இஸ்லாமிய வரலாறு – 13 / ஹம்பலி சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 13 / ஹம்பலி சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
♣ ♣ ♣ ♣ ♣
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, படிக்க எளிதாக இருப்பதற்காக இரு பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப் சேனலில் உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 02-12-2008, இடம்: வாஷிங்டன் டி.சி.
YouTube Link: Islamic History, Hanbali School of Thought
♣ ♣ ♣ ♣ ♣
இஸ்லாமிய வரலாறு பற்றிய இத்தொடர் உரையில் நாம் கணிசமான தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். முதலில் முஸ்லிம்களின் ஆரம்பகால அரசியல் வரலாறை கற்றோம். அடுத்து ஆரம்பகால அறிவுசார் —அதாவது மெய்யியல் அல்லது கோட்பாடுகள் தொடர்பான—வரலாறை அறிந்தோம். இப்போது மூன்றாவது பகுதியில் இருக்கிறோம். சட்டவியல் தொடர்பான இப்பகுதி நீளமானதாக உள்ளது. இதில் இன்றைய மக்கள் கொண்டுள்ள கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளுக்கு—குறிப்பாக அவர்கள் அன்றாடம் ஆற்றும் தனிமனிதக் கடமைகள் சார்ந்த கொள்கைகளுக்கு—வழிவகுத்த சட்டவியலாளர்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வகையில் அபூ ஹனீஃபாவில் துவங்கி, மாலிக் மற்றும் அஷ் ஷாஃபியி குறித்து அறிந்தோம். இன்று அஹ்மது இப்னு ஹம்பலை அடைந்துள்ளோம். அவரது வாழ்வின் எல்லா அம்சங்களையும் கற்பது இப்போது சாத்தியமில்லாத ஒன்று. எனவே அவருடைய வாழ்வின் முக்கிய அம்சங்கள் அல்லது சாதனைகள் என்று நாம் கருதுபவற்றைக் குறித்து மட்டும் பார்ப்போம்.
அஹ்மது இப்னு ஹம்பல் ஹிஜ்ரி 164 இல் பிறந்து ஹி. 241 இல் மறைந்தார். அப்போது அவருக்கு 77 வயது ஆகியிருந்தது. இன்றைய உரையை அவருடைய வாழ்வின் நடுப்பகுதியிலிருந்து துவங்கப் போகிறேன். அது அவருடைய வாழ்வின் மிகச் சவாலான காலகட்டம். ஹி. 218 ஆம் ஆண்டில் அஹ்மது இப்னு ஹம்பல் பள்ளிவாசலில் வழக்கம் போல வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சில காவலாளிகள் உள்ளே நுழைந்து அவரை தரதரவென இழுத்து வெளியே தள்ளினர். சாட்டையாலும் கம்பாலும் அடித்துத் துன்புறுத்தி சங்கிலியால் பிணைத்து அவரை சிறைக்கு இழுத்துச் சென்றனர். அவருடைய மாணவர்களும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்க, எல்லோர் முன்னிலையிலும் இச்சம்பவம் அரங்கேறியது.
கிட்டத்தட்ட 28 மாதங்கள் அவர் சிறையில் இருக்க நேர்ந்தது. அங்கு அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இச்செய்தி வெளியே கசிந்து அவர் படும் துன்பங்களை மக்கள் அறியத் துவங்கினர். அதன் பிறகுதான் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறையில் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளால் அவருடைய உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகியது. அவர் மீண்டும் உடல்நலம் தேற நீண்டகாலம் பிடித்தது. பிறகு மீண்டும் அவர் பள்ளிவாசலுக்குச் சென்று வகுப்புகள் நடத்தினார். இதுதான் அவருடைய வாழ்வின் உச்சகட்ட காலம் ஆகும். இச்சம்பவத்தின் பின்னணியை நாம் பின்னர் பார்ப்போம்.
அஹ்மது இப்னு ஹம்பல் இன்றைய சலஃபிகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர் என்பதை நினைவில் கொள்க. ‘சலஃப்’ என்ற சொல்லை அறிவுக் கண்ணோட்டத்தோடு அணுகி பின் நோக்கிச் சென்றால் கிட்டத்தட்ட இவர்தான் முதல் சலஃபியாக இருப்பார். சலஃபிகளுடைய சிந்தனையின் அடிச்சுவடுகளை தேடிச் சென்றால், அது நம்மை இவரிடம்தான் கொண்டு சேர்க்கும். எனவேதான் அவருடைய வாழ்வின் உச்சகட்ட நிலையை அறிந்த பிறகு, அவருடைய வாழ்வின் பிற நிகழ்வுகளை சொல்லப் போகிறேன்.
அஹ்மது இப்னு ஹம்பல், பாக்தாதில் ஹி. 164 ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார். தன் வாழ்வின் பெரும் பகுதியை பாக்தாதில் கழித்த அவர், அங்குதான் கல்வியும் கற்றார். அவர் பிறப்பதற்கு முன் அவருடைய தாய் குராசானின் மரூ என்ற நகரத்தில் வசித்தார். அஹ்மது இப்னு ஹம்பலை வயிற்றில் சுமந்த நிலையில், அவருடைய குடும்பம் பாக்தாதுக்கு இடம் பெயர்ந்தது. அவருடைய தாய், தந்தை இருவரும் அரேபியர்களாக இருந்தனர். பாரசீகப் பின்னணியைக் கொண்ட இமாம் அபூ ஹனீஃபா அல்லது கலவையான வம்சாவளியைக் கொண்டிருந்த பிற அறிஞர்கள் போலல்லாமல், அஹ்மது இப்னு ஹம்பல் தூய அரபுப் பின்னணியைக் கொண்டிருந்தார். அவர் ஷீபான் என்னும் கோத்திரத்தைச் (கபீலா) சார்ந்தவராக இருந்தார்.
அஹ்மது இப்னு ஹம்பல் என்று அறியப்படும் இவருடைய தந்தையின் பெயர் முஹம்மத். இவருடைய பாட்டனாரின் பெயர் ஹம்பல். இவர் ஏன் இப்னு ஹம்பல் என்று அழைக்கப்பட்டார் என்று நான் அறியேன். சிறு குழந்தையாக இருக்கும் போதே —ஒன்று அல்லது இரண்டு வயதில்— இவருடைய தந்தை இறந்திருக்கக் கூடும். அதன் பிறகு இவரை பராமரித்த பாட்டனாரின் பெயரைக் கொண்டு இப்னு ஹம்பல் என்று இவர் அழைக்கப்பட்டிருக்கக் கூடும். இது என் ஊகம் மட்டுமே. இதுதான் உண்மை என்று நான் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே சரியாகச் சொன்னால், இவருடைய பெயர் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹம்பல் இப்னு ஹிலால் ஆகும்.
அஹ்மது இப்னு ஹம்பலின் குடும்பம் ஆரம்பத்தில் குராசானில் இருந்தது என்று பார்த்தோம். அன்றைய முஸ்லிம் பிரதேசங்களின் அங்கமான பாரசீகத்தின் ஒரு பகுதியாக குராசான் இருந்தது. அஹ்மது இப்னு ஹம்பலின் பாட்டனார், அங்குள்ள சார்கஸ் எனும் பகுதியின் ஆளுனராக (வாலி) இருந்தார்.அஹ்மது இப்னு ஹம்பலின் தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். அங்கு அவர் அதிகாரியாக இருந்தார் என்று சில நூல்கள் குறிப்பிடுகின்றன. அவர் ஒரு உயர் அதிகாரியாக இருந்தார் என்றும், படை வீரராக இருந்தார் என்றும் வெவ்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன. ராணுவத்தில் அவர் என்ன பணியாற்றினார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. வெவ்வேறு நூல்களில் இருப்பதையே நான் எடுத்துச் சொல்கிறேன். இவ்விஷயத்தில் யாரும் துல்லியமாகக் கருத்து கூற முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் ராணுவத்தில் ஏதோ ஒரு நிலையில் தளபதியாக இருந்தார் என்பது தெளிவு.
அஹ்மது இப்னு ஹம்பலின் பாட்டனார் உமவி ஆட்சி காலத்தில் ஆளுனராக இருந்தார். அவர்களுக்கு எதிராக அப்பாஸி கோத்திரத்தார் எதிர்ப்பியக்கம் நடத்திக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தில் உமவிகள் தோல்வியடையும் நிலையில் இருப்பதைக் கண்ட அஹ்மது இப்னு ஹம்பலின் பாட்டனார், உமவிகளை விடுத்து அப்பாஸிகளை ஆதரிக்கத் துவங்கினார். அஹ்மது இப்னு ஹம்பலின் தந்தை இளம் வயதிலேயே —முப்பது வயதில் என்று சில நூல்கள் கூறுகின்றன— இறந்துவிட்டார். அந்தக் குறுகிய கால வாழ்விலும் அவர் ஈகைக் குணம் மிக்கவராகவும் விருந்தோம்பல் குணம் கொண்டவராகவும் இருந்தார் என்று தெரிகிறது.
அஹ்மது இப்னு ஹம்பல் பாக்தாதிலேயே பிறந்து வளர்ந்தார். அன்றைய பாக்தாத் திருக்குர்ஆனை மனனம் செய்பவர்களின் பாக்தாதாக, ஹதீஸ் அறிஞர்களின் பாக்தாதாக, சட்டவியலாளர்கள், மெய்யியலாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பாக்தாதாக இருந்தது. மேலும் அறிவியல், கல்வி மற்றும் அறிவுசார் சாதனைகளின் கேந்திரமாக அது திகழ்ந்தது. இவையனைத்தும் அங்கு உச்சத்தில் இருந்த சமயத்தில்தான் அஹ்மது இப்னு ஹம்பல் பிறந்தார். வளரும் பருவத்தில் அஹ்மது இப்னு ஹம்பல் —பிற சட்டவியலாளர்களைப் போல— சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். மேலும் அவர் அரபி மொழியை நன்கு கற்றார். நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறையினரின் (தாபியீன்) வரலாறுகளையும் கற்றுத் தேர்ந்தார். பதின்ம வயதை அடைந்த நிலையில், நபிமொழிகளைக் கற்று அவற்றைச் சேகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தார்.
அவர் மிகவும் கண்டிப்பானவராக அறியப்படுகிறார். சிரித்துப் பேசாதவராகவும் நகைச்சுவை கலந்த பேச்சுகளில் பங்கேற்காதவராகவும் அறியப்படுகிறார். அஹ்மது இப்னு ஹம்பல் அனாதையாகப் பிறந்து அனாதையாகவே வளர்க்கப்பட்டார் என்று பார்த்தோம். இது அவரை சுயசார்பு உடையவராகவும் இறுக்கமானவராகவும் மாற்றியது. அனாதைகளின் நிலமை இப்படித்தான் இருக்கும். தந்தை இல்லாத காரணத்தால், அவர்கள் வாழ்வின் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். வளர்ந்த பின்னர் தங்களைச் சுற்றியிருக்கும் சமூக நீரோட்டத்தில் கலக்காதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
அஹ்மது இப்னு ஹம்பல் நபிமொழிகளைக் கற்று அவற்றைச் சேகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்திய நிலையில், துணைநிலையாக சட்டவியலிலும் ஆர்வம் காட்டத் துவங்கினார். எனினும் பிற சட்டவியலாளர்களைப் போல, சட்டவியல் அவரது பிரதான ஆர்வமாக இருக்கவில்லை. பிற சட்டவியலாளர்கள், நபிமொழி பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர் என்றாலும் அவர்களுடைய முதன்மை ஆர்வம் அறிவுசார் அபிப்பிராயங்களை வகுப்பதிலேயே இருந்தது. அதுதான் அவர்களுடைய சட்டவியல் கோட்பாடாக உருவெடுத்தது.
இமாம் அஷ் ஷாஃபியி —இன்றைய மொழியில் சொல்வதானால்— கீழ் நடுத்தர வர்க்கத்தில் பிறந்தார் என்றாலும் இறைத்தூதரின் உறவினராக இருந்தார் என்று பார்த்தோம். இது அவருக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தைக் கொடுத்தது. அபூ ஹனீஃபா செல்வந்த வணிகக் குடும்பத்தில் பிறந்தார் என்று பார்த்தோம். இத்தகைய பொருளாதாரச் செழிப்பு அவருக்கும் ஒரு சமூக அந்தஸ்தைக் கொடுத்தது. ஆனால் இமாம் அஹ்மத் இவை எதையும் பெற்றிருக்கவில்லை. சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர் என்ற நிலையில் அவர் இருக்கவில்லை. அவர் மிக இளம் வயதில் எவ்வித ஆதரவும் இன்றி, சுயமாக கல்வி பயின்றார்.
இமாம் அஹ்மத் பாக்தாதில் வாழ்ந்தார். அன்று பாக்தாதில், அபூ ஹனீஃபாவின் வழிமுறைதான் (மத்ஹப்) ஆதரவு பெற்ற வழிமுறையாக இருந்தது. அபூ ஹனீஃபாவை பின்பற்றிய பல சட்டவியலாளர்கள் பாக்தாதில் இருந்தனர். அவர்களுள் ஒருவர் அபூ யூசுஃப். அவர் அன்றைய அப்பாஸி அரசின் முக்கிய நீதிபதியாகவும் இருந்தார். இமாம் அஹ்மத், அபூ யூசுஃபின் வகுப்புகளில் கலந்து கொண்டார். அப்போது இமாம் அஹ்மத், அபூ யூசுஃப் கற்பித்த சட்டவியலைக் காட்டிலும் அவர் கூறிய நபிமொழிகளில்தான் அதிக ஆர்வம் காட்டினார்.
ஆக இமாம் ஹம்பலுடைய அறிவுப்பணியின் முதல் முனைப்பு, கிட்டத்தட்ட ஹனஃபி தாக்கம் பெற்ற அறிவுச் சூழலில் ஏற்பட்டதாகப் பார்க்கிறோம். பின்னர் நபிமொழிகளில் அவருடைய ஆர்வம் மேலும் அதிகரிக்க, அவர் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். பாக்தாதில் ஹி. 179-ல், 15 வயதில் நபிமொழிகளைக் கற்கத் துவங்கிய இமாம் அஹ்மத், ஹி. 186 வரை நபிமொழிப் பாடம் பயின்றார். ஹி. 186-ல் அங்கிருந்து பஸ்ரா சென்றார். பின்னர் ஹி. 187-ல் பஸ்ராவிலிருந்து ஹிஜாஸ் சென்றார்.
இவையனைத்தும் அன்றைய முஸ்லிம்களின் கல்விக் கேந்திரங்களாக, அறிவு மையங்களாகத் திகழ்ந்தன என்பதை நினைவில் கொள்க. அங்கிருந்து அவர் அல் பஸ்ரா, அல் கூஃபா, அல் ஹிஜாஸ் மற்றும் ஏமன் என்று பல்வேறு பகுதிகளுக்கு உலா சென்றார். இவை எல்லாவற்றிலும் அவர் நபிமொழிகளிலேயே கவனம் செலுத்தினார். மற்ற விஷயங்களில் அவர் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. அப்படியே இருந்தாலும் அது மிகச் சொற்பமாகவே இருந்தது. அவருடைய அக்கறை முழுவதும் ஹதீஸ்களிலேயே குவிந்திருந்தது.
இவ்வாறாக அவர் பஸ்ராவுக்கு ஐந்து முறை சென்றார் என்று குறிப்புகள் கூறுகின்றன. அதே போல ஹிஜாஸுக்கும் —ஹி. 187-ல் சென்றதையும் சேர்த்து— ஐந்து முறை சென்றார். ஹி. 187-ல் அவர் ஹிஜாஸுக்குச் சென்ற போது மக்காவில் இமாம் அஷ் ஷாஃபியி-ஐ புனிதப் பள்ளிவாசலுக்கு (மஸ்ஜிதுல் ஹராம்) அருகில் சந்தித்தார். இமாம் அஷ் ஷாஃபியி மக்காவில் சிறிது காலம் தங்கினார் என்று நாம் சென்ற வகுப்பில் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்க.
அன்று மக்காவுக்குச் செல்வதற்கு சிறப்புத் தகுதி எதுவும் தேவைப்படவில்லை. விசா தேவைப்படாத காலம் அது. ஒருவரின் மனசாட்சியும் அவருடைய ஆற்றலும் மட்டுமே போதுமானதாக இருந்தன. உடல் வலிமையும் பொருளாதார சக்தியும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் மக்காவுக்குச் செல்ல முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அந்த மக்காவும் புனிதப் பள்ளிவாசலும் மாறுபட்ட மக்காவாகவும் புனிதப் பள்ளிவாசலாகவும் இருந்தன. அன்றைய சூழலே வேறுவிதமாக இருந்தது. அது இன்று போல் இருக்கவில்லை.
இமாம் அஷ் ஷாஃபியி அன்றைய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு பாக்தாதுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று பார்த்தோம். பாக்தாதிலும் அஹ்மது இப்னு ஹம்பல், இமாம் ஷாஃபியி-ஐ சந்தித்தார். மக்காவில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மேலும் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இமாம் ஷாஃபியி-ன் வகுப்புகளிலும் உரைகளிலும் கலந்து கொண்டார். எனவே அவர் மீது இமாம் ஷாஃபியி-உடைய கருத்துகளின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தது.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், தான் ஐந்து முறை ஹஜ் செய்ததாகக் குறிப்பிடுகிறார். அதில் மூன்று முறை நடந்தே சென்றுள்ளார். ஏமனில் இருக்கும் சன்ஆவிற்கும் அவர் பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அனைத்தும் ஹதீஸ்களை சேகரிக்கவும் அவற்றை சரிபார்க்கவும் மேற்கொள்ளப்பட்டன. அவர் ஓரிடத்தில் ஒரு ஹதீசை கேட்டிருப்பார். அந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்திருக்கும். பின்னர் தூரமாக இருக்கும் வேறொரு பகுதிக்குச் சென்று அங்கு இருப்பவர்களிடமிருந்தும் அதே ஹதீசை மீண்டும் கேட்பார். அதை அப்படியே —ஆனால் வேறு அறிவிப்பாளர்கள் வழியே— இவர்களிடமிருந்தும் கேட்டால் அந்த ஹதீஸ் நம்பகமானது என்று உறுதியாகும். ஏனெனில் ஒரே ஹதீசை இருவேறு அறிவிப்பாளர்கள் வழியே அப்படியே கேட்பது தற்செயலாக நிகழ்ந்திருக்க முடியாது. எனவே அந்த ஹதீஸ் உண்மையிலேயே ஹதீஸ்தான் என்றும் அதை அறிவிப்பவர்கள் உண்மையாளர்கள், நம்பகமானவர்கள், தகுதிவாய்ந்தவர்கள் என்பதும் உறுதியாகும்.
இப்பணி இலகுவாக இருக்கவில்லை. அது கடின உழைப்பைக் கோரி நின்றது. ஆனால் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ஊக்கம் இழக்கவில்லை. அவர் வறிய குடும்பத்தில் இருந்து வந்தார் என்று பார்த்தோம். இப்பணியில் பயணங்கள் மேற்கொள்வதற்கு பொருளாதாரம் தேவைப்பட்டது. ஒருமுறை ஏமனுக்குச் சென்றிருந்த போது அவரிடமிருந்த பணம் அனைத்தும் தீர்ந்துவிட்டது. அவருக்கு பரிச்சயமானவர்கள் உதவ முன்வந்தனர். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். சுமை தூக்குபவர்களோடு சேர்ந்து சுமை தூக்கி பயணத்துக்குத் தேவையான பணத்தை ஈட்டினார். ‘ஆரோக்கியமாக இருக்கும் வரை எனக்குத் தேவையான பணத்தை சொந்த உழைப்பின் மூலமே ஈட்டுவேன்’ என்றார். இது அவரது பண்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
அஹ்மது இப்னு ஹம்பலின் காலகட்டம் ஹதீஸ்களை அறிவுசார் நோக்கில் ஒருங்கிணைக்கும் காலமாக இருந்தது. இமாம் மாலிக் தன் ஹதீஸ் சேகரத்தை அல் முஅத்தா என்ற நூலில் பதிவு செய்தார். அஷ் ஷாஃபியி-ம் தன் ஹதீஸ் சேகரத்தை ஒரு நூலில் வழங்கினார். அபூ ஹனீஃபாவும், அபூ யூசுஃப் மற்றும் அபூ ஹனீஃபாவின் பிற மாணவர்களும் தங்கள் ஹதீஸ் சேகரங்களை தொகுத்து வழங்கினர். தனக்கு முன்சென்ற தலைமுறையினர் ஹதீஸ்களில் கவனம் செலுத்தியதைக் கண்ட இமாம் அஹ்மத், தானும் ஹதீஸ்களை சேகரித்து, சரிபார்த்து அவற்றை ஒரு நூலில் தொகுத்தார். அதன் பெயர் அசர் அத் தத்வீன்.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இமாம் ஷாஃபியி-ஐ பாக்தாதில் சந்தித்தார் என்று பார்த்தோம். அப்பாஸி அரசாங்கத்தின் உள் அரசியல் காரணமாக பாக்தாதில் வசிக்கப் பிடிக்காமல் இமாம் ஷாஃபியி, எகிப்துக்குச் சென்றார் என்றும் பார்த்தோம். அஹ்மது இப்னு ஹம்பலும் இமாம் ஷாஃபியி-ஐ பின்தொடர்ந்து எகிப்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர் அங்கு செல்ல இயலவில்லை.
இமாம் அஹ்மத், தான் இயற்றிய நூலில் நபிமொழிகளோடு சேர்த்து, இறைத்தூதருடன் இருந்த பல்வேறு நபித்தோழர்களுக்கு என தனித்தனி பகுதிகளை அமைத்திருந்தார். அபூ பக்கருக்கு ஒரு பகுதி, அலீக்கு ஒன்று, உமர், உஸ்மான் போன்ற நபித்தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பகுதி என பிரத்தியேகமாக இதே வரிசையில், இதே அமைப்பில் தன் நூலை அமைத்தார்.
இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் குடும்பம் மரூ எனும் பகுதியில் இருந்தது என்று பார்த்தோம். அது பாரசீக மொழி பேசும் பகுதியாகும். எனவே இமாம் ஹம்பலும் அம்மொழியை அறிந்திருந்தார். அவர் பாக்தாதில் பிறந்திருந்தாலும், அவருடைய குடும்பம் மரூவில் கணிசமான காலம் வசித்தது. எனவே அவர்களுக்கு பாரசீக மொழி பரிச்சயமாக இருந்தது. அவர்களிடமிருந்து இமாம் அஹ்மத் அதை கற்றுக் கொண்டார். பாரசீக மொழி பேசும் பகுதியில் அரசாங்கப் பணியாளராக இருப்பவர்கள் அம்மொழியை அறிந்திருப்பது இயல்புதானே!
அஹ்மது இப்னு ஹம்பல் பாக்தாதுக்கு குடிபெயந்தார் என்றாலும், அவருடைய உறவினர்கள் மரூவில்தான் இருந்தனர். ஒருமுறை அஹ்மது இப்னு ஹம்பலின் உறவினர் ஒருவர் அவரைச் சந்திக்க வந்தார். அவர்கள் அரபு மொழியில் உரையாடத் துவங்கினர். அப்போது தன் உறவினருக்கு அரபி நன்றாக பேசத் தெரியவில்லை என்பதை உணர்ந்த அஹ்மது இப்னு ஹம்பல் பாரசீக மொழியில் பேசத் துவங்கினார். எனவே —நக்கலாகச் சொல்வது போலத் தெரிந்தாலும்— ‘பிரபல’ சட்டவியலாளர்களுள், பாரசீக மொழியில் கிட்டத்தட்ட சரளமாக இருந்தவர் அஹ்மது இப்னு ஹம்பல்தான் என்பது தெளிவாகிறது.
அஹ்மது இப்னு ஹம்பல் —அபூ ஹனீஃபாவை போல— தன் நாற்பதாவது வயதில்தான் கற்பிக்கத் துவங்கினார். இமாம் ஷாஃபியி மற்றும் இமாம் மாலிக் இருவரும் ஒப்பீட்டளவில் இதற்கு முன்னரே கற்பிக்கத் துவங்கினர் என்று பார்த்தோம். வகுப்புகள் நடத்தத் துவங்கும் முன்னரே, அஹ்மது இப்னு ஹம்பல் அறிஞராக அறியப்பட்டார்; மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். ஆனால் நாற்பது வயதை அடையும் வரை ‘அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியராக’, கற்பிக்கும் அதிகாரம் பெற்றவராக அவர் மாறவில்லை. நாற்பது வயதை அடைந்த பிறகுதான் தன் சிந்தனைகளை பள்ளிவாசலில் பொதுமக்கள் முன் எடுத்துரைக்கும் பொறுப்பை ஏற்க முடிவு செய்தார்.
அவருடைய வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் குறித்து வெவ்வேறு நூல்கள் வெவ்வேறு கருத்துகளைக் கூறுகின்றன. எனினும் இதுகுறித்து நேர்மையாக ஒரு எண்ணிக்கையைச் சொல்வதானால், அவருடைய வகுப்புகளில் சாதாரணமாகவே ஏறக்குறைய 5000 மாணவர்கள் கலந்து கொண்டனர் எனலாம். அதில் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர், அவருடைய கருத்துக்களை எழுத்தில் பதிபவர்களாகவும் குறிப்பெடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர் இரண்டு வகை வகுப்புகளை நடத்தினார். ஒன்று அவரது வீட்டில் நடைபெற்றது; மற்றொன்று பள்ளிவாசலில் நடைபெற்றது. வீட்டில் நடந்த வகுப்பு கிட்டத்தட்ட ஒரு தனிப்பட்ட வகுப்பாக இருந்தது. அதில் அவருடைய குடும்ப உறுப்பினர்களும், மிக மிக நெருங்கியவர்களும் கலந்து கொண்டனர். பள்ளிவாசலில் நடந்த வகுப்பு பொது மக்களுக்கானது. அவருடைய வகுப்புகள் அசர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றன. மக்கள் தங்கள் அலுவல்களில் மூழ்கிக் கிடக்கும் முற்பகல் நேரம் அல்லது ஓய்வெடுக்கும் மாலை நேரத்தைக் காட்டிலும் அசர் தொழுகைக்குப் பின்னுள்ள நேரம்தான் கற்றலுக்கான சிறந்த நேரமாக பார்க்கப்பட்டது. அதுதான் குர்ஆன், சுன்னாஹ், சட்டவியல் போன்றவற்றைப் படிப்பதற்கு ஏற்ற நேரமாகக் கருதப்பட்டது.
அஹ்மத் இப்னு ஹம்பலின் வகுப்புகள் பவித்திரமானதாக இருந்தன. அங்கு சிரிப்பு, கேலி கிண்டல்களுக்கு இடமில்லை. ஒரு பவித்திரமான வகுப்பு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது அவருடைய வகுப்பு. அங்கு அவர் இறைத்தூதருடைய ஹதீஸ்களை வழங்குவதில் கவனம் செலுத்தினார். அவர் அந்த நபிமொழிகளை எப்போதும் பார்த்துத்தான் வாசிப்பார். இதன் பொருள் அவர் அவற்றை மனனம் செய்யவில்லை என்பதல்ல. அவர் அந்நபிமொழிகளை மனனம் செய்தே இருந்தார். எனினும் எழுதப்பட்ட ஒரு பிரதி அவர் முன் இருந்தாலொழிய எந்த ஒரு ஹதீசையும் மேற்கோள் காட்டக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அவர் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுதும் நபிமொழிகளைச் சேகரிப்பதில் செலவிட்டார். எனவே நபிமொழிகளை மேற்கோள் காட்டும்பொழுது எப்போதும் தன்னிடம் இருக்கும் ஹதீஸ் பிரதிகளை பார்த்தேதான் சொல்வார். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களில் நூறுக்கும் குறைவான ஹதீஸ்களை மட்டும் தன் நினைவிலிருந்து சொல்லியிருப்பார் என்று அவரை நன்கு அறிந்த மாணவர்கள் கூறுகின்றனர். தான் பயணித்த முஸ்லிம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரித்த ஹதீஸ்களை பார்க்காமல் நினைவிலிருந்து சொல்வதை அவருடைய மனம் அனுமதிக்கவில்லை.
அவருடைய வகுப்புகளில் ஏழை மாணவர்கள் கண்ணியப்படுத்தப்பட்டனர். அவர்களை அவர் மரியாதையோடு நடத்தினார். அவருடைய வகுப்புகளின் தனித்துவங்களில் இதுவும் ஒன்று. ஹதீஸ்களை மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் பணித்தது அவருடைய வகுப்பின் மற்றொரு அம்சம். ஹதீஸ்களை மேற்கோள் காட்டும் போது, அதன் விளக்கத்தையும் அதை அறிவித்தவர்கள் குறித்தும் அஹ்மது ஹம்பல் கூறுவார். சாதாரணமாக அவருடைய வகுப்புகளில் கிட்டத்தட்ட 500 பேர் குறிப்புகள் எடுப்பர் என்று பார்த்தோம். அவர்களிடம், தான் சொல்லும் ஹதீஸ்களை மட்டும் எழுதுமாறும் மற்றவற்றை எழுத வேண்டாம் என்றும் கூறினார். இதில் அவர் உறுதியாக இருந்தார். தன் சொந்த கருத்துகளை மாணவர்கள் எழுதத் தேவையில்லை; அவற்றை அவர்கள் புரிந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறினார். அவர் தன் கருத்துக்களில் நம்பிக்கையற்று இருந்ததே இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். அது அப்படியல்ல. எழுதப்படுவதற்கு தகுதி வாய்ந்தது திருக்குர்ஆனின் வசனங்களும் இறைத்தூதரின் ஹதீஸ்கள் மட்டுமே என்று தன் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இப்போது, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நிகழ்வுக்கு வருவோம். அதுதான் ‘குர்ஆன் படைக்கப்பட்டது என்று சொன்னவர்கள் சந்தித்த சோதனைகள்’. இதுதான் அன்றைய முக்கிய பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைதான் மக்கள் மத்தியில் அஹ்மது இப்னு ஹம்பலை பிரபலமானவராக தூக்கி நிறுத்தியது. முஃதசிலாக்களைப் பற்றி பார்க்கும் போது இது குறித்து நாம் ஏற்கனவே பேசினோம். குர்ஆன் படைக்கப்பட்டதுதான் என்ற கருத்தில் அவர்கள் எப்படி பகுத்தறிவைக் கொண்டு திருப்தி அடைந்தனர் என்று பார்த்தோம். இப்பிரச்சனை உமவி சாம்ராஜ்யத்தின் கடைசி காலத்தில் துவங்கியதாகத் தெரிகிறது. அதன் இறுதி ஆண்டுகளில், மக்கள் மீது அவர்களுக்கு இருந்த பிடி தளர்ந்திருந்தது. அவர்களுடைய செல்வாக்கு சரிந்திருந்தது. அவர்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. உமவி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சில கிறித்துவ அறிஞர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவர் யோஹன்னா திமஷ்கி. அதாவது, டமாஸ்கசைச் சேர்ந்த ஜான். அவர் டமாஸ்கசின் உயர்மட்ட பாதிரியாக இருந்தார். சிரியா, ஈராக் போன்ற பிற முஸ்லிம் பகுதிகளில் வாழ்ந்த பாதிரிமார்களோடு அவர் தொடர்பில் இருந்தார். முஸ்லிம்களோடு எப்படி விவாதத்தில் ஈடுபட வேண்டும், என்ன பிரச்சனைகளைப் பேச வேண்டும் என்று அவர் அவர்களுக்கு பாடம் நடத்தினார்.
காலப்போக்கில் இவ்விவாதங்களில் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) குறித்து மட்டரகமான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கினர். ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே குறிப்பான முக்கியமான ஒரு பிரச்சனை உண்டு என்றால் அது இயேசுவின் இறைத்தன்மை பற்றியதாகும். கிறித்துவர்கள் அதில் நம்பிக்கை கொள்கின்றனர்; முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே முஸ்லிம்களிடம் இப்பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று யொஹன்னா திமஷ்கி பிற கிறித்துவர்களைத் தூண்டினார். யோஹன்னா திமஷ்கி குர்ஆனை நன்கு கற்றவர். அதில் பரிசுத்தமான அல்லாஹ், ‘ஈசா அல்லாஹ்வின் வார்த்தை ஆவார்; அதை அவன் மர்யமின் மீது இறக்கினான்’ என்று சொல்லியிருப்பதை கவனித்தார்.
பிறகு பிற பாதிரிகள் மற்றும் அறிஞர்களிடம் இப்படிக் கூறினார்: “அடுத்த முறை முஸ்லிம்களுடன் விவாதிக்கும் போது இந்த வசனத்தைக் குறித்து அவர்களிடம் கேளுங்கள். இதன் பொருள் என்ன என்று கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பதிலை செவிமடுத்த பின், இந்த ‘வார்த்தை’ ஆதியந்தமற்றதா அல்லது அதற்கு ஒரு துவக்கம் இருந்ததா? என்று கேளுங்கள்”. இங்குதான் சர்ச்சையே ஆரம்பித்தது. இந்தக் கேள்விதான் முஸ்லிம்களை விடாது துரத்தத் துவங்கியது; அவர்களுக்கிடையே உள்நாட்டுப் போர் வெடித்துவிடுமோ என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. இதில்தான் அஹ்மது இப்னு ஹம்பலும் சிக்கிக் கொண்டார்.
முஸ்லிம்களிடம் கிறித்துவர்கள் கேட்ட கேள்வி இதுதான்: ‘நீங்கள் குறிப்பிடும் அல்லாஹ்வின் வார்த்தை, அதாவது இந்த குர்ஆன், துவக்கம் இல்லாததா (கதீமா வா)? இதற்கு சில முஸ்லிம்கள் ‘ஆம்’ என்றும் வேறு சிலர் ‘இல்லை’ என்றும் பதிலளித்தனர். ‘குர்ஆன் படைக்கப்பட்டது’, ‘இல்லை. அது படைக்கப்படாதது’ என்று எழுந்த சர்ச்சை அல்லது சோதனை, இப்படித்தான் துவங்கியது. ‘குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல’ என்று முஸ்லிம்கள் பதிலளித்தால், அதன் பொருள் இயேசு படைக்கப்பட்டவர் அல்ல என்றாகிவிடும்.
இயேசு, அல்லாஹ்வின் வார்த்தை ஆவார். அல்லாஹ்வின் வார்த்தை படைக்கப்பட்டது இல்லை எனில், இயேசுவும் படைக்கப்பட்டவர் அல்ல. இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மாறாக, இயேசு படைக்கப்பட்டவர் என்று சொன்னால், குர்ஆனும் படைக்கப்பட்டது என்றாகிவிடும். அல்லாஹ்வின் வார்த்தை, அதாவது அவனுடைய ஒரு பகுதியாகிய குர்ஆன் படைக்கப்பட்டது எனில், அல்லாஹ்வின் ஒரு பகுதி படைக்கப்பட்டது என்றாகிவிடும். இதனால் முஸ்லிம்களிடையே பிளவு உண்டானது.
இதை பிளவு என்று கூட சொல்ல முடியாது. 1% மக்கள் அல்லது 10% மக்கள் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால், பிரச்சனை சில ஆண்டுகளில் இலகுவாக முடிந்திருக்கும். ஆனால் இங்கு சரிபாதி முஸ்லிம்கள் ஒரு கருத்தையும் மீதி பாதி பேர் மற்றொரு கருத்தையும் கொண்டிருந்தனர். இது போதாதென்று அப்பாஸி அரசாங்கமும் இப்பிரச்சனையில் பங்கெடுத்தது. ஒரு அப்பாஸி மன்னர் ஒரு தரப்பினரையும் அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் வேறொரு மன்னர் வேறு தரப்பினரையும் ஆதரித்தனர். இது நிலமையை இன்னும் சிக்கலாக்கியது.
குர்ஆன் படைக்கப்பட்டது என்று சொன்னவர்களுள் அல் ஜாத் இப்னு திர்ஹம் மற்றும் ஜுஹம் இப்னு சஃப்வான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நிச்சயமாக, பல முஸ்லிம்கள் இவர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், வரலாறு இருதரப்பினரின் கருத்துகளையும் நேர்மையோடு அணுகி எழுதப்பட்டதல்ல. முஃதசிலாக்களும் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்று கூறினர். இதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இவர்கள்தான் இக்கருத்தை ஆதரித்து வாதாடிய முக்கியக் குழுவினர். அடுத்து, அப்பாஸி மன்னர் மஃமூனும் இதே கருத்தை கொண்டிருந்தார். அவர் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற கருத்தை அதிகாரப்பூர்வக் கொள்கையாக அறிவித்து, அதை வெகுமக்கள் கருத்தாக மாற்ற முயற்சி செய்தார்.
அஹ்மது இப்னு ஹம்பலின் காலத்தில் உருவான இச்சோதனை, ஆரம்பத்தில் ‘தான் விரும்பிய கருத்தை எவரும் பின்பற்றலாம். பிறர் மீது தம் கருத்தைத் திணிப்பதில்லை’ என்ற ரீதியில்தான் இருந்தது. சிலர் ஒரு கருத்தை ஆதரித்தும் வேறு சிலர் மற்றொரு கருத்தை ஆதரித்தும் வாதிட்டனர். ஹி. 212-ல் அல் மஃமூன் ‘குர்ஆன் படைக்கப்பட்டதுதான்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு அது அரசு கொள்கையாக மாறியது. இது அத்தோடு நிற்கவில்லை. ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற கருத்தை நம்பாதவர்கள், அரசாங்கப் பதவிகளை வகிக்க முடியாத நிலை உருவானது. அவர்கள் மாபாதகக் குற்றவாளிகள் போலக் கருதப்பட்டு, அவர்களின் சாட்சியம் நீதிமன்றங்களில் ஏற்கப்படாது என்றானது. பிரச்சனை தீவிரமாக மாறியது. இங்குதான் —இன்றைய வழக்கில் நாம் சொல்லும்— மத ரீதியான அடக்குமுறை பரவலாக அன்று நிகழ்ந்ததை உணர முடிகிறது.
இதை அறிவிக்கும் போது அல் மஃமூன் பாக்தாதில் இல்லை. அவர் ராணுவ மற்றும் பிற முஸ்லிம் அதிகாரிகளோடு —நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும்— சிரியாவின் அரெக்காவில் இருந்தார். எனவே பாக்தாதை நிர்வகித்துக் கொண்டிருந்த அதிகாரி —மேயர் போல அன்று இருந்தவர்— அறிஞர்கள் அனைவரையும் அழைத்து இவ்வாறு கூறினார்: “குர்ஆன் படைக்கப்பட்டதா இல்லையா என்ற விவாதம் தீர்க்கப்பட்டுவிட்டது. மாட்சிமை தங்கிய தலைவர், குர்ஆன் படைக்கப்பட்டதுதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீங்களும் அதற்கேற்றார்போல் நடந்து கொள்ள வேண்டும்”. இது அவருடைய வார்த்தைகள் அல்ல. அவருடைய கூற்றின் சாரத்தையே உங்களிடம் எடுத்துரைக்கிறேன். இதைக் கேட்ட அறிஞர்கள் அனைவரும் அதை அப்படியே ஒத்துக் கொண்டனர் —நான்கு பேரைத் தவிர. அந்த நான்கு பேரும் “இதை நீங்கள் எங்கள் மீது திணிக்க முடியாது. நாங்கள் இதை நம்பமாட்டோம்” என்றனர். அவர்கள் பின்வருமாறு: அஹ்மது இப்னு ஹம்பல், முஹம்மது இப்னு நூஹ், அல் கவாரீரி மற்றும் அல் சஜ்ஜாதா. அடுத்த நாள் சஜ்ஜாதா தன் கருத்தை மாற்றிக் கொண்டார். அதே போல ஒரு சில நாட்கள் கழித்து கவாரீரியும் “நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார். ஆக அரசாங்கக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தனர்: முஹம்மது இப்னு நூஹ் மற்றும் அஹ்மது இப்னு ஹம்பல். இச்செய்தி மஃமூனுக்கு எடுத்துரைக்கப்பட்டது. “இங்கு இரு அறிஞர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களை என்ன செய்வது?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அவர்களை என்னிடம் அனுப்புங்கள்” என்று பதில் உரைத்தார்.
அப்போது அல் மஃமூன் மத்திய தரைக்கடல் பகுதியில், சிரியாவின் தர்தூஸ் நகரில் இருந்தார். அவருடைய ஆணைக்கிணங்க அதிகாரிகள் அவ்விருவரையும் காவலர்களின் துணையோடு மஃமூனிடம் அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் முஹம்மது இப்னு நூஹ் இறந்துவிட்டார். ஆக எஞ்சியிருந்தது அஹ்மது இப்னு ஹம்பல் மட்டுமே. அவர் பாக்தாதின் பிரபலமான அறிஞர்; அவருடைய வகுப்புகளில் ஏறத்தாழ 5000 பேர் கலந்து கொள்வர்; பாக்தாதிலேயே பிரபலமான அறிஞர். இப்பேர்பட்ட அறிஞரை மஃமூன் கட்டுப்படுத்தியாக வேண்டும். காவலர்களோடு அஹ்மது இப்னு ஹம்பல் சிரியாவை நெருங்கிய சமயம் அல் மஃமூன் இறந்துவிட்டார். இப்போது அஹ்மது இப்னு ஹம்பலை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது.
அடுத்து மஃமூனின் சகோதரர் அல் முஃதசிம் பதவியேற்றார். நடந்த சம்பவங்களை நன்கு கவனித்துக் கொன்டிருந்த முஃதசிம், அஹ்மது இப்னு ஹம்பலை முதலில் ஆசை காட்டியும் பின்னர் மிரட்டியும் சமாளிக்க முயன்றார். “இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லையே. இதை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோமா? உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்.” என்ற ரீதியில் முஃதசிம் பேசினார். ஆனால் அஹ்மது இப்னு ஹம்பல், “இது அறம் சார்ந்தது. நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இது மனசாட்சி சம்பந்தப்பட்டது. எனவே என்னிடம் இப்படியெல்லாம் பேசாதீர்கள்.” என்பதாகச் சொல்லிவிட்டார். அரசாங்க ஆணைக்கு அஹ்மது இப்னு ஹம்பல் அடிபணிய மாட்டார் என்பதை உணர்ந்த முஃதசிம் அவரை கொட்டறையில் அடைத்து சித்திரவதை செய்ய உத்தரவிட்டார். கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளான அஹ்மது இப்னு ஹம்பல் சிலசமயம் மயங்கிவிடுவார். கிட்டத்தட்ட 28 மாதங்கள் அவர் இத்தகைய சித்திரவதைகளை அனுபவித்தார்.
இச்செய்தி வெளியே கசியத் துவங்கியது. அஹ்மது இப்னு ஹம்பலின் துன்பங்கள் பற்றிய செய்தியை மக்கள் மேலும் அறியவர, அவருடைய புகழ் மேலும் அதிகரித்தது. அதே சமயம் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற கருத்து செல்வாக்கு இழந்தது. இவ்விரண்டும் ஒருசேர நிகழ்ந்தன. அப்பாஸி அரசாங்கம் அவரை எந்த அளவு சித்திரவதைக்கு உள்ளாக்கியதோ அந்த அளவுக்கு அவரது செல்வாக்கு மேலோங்கியது. அவரை கொடுமை படுத்தியவர்கள் அதே அளவுக்கு செல்வாக்கு இழந்தனர். 28 மாதங்களாக சித்திரவதை அனுபவித்த அஹ்மது இப்னு ஹம்பல், அதன் பிறகு விடுவிக்கப்பட்ட போது நடக்கக் கூட இயலாத நிலையில் இருந்தார். அவர் சீராகி மீண்டும் சக்தி பெற்று பள்ளிவாசலில் வகுப்பு நடத்துவதற்கு சில காலம் பிடித்தது. எத்தனை காலம் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. எனினும் 4-5 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஊகிக்கிறேன்.
முஃதசிமுக்குப் பிறகு அல் வாஃபிக் மன்னரானார். அவரும் ‘குர்ஆன் படைக்கப்பட்டது. இவ்விஷயத்தில் அஹ்மது இப்னு ஹம்பல் தவறு செய்கிறார். இவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும்’ என்ற கருத்தையே கொண்டிருந்தார். அதற்காக ஒரு புதிய உக்தியை கையாண்டார். அஹ்மது இப்னு ஹம்பல் மக்கள் யாரையும் சந்திக்கக் கூடாது; மக்களும் அவரை சந்திக்கக் கூடாது என உத்தரவிட்டார். அவரை கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் அடைத்து வைத்தது போல நடத்தினார். இதனால் அஹ்மது இப்னு ஹம்பல் வெளியே செல்ல முடியாது; பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாது; வகுப்புகள் நடத்த முடியாது; மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. வாஃபிக், அஹ்மது இப்னு ஹம்பலிடம் சொன்னதாவது, “லா தஜ்ம அன்ன இலைக அஹதன் வ லா துசாக்கின்னி பலதின் அனஃபி”. அதாவது, “மக்கள் யாரையும் உங்களைச் சந்திக்க அழைக்காதீர்கள். மேலும் “நான் தங்கியிருக்கும் பகுதியில் நீங்கள் வசிக்காதீர்கள்”. அதிகாரத்தில் இருப்பவர்கள் வழமையாக பயன்படுத்தும் சொற்கள்தான் இவை. இந்த கால கட்டத்தில், அஹ்மது இப்னு ஹம்பல் பொதுமக்களிடம் இருந்து விலகியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. சிலர் அவர் தலைமறைவாக இருந்தார்; காணாமல் மறைந்துவிட்டார் என்று சொல்கின்றனர்.
அடுத்து முத்தவக்கில் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் அல் மஃமூன், அல் முஃதசிம் மற்றும் அல் வாஃபிக் ஆகியோரின் கருத்திலிருந்து மாறுபட்டார். ‘குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல’ என்ற கருத்தை ஆதரித்த முத்தவக்கில், தன் மீது அனுதாபம் கொள்வதை அஹ்மது இப்னு ஹம்பல் கண்டார். மேலும் முத்தவக்கில், முஃதசிலாக்களிடமிருந்து விலகி நிற்கத் துவங்கினார். அரசாங்கத் துறைகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து முஃதசிலாக்களை அகற்றி அவ்விடங்களை அவர்களின் எதிர்ப்பாளர்களைக் கொண்டு நிரப்பினார். இன்னும் சொல்லப் போனால், முத்தவக்கிலின் காலத்தில் இவ்விஷயம் நகைப்புக்கு உரியதாக மாறிப்போனது.
அப்படியான ஒரு நகைச்சுவை நிகழ்வு குறித்து இப்போது பார்ப்போம். முத்தவக்கிலுக்கு முன்னிருந்த வாஃபிக்கின் கடைசி காலத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. குர்ஆன் பற்றிய இவ்விவகாரத்தை நகைச்சுவையாக மாற்றியவர்களுள் ஒருவர் வாஃபிக்கிடம் வந்து “நம்பிக்கையாளர்களின் தலைவரே! அஃழமல்லாஹு அஜ்ரக ஃபில் குர்ஆன்” என்றார். ஒருவர் இறந்துவிட்டால் சொல்லப்படும் வாசகம் இது. இதன் பொருள் ‘அல்லாஹ் உங்கள் கூலிகளை அதிகமாக்குவானாக’ என்பதாகும். இதைக் கேட்ட வாஃபிக், “யார் இறந்துவிட்டார்?” என வினவினார். அதற்கு அவர் “குர்ஆன் இறந்துவிட்டது” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என அவர் கேட்கவே, அந்நபர், “ஆம்! நீங்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொரு படைப்பும் மரணித்தே ஆக வேண்டும். எனவே குர்ஆனும் மரணித்துவிட்டது. இப்போது நம்மிடையே குர்ஆன் இல்லை. எனவே இனிமேல் தராவீஹ் தொழுகை தொழ முடியாது”, என்றார். அந்நபர் கேலியாகப் பேசுகிறார் என்பதை அறிந்த மன்னர், அதைப் புறந்தள்ளி, “என் முகத்தில் முழிக்காதே (வ இலைக்க அம்சிக் உக்ருஜ் மினா)” என்பது போலச் சொல்லி அவரை விலக்கிவிட்டார்.
இங்கு மற்றொரு நபரைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய பெயர் அஹ்மது இப்னு அபீ துஆத். இவர் முக்கியமானவர். எப்போதும் அரசாங்கத் தலைவர்களின் கொள்கைகளுக்குப் பின்னால் அறிஞர்கள் இருப்பது இயல்பு. அப்படியாக குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கொள்கைக்குப் பின்னால் இருந்தவர் அபூ துஆத். இவர்தான் இக்கொள்கையை வளர்த்தெடுத்தவர். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்துக்கு இருந்த ஆதரவின் பின்புலத்தில் இருந்த முக்கியமான அறிஞர் இவர். ஒருமுறை ஒரு அறிஞர் இப்னு அபூ துஆதிடம் சென்று இவ்வாறு கூறினார்: “உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். இறைத்தூதர், அபூ பக்கர், உமர், உஸ்மான் அல்லது அலீ என யாரும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்தை தம் காலத்தில் ஆதரித்ததாக நான் அறியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும். முதலவதாக குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் இதை அறியாமலேயே இருந்திருக்க வேண்டும். அவர்கள் அதை அறிந்து அமைதியாக இருந்தார்கள் எனில் நீங்களும் ஏன் அமைதியாக இருக்கக் கூடாது? அவர்களுக்கு இது குறித்து தெரியாது எனில், அவர்கள் அறியாததை நீங்கள் எங்களுக்குச் சொல்கிறீர்களா என்ன?”. எனினும் கேள்வி கேட்ட அந்நபர் “இழிபிறவியே! என் முன்னால் நிற்காதே!” என்பது போல புறந்தள்ளப்பட்டார். இது வழக்கமாக நடப்பது தானே!
இப்போது குர்ஆனின் படைப்பு (ஃகல்குல் குர்ஆன்) குறித்த பிரச்சனைக்கு வருவோம். இதை நாம் போதுமான அளவு பேசவில்லை என்று நினைக்கிறேன். எனவே இப்போது இது குறித்து பார்ப்போம். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்தை முஃதசிலாக்கள் நம்பினர் என்று பார்த்தோம். மேலும் அவர்கள் அக்கருத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அனைவரும் அதை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். “அல்லாஹ் அல்லாத அனைத்தும் படைக்கப்பட்டதுதான்”. இப்படித்தான் அவர்கள் தங்கள் கருத்தை சுருக்கமாக, ஒருசில வார்த்தைகளில் முன்வைத்தனர். ‘குர்ஆன் அல்லாஹ் அல்லாதது. எனவே அதுவும் படைக்கப்பட்டதே. இதில் என்ன சிக்கல் இருக்கிறது? இதைப் புரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது?’ என்பது அவர்களுடைய வாதமாக இருந்தது. அவர்களின் அடுத்த வாதம் இப்படியாக இருந்தது: குர்ஆன் எழுத்துகளாலும், சொற்களாலும் வாக்கியங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. படைக்கப்பட்ட மனித இனமான நம்மால் மட்டுமே எழுத்துகள், சொற்கள் மற்றும் வாக்கியங்களை ஒழுங்கமைக்க முடியும். இது, குர்ஆன் படைக்கப்பட்டது என்பதற்கான மற்றொரு ஆதாரம். இறுதியாக அவர்கள் சொன்னதாவது: “குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல எனில் அது நித்தியமானது என்று பொருள்படும். குர்ஆன் நித்தியமானது என்றால், மேலும் பல விஷயங்களை நித்தியமானது என்று சொல்வதற்கு அது வழிவகுக்கும். எனவே அத் திசையில் சிந்திக்க வேண்டாம்.”
இவ்வாதங்கள் அனைத்தும் அதிகார்ப்பூர்வ நிலையில் இருந்து முன்வைக்கப்பட்டன. இவற்றை அஹ்மது இப்னு ஹம்பல் எதிர்த்த போது, அவர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையை, அவர்களின் பிரச்சாரத்தை எதிர்ப்பவராக ஆனார். இது சாதாரண விஷயம் அல்ல. உலகின் தலையாய பிரச்சனை ஒன்றில் அரசாங்கக் கொள்கைக்கு எதிராகப் பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! உண்மையைச் சொன்னால், அஹ்மது இப்னு ஹம்பல் இவ்விஷயம் குறித்து விவாதிக்க விரும்பவே இல்லை. முஃதசிலாக்கள் சொல்வதனைத்தையும் குர்ஆன் மற்றும் நபிமொழியின் அடிப்படையில், அவர்களால்கூட நிரூபிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் சொன்னதாவது, “எனக்கு இவ்விஷயம் ஒரு பிரச்சனையாகவே படவில்லை. முஃதசிலாக்களுக்கு நான் எதிர்வாதம் எதையும் முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில் இதற்கு எதிர்வாதமே இல்லை”. ஆனால் இந்த வாதம் அவர்களை திருப்திப்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லை. அவருடைய இந்த நிலைப்பாடே, தன்னளவில் அவரை எதிரணியில் நிறுத்தியது. அஹ்மது இப்னு ஹம்பல் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களுள் ஒருவராக அவர்களுடைய கருத்தை வழிமொழிய வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரோ அதைச் செய்ய மறுத்துவிட்டார்.
“‘அல்லாஹ்வின் வார்த்தைகள் படைக்கப்பட்டவை அல்ல (கலாமுல்லாஹ் ஃகைர் மஃக்லூக்)’ என்று முந்தைய தலைமுறை முஸ்லிம்கள் சொன்னதாக நான் அறிந்தேன்” என்று அஹ்மது இப்னு ஹம்பல் கூறினார். முதல் தலைமுறை முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்ட இக்கூற்று ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘இதற்கு மேல் இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்? இப்பிரச்சனை இந்த அளவுக்கு பிரிவினை உண்டாக்கி பதட்டத்தை ஏற்படுத்தியது எப்படி?’ போன்ற கேள்விகள் அவருக்குள் எழுந்தன. இதை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இப்போது வரலாறிலிருந்து சற்று விலகி இப்பிரச்சனையை ஆராய்ந்து பார்ப்போம். “இப்பிரச்சனை முடிந்துவிட்டது; இதற்கு தீர்வு கண்டாகிவிட்டது” என்று யாரும் சொல்ல முடியாது. முஸ்லிம்களிடம் இதுகுறித்து சிந்திக்கச் சொன்னால் இவ்விரண்டு கருத்துகளையும் கொண்ட மக்கள் இருக்கத்தான் செய்வர். எனவே பிரச்சனை இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. இதை கூர்ந்து நோக்கினால், இருதரப்பு வாதங்களிலும் வலு இருப்பதாகவே தெரிகிறது. ‘குர்ஆன் தொடக்கமற்றது (ஃகைரு மஃக்லூக்)’ எனச் சொல்லும் போது ‘அது படைக்கப்பட்டது அல்ல’ என்று பொருள்படுகிறது.
குர்ஆனை உற்று நோக்கினால் அதில் அர்த்தங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் உள்ளன. குர்ஆனில் நாம் வாசிக்கும் வசனங்களுக்கு —வார்த்தைகள் மற்றும் சூராக்களுக்கு— அர்த்தங்களும் அவற்றை வெளிப்படுத்தும் கருவிகளும் உள்ளன. குர்ஆனின் அர்த்தங்கள் அனைத்தும் நித்தியமானவை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவை அல்லாஹ்விடமிருந்து வருகின்றன. எனினும் அவ்வர்த்தங்களை வெளிப்படுத்தும் கருவிகள், படைக்கப்பட்டவை. இப்படிப் புரிந்து கொண்டால் இதில் பிரச்சனை எதுவும் இல்லை. இருதரப்பு வாதத்திலும் உண்மை இருப்பதால், பிரச்சனையை தணிக்க இது உதவும். இது என்னுடைய கருத்து மட்டுமே. இது குறித்து எவ்வளவு சிந்தித்தாலும் இது நீண்டு கொண்டே செல்லும்.
♣ ♣ ♣ ♣ ♣