எகிப்தைச் சேர்ந்த நெவின் ரேடா அத்-தாஹிரி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் தனது கணவர் மற்றும் நான்கு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் டொரண்டோ பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவி. குர்ஆனை தனித்துறைப் பயிற்சியாகக் கொண்ட இவரது முக்கியபாடம் அரபி; இரண்டாம்நிலை பாடங்கள் இஸ்லாமிய சிந்தனை மற்றும் விவிலிய ஹீப்ரு. முஸ்லிம் பெண்களுக்கான கனடிய கவுன்சிலின் உறுப்பினராக இருந்து வருகிறார். நெவின் ரேடாவின் ஆய்வுகள் குர்ஆனைக் குவிமையமாகக் கொண்டவை. இவர் திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயமான சூரா அல்-பகறா மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். அவரது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, “குர்ஆனின் பேசுபொருள் முழுமையும் முரண்பாடின்மையும்: சூரா அல்-பகறாவில் மீளக் கூறலும் எடுத்துரைத்தல் கட்டமைப்பும்”. தற்போது இவர் இம்மானுவேல் கல்லூரியில் முஸ்லிம் கற்கைகளுக்கான கனடியச் சான்றிதழ் துறையை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்கு முன்பு, டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் ஹியூரன் பல்கலைக்கழக கல்லூரியிலும் பணியாற்றியிருக்கிறார்.