்டது. பாலஸ்தீன அரசு நிறுவப்பட்ட பின்னரே இஸ்ரேலை அங்கீகரிக்கும் என்று அது கடந்த வாரம் அறிவித்தது.

இப்போது அக்டோபர் 7-ம்தேதி சின்வார் கொண்டிருந்த போர்சார் இலக்குகளை பார்ப்போம். அதில் ஏதேனும் இன்று நிலைத்திருக்கிறதா என்று பார்ப்போம். அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்பு, அவருக்கு இரண்டு போர்சார் இலக்குகள் இருந்தன. ஒரு உரையில் அவர் கூறினார்: “ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் அதிக விலை கொடுக்க வேண்டும்”. மற்றொன்றில் “பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு ஒரு தெளிவான தேர்வை முன் வைக்க வேண்டும். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன பகுதிகளில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட வேண்டும் அல்லது பிராந்திய மற்றும் சர்வதேச சமூகத்தில் இருந்து இஸ்ரேல் தனிமைப்படுத்த வேண்டும்”என்றார்.

முதல் இலக்கைப் பொருத்தவரை, ஹமாஸ் நிச்சயமாக ஆக்கிரமிப்பை மிக விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,664 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 706 பேர் இராணுவ வீரர்கள். மேலும் 17,897 பேர் காயமடைந்துள்ளனர். பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் உள்ள பணம் வெளியேறத் துவங்கியுள்ளது. இந்த வருடம் மே முதல் ஜூலை வரை 2 பில்லியன் (200 கோடி) அளவு தொகை இஸ்ரேலிய வங்கிகளில் இருந்து வெளியேறி உள்ளது.

ஆனால், சின்வாரின் ஹமாஸ் இஸ்ரேலுக்கு கொடுத்த கூர்மையான அடி உளவியல் ரீதியான ஒன்றாகும். ஒரு வருடத்துக்கு முன், இஸ்ரேலிய ராணுவம் திடீரென முழுமையாக நிலை குலைந்தது இஸ்ரேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து அது இன்னும் மீளவில்லை. குடிமக்களை பாதுகாக்கும் அவ்வரசின் திறனை இது அடிப்படையில் சவாலுக்குள்ளாக்கியது.

போர் தொடங்கியதில் இருந்து, சுமார் 1,43,000 பேர் தங்கள்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,000 பகுதிகளில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலியர்கள் கிட்டத்தட்ட 15,000 முறை பதுங்கு குழிகளுக்கு (bunkers) ஓட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பின்மை வாழ்வின் நிரந்தர அங்கமாகிவிட்டது.

ஆனால் ஹமாஸ் தாக்குதலின் மிகப் பெரிய விளைவு பாலஸ்தீன் தேசத்துக்கான முன்னெடுப்பின் மீது இருந்தது. அக்டோபர் 6-ம் தேதி அது கிட்டத்தட்ட இறந்திருந்தது அல்லது புதைக்கப்பட்டிருந்தது. ஓஸ்லோ (ஒப்பந்தம்) நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காஸா தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் முற்றுகை நிரந்தரமாகியிருந்தது. யாரும் கண்டு கொள்ளவில்லை. மேற்குக்கரை இல்லாத ஒரு வரைபடத்தை ஐ.நா.வில் அசைத்தவாறு நெதன்யாஹு வெற்றி முழக்கமிட்டார்.

இஸ்ரேலுடன் சவூதி அரேபியா செய்யவிருந்த சுமூக உடன்பாடு ஒன்று மட்டும் எஞ்சியிருந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் அதிதீவிரவாத தலைமையின் கீழ், அமைதிக்காக  நிலம் என்ற கோட்பாடும் தனிநாடுகள் கோட்பாடும் கைவிடப்பட்டன. நிலத்தைக் கைப்பற்றி அதை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்து, இஸ்ரேல் வெற்றியின் விளிம்பில் இருந்தது.

1993-இல் கையெழுத்தான ஒஸ்லோ உடன்படிக்கையின் போது இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்

அக்டோபர் 7-க்குப் பிறகு, மேற்குக் கரையில், ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக்கு இருந்த ஆதரவு முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கையெழுத்திடப்பட்ட ஐந்து ஆண்டுகளில், பாலஸ்தீன் தேசத்தை உருவாக்குவதில் ஓஸ்லோ வெற்றி பெற்றிருந்தால், ஹமாஸ் போன்ற ஒரு இயக்கம் இருந்திருக்காது. ஓஸ்லோ, பாலஸ்தீன் தேசத்தை வழங்கத் தவறியது மட்டுமின்றி இஸ்ரேல் அரசு மேற்குக் கரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விரிவாக்கம் செய்யவும், நிலைபெறவும் உகந்த சூழலை ஏற்படுத்தியது. புதிய தலைமுறை பாலஸ்தீன இளைஞர்களை, தங்கள் டாக்ஸிகளை, கடைகளை விற்று துப்பாக்கிகளை வாங்கத் தூண்டிய மிகமுக்கிய காரணி இதுதான்.

பிராந்திய அளவில், அக்டோபர் 7-க்கான இஸ்ரேலின் பதில், இஸ்ரேல்-அரபு உறவுகளை ரத்து செய்யும் உரிமையை பாலஸ்தீனம் பெறாது என்று வளைகுடா நாடுகளை சம்மதிக்க வைக்க இஸ்ரேல் மேற்கொண்ட பல்லாண்டு கால முயற்சியை தலை கீழாக மாற்றிவிட்டது. இப்போது அந்த ரத்து செய்யும் உரிமை முன்னை விட அதிகமாகி உள்ளது.

சர்வதேச அளவில், பாலஸ்தீனம் உலகின் முதன்மையான மனித உரிமைப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் நீதிக்கான சர்வதேச வழக்காடு மன்றத்தில் வழக்குகள் நடைபெறுவதன் மூலம், சர்வதேச அளவில் நீதியை நிலைநாட்டும் முயற்சிகளில் பாலஸ்தீன் விவகாரம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. இங்கு இங்கிலாந்தில், சமீபகால வரலாற்றின் மிகப்பெரிய போராட்ட இயக்கத்தை இது தூண்டியுள்ளது.

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார்

இரண்டு உத்திகளில், சின்வார் செயல்படுவதாகத் தெரிகிறது. அவர் வாழ்ந்தாலும் மரணித்தாலும், அத்திட்டம் கட்டுக்கடங்காத விசையை தன்னளவில் பெற்றுவிட்டது.

நெதன்யாஹுவும் இராணுவமும், வடக்கு காஸா மற்றும் தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க முடியும் என்று நினைக்கலாம். அடுத்து மேற்குக் கரையின் பெரும் பகுதியை இணைக்க அவர்கள் நினைக்கலாம். ஆனால் எதைத் தொடங்கினார்களோ அதை அவர்களால் முடிக்க முடியாது.

கைப்பற்றப்பட்ட பகுதிகளை அமைதிக்காக திருப்பிக் கொடுப்பது அவர்களுக்கும் மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். காசாவில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட ஏரியல் ஷாரோன் அல்லது லெபனான் ஆக்கிரமிப்பை முடித்த எஹுத் பாராக்குக்கு இருந்தது போல.

சர்வதேச அளவில், இஸ்ரேல் தன் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர் இஸ்ரேலின் தாராளவாத சியோனிச பிம்பத்தை —கடுமை நிறைந்த ஒரு சுற்றுப்புறத்தில் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் புதிய நாடு— அகற்றியுள்ளது. அறமற்ற ஒரு அரக்கன் என்ற பிம்பம் பழைய பிம்பத்தை மாற்றியுள்ளது.

நெதன்யாஹுவின் போர் தொடங்கி ஓராண்டு ஆகிறது. அது பின்னோக்கிச் செல்வதாக இல்லை. சின்வாருடைய போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

யார் வெற்றி பெறுவார்? அது பாலஸ்தீனர்களின் தாங்குசக்தியை பொருத்திருக்கிறது.

“போதும்! நிறுத்திக் கொள்வோம்!” என்று சொல்பவர்கள் இருப்பார்கள்தான். ஆனால் ஓராண்டு ஆகியும் எதிர்ப்பின் ஆன்மா நிமிர்ந்து நிற்கிறது; வளர்ந்து செல்கிறது.

என் கணிப்பு சரி என்றால், இப்போர் ஒரு தொடக்கம்தான்.

மத்திய கிழக்கின் அதிகாரச் சமன்பாடு நிச்சயமாக மாறிவிட்டது. ஆனால் இஸ்ரேலுக்கோ அமெரிக்காவுக்கோ சாதகமாக அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *