எனது ஹஜ் (5) – சையது முஹம்மது

Posted on

எனது ஹஜ் (4)

♣ ♣ ♣ ♣ ♣

துல் ஹஜ் 12 (30-06-23)

இன்று மூன்று ஷைதான்களுக்கு கல்லெறிய வேண்டும். இத்துடன் ஹஜ்ஜின் கிரியைகள் நிறைவுறும். ஹஜ் 02-05-23 அன்று மதுரையில் ஹஜ் கமிட்டி நடத்திய கூட்டத்தில் ‘இஸ்லாமிய பதிப்பகம்’ வெளியிட்டிருந்த ‘ஹஜ்ஜே மக்பூல்’ ‘ஹஜ், உம்ரா, ஜியாரத் வழிகாட்டி’ என்ற தப்லீக்காரர்கள் வெளியிட்டிருந்த புத்தகத்தை படித்துத் தெரிந்து கொள்ளும்படி கூறியிருந்தார்கள். இந்த புத்தகம் ஒரு குழப்பக் களஞ்சியம். அறிவுக்குப் பொருந்தாத வேதத்திற்கு முரண்பட்ட ஏராளமான செய்திகள் இதில் உள்ளன.

இதில் உள்ளதைப் படித்துவிட்டு சூரியன் உச்சிக்கு வந்தபின்னர்தான் மூன்று ஷைதான்களுக்கு கல்லெறிய வேண்டும் எனக் கருதிக் கொண்டு காத்திருந்தோம். இல்லாவிட்டால் காலையிலேயே சென்றிருப்போம்.

காலை பதினொரு மணிக்கு எங்களுடைய கூடாரங்கள் இருந்த இருபக்க வாசல்களையும் அடைத்துவிட்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை ஏன் அப்படி செய்தார்கள்? என்று கேட்டால் ஹாஜிகள் எல்லோரும் மஸ்ஜிதுல் கைபிற்கு ஜும்மா தொழச் செல்வார்கள். அங்கு கூட்டம் அதிகமாகி விடும் என்பதால் அடைத்துவிட்டார்கள் என்று ஒரு ஹாஜி கூறினார். அது தான் காரணமா என்று தெரியாது. ஆனால் அடைத்துவிட்டார்கள்.

இரண்டு மணிக்கு திறப்பார்கள் என்றுக் கூறினார்கள். ஆகவே கூடாரத்திலேயே லுஹர் தொழுதுவிட்டு இரண்டரை மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். சாலைக்கு வந்தால் அங்கு மக்கள் பெருங் கூட்டமாக சென்று கொண்டிருந்தார்கள். மற்ற நேரங்களில் பரவலாகத்தான் செல்வார்கள். 4 மணி நேரம் அடைத்து வைத்திருந்ததால் அவ்வளவு மக்களும் ஒரே சமயத்தில் கிளம்பி விட்டார்கள். எங்களுக்கு முன்னால் ஈரான் நாட்டு ஹாஜிகள் ஒரு பெரும் கூட்டமாக சென்று கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தை விலக்கி எங்களால் வேகமாக நடக்க முடியவில்லை.

திடீரென அரசுப்படை இளைஞர்கள் ஓடினார்கள். முன்னால் ஏதோ அசம்பாவிதம் எனத் தெரிந்தது. இப்போது நாங்கள் அந்த இடத்தை அடைந்து விட்டோம். அங்கு ஒரு ஈரானிய ஹாஜி அவருக்கு வயது 60க்கு மேல் இருக்கும். வாட்ட சாட்டமாக வசதியானவராகத் தெரிந்தார். அவர் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. மற்றொரு ஈரானிய ஹாஜியை சில அரசுப்படை இளைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் அந்த ஹாஜியின் கழுத்தில் கையை கொடுத்து பிடித்துக் கொண்டிருந்தார். அவர்களைச் சுற்றி அவர்களுடன் வந்த பெண் ஹாஜிகளும் நின்று கொண்டிருந்தனர். இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தது. சட்டென அந்த அரசுப்படை இளைஞர்கள் கைகளை விலக்கி அவர்களை போகச் சொன்னார்கள். நாங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

ஜம்ரா சென்று சேர மாலை 4:30 மணி ஆகிவிட்டது. பின்பு மூன்று ஷைதான்களுக்கும் கல் எறிந்தோம். கூட்டத்தில் உடன் வந்தவர்களைப் பிரிந்து விட்டேன். நேற்று முன்தினம் சுற்றிச் சென்றதுபோல போல சுற்றி கூடாரத்திற்கு செல்ல வேண்டும். ‘சூரிய மறைவுக்கு முன்பு மினாவை விட்டு சென்று விட வேண்டும்’ அதற்குமேல் இருந்தால் அடுத்த நாளும் ஷைதான்களுக்கு கல்லெறிய வேண்டும் எனக் கூறியிருந்தார்கள்.

♣ ♣ ♣

நேற்று முன்தினம் நடந்த அதே நீண்ட சாலையில் வேகமாக நடந்தேன். அப்போது இடது பக்கத்தில் இணையாக இன்னொரு சாலையும் இருந்தது. அந்த சாலை முழுவதும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தகடுகளால் ஆன ஷீட்கள் போட்டிருந்தார்கள். அது கட்டிடம் அல்ல. அதில் ஒவ்வொரு தூண்களிலும் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஏர் கூலர்கள் போட்டிருந்தார்கள்.

நான் அருகில் சென்று கவனித்தேன். என்ன ஆச்சரியம்! அதுவும் ஒரு சாலை. அந்த சாலையிலும் ஹாஜிகள் ஜம்ராவிற்கு கல்லெறிய ஹாஜிகள் சென்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சென்ற வழி முழுமையாக வெயிலில் இருந்தது. 110 டிகிரி வெயிலில் தான் நாங்கள் நடந்து சென்றோம். நாங்கள் என்றால் பல பத்தாயிரம் அல்லது இலட்சம் மக்கள். நிழலில் ஏர் கூலர்களின் குளுமையில் ஜம்ராவிற்கு கல் அடிக்க செல்லும் அந்த பாக்கியசாலிகள் யார்?

அந்த பாக்கியசாலிகளை இந்த சாலையில் செல்பவர்கள் பார்த்துவிடாமல் இருக்க அந்த சாலையை ஒரு ஆள் உயரத்திற்கு மேல் தார்பாலின் போட்டு மறைத்திருந்தார்கள்.

வழியில் ஒரிடத்தில் தண்ணீர் பாட்டிலும் சில பழங்களையும் அன்பளிப்பாக கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒருவர் பிரியாணி பாக்கெட்டை கொடுத்துக் கொண்டிருந்தார். மற்றொருவர் சிறிய கேக்கை ஹாஜிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் வேகமாக நடந்து கூடாரங்கள் இருக்கும் இருக்கும் இடத்திற்கு சேர்ந்தேன். செல்லும்போது என்னுடன் வந்த அப்துல் அலீம் எனக்கு எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்தார். இருவரும் ஜம்ராவிலிருந்து கிளம்பி ஒரே கூடாரத்தை அடைய வேண்டும். ஆனால் அவர் எனக்கு எதிர் திசையில் வந்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு இந்திய ஹாஜி உர்தூ பேசிய அந்த இளைஞர் எங்களுடைய கூடாரத்தின் எண்ணைக் கேட்டு அதை கூகுளில் தேடி கொண்டு வந்து விட்டார். அது நாங்கள் நின்ற இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் இருந்தது.

நாங்கள் கூடாரத்தின் வடக்கு வாசலை அடைந்து வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னல் மினாவை விட்டு புறப்பட தயாராக இருந்த ஹாஜிகள் தங்கள் நின்று லக்கேஜ்களுடன் நின்று கொண்டிருந்தனர். எனவே நாங்கள் 500 மீட்டர் சுற்றிக் கொண்டு தெற்கு வாசலை அடைந்தோம். வடக்கு வாசலின் அருகில்தான் எங்கள் கூடாரம் இருந்தது. நாங்கள் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டு நின்ற ஹாஜிகளை வழிகேட்டு நடந்து எங்கள் கூடாரத்தை அடைந்தோம். ஏன் வடக்குப்புற வாசலை அடைத்து வைக்க வேண்டும்? திறந்திருந்தால் என்ன? வெளியே விசாலமான சாலையில் ஹாஜிகள் சற்று உட்காருவார்கள் தானே? அதைக் குறித்து சவூதிகளுக்கு என்ன அக்கறை?

ஆனால் என்ன நடந்தது என்றால் கடைசிவரை அவர்கள் காத்திருந்த பஸ் அதாவது எங்களுடைய 25 சர்வீஸ் செனடர் பஸ் வரவேயில்லை.

கால் மணி நேரத்தில் அஸீஸியாவில் என்னுடன் தங்கியிருந்த மற்ற மூவரும் வந்துவிட்டார்கள். எல்லோரும் கிளம்பினோம். அப்போது மணி 6.30. நாங்கள் தெற்கு வாசலை நோக்கி நடந்தோம். அப்போது ஒரு ஹாஜி “பஸ் இங்கு வரும் என்று காத்திருக்கிறார்களே” என்றார். “பஸ்ஸை எதிர்பார்த்திருக்க முடியாது. நேரம் ஆகிவிட்டது. எனவே நடந்து செல்லப் போகிறோம்” என்றேன். இதைக் கேட்ட அவர் முகம் இருண்டது. அவரால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. நான், “அதனால் என்ன. இன்று தங்கிவிட்டு நாளையும் ஷைதான்களுக்கு கல்லெறிந்து விட்டு வாருங்கள்” என்றேன். அதைக் கேட்டு அவர் அழ ஆரம்பித்துவிட்டார். நேற்று அவர் ஜம்ராவில் இருந்து திரும்ப மினா கூடாரத்திற்கு வீல் சேரிலே வைத்து கொண்டு வரப்பட்டிருந்தார். அதற்காக அவர் 250 ரியால் கொடுத்திருந்தார்.

♣ ♣ ♣

அவர் அங்கேயே மற்ற ஹாஜிகளுடன் பஸ்ஸை எதிர்பார்த்து நின்று விட்டார். ஆனால் 25 சென்டர் பஸ் வரவேயில்லை. எனவே வேறு சென்டர் பஸ்சில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஏற்றி அனுப்பினர். அது வேறொரு இடத்திற்கு கொண்டு போனது. அங்கிருந்து தான் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் செல்ல செல்ல காரில் 20 ரியால் கொடுத்து வந்து வந்தார்.

நான் மற்ற மூவருடன் தெற்கு வழியில் வெளியேறி சாலைக்கு வந்து நடக்க ஆரம்பித்தோம். ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் வந்திருப்போம். அப்போது கேரள வாலன்டியர்ஸ் அங்கிருந்தார்கள். அவர்கள் “இங்கேயே காத்திருங்கள் பஸ்கள் ப்ளாக் செய்திருக்கிறார்கள். இப்போது வந்து விடும் என்று கூறுகிறார்கள். வந்தவுடன் நீங்கள் பஸ்ஸிலேயே சென்றுவிடலாம்” என்று சொன்னார்கள். நூற்றுக்கணக்கான ஹாஜிகள் அங்கே சாலையில் நின்றுக்கொண்டும் ஓரமாக உடகார்ந்துக் கொண்டும் இருந்தனர்.

மக்ரிபுடைய நேரம். இப்போது பஸ்கள் வரத் தொடங்கிவிட்டன. ஒன்று, இரண்டு அல்ல. நூற்றுகணக்கான பஸ்கள் விதவிதமாக வந்தன. இந்த பஸ்களை எல்லாம் எங்கோ ப்ளாக் செய்து இருந்தார்களாம். இப்போது நூற்றுகணக்கான பஸ்கள் வந்துவிட்டன. அவற்றில் ஏறுவதற்கு தான் ஹாஜிகள் இல்லை. பல பத்தாயிரக்கணக்கான ஹாஜிகள் நடந்து சென்று விட்டிருந்தனர். அங்கிருந்த சில நூறு ஹாஜிகள் சில பஸ்களில் ஏறிக் கொண்டனர். சில பஸ்களில் ஒருவர் கூட செல்ல இல்லை. ஆனால் என்னுடைய சர்வீஸ் நம்பர் 25 பஸ் ஒன்று கூட வரவில்லை.

என்னுடன் வந்த மூவரும் திரும்ப கூடாரத்திற்கு சென்று தங்கிவிட்டு மறுநாள் கல் எறிந்துவிட்டு வரப்போகிறோம் என்று திரும்ப கூடாரத்திற்கு செல்லப் போவதாகக் கூறினார்கள். ஆனால் நான் துல்ஹஜ் 12ஆம் நாளே கிளம்ப வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். அதுப்போலவே முயற்சி செய்து கிளம்பிவிட்டேன். திரும்ப நான் கூடாரத்திற்கு வர விரும்பவில்லை என்றேன். அவர்கள் மூவரும் திரும்ப சென்று விட்டார்கள். அங்கிருந்த ஒருசிலரும் கூட அவரவர் பஸ்களில் ஏறி சென்றுவிட்டார்கள்.

26ம் எண் சர்வீஸ் நம்பர் கொண்ட பஸ் ஒன்று வந்தது. அவரிடம் சென்று கேரளா வாலன்டியர் ஒருவர் இவரை 25ம் எண்ணில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்டார். அதற்கு “முஅல்லிமின் பர்மிஷன் வேண்டும்” என்று அவர்கள் கூறி சென்று விட்டார்கள். அந்த பஸ் காலியாகத்தான் சென்றது. அதுப்போல வந்த நூற்றுகணக்கான பஸ்களும் சென்றுவிட்டன. இப்போது என்னுடன் வயதான கணவன் மனைவி ஹாஜிகள் மட்டும் இருந்தார்கள். அவர்கள் 31ம் எண் சர்வீஸ் சென்டரைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதாவது ஒரு பஸ்ஸில் ஏற்றிவிட வேண்டும் என்று சொல்லி இந்த கேரள வாலன்டியர் ஒவ்வொரு பஸ்ஸாக அவர்களுடைய கட்டிடத்தில் இறக்கிவிட கேட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக 31ஆம் சர்வீஸ் எண் பஸ்ஸே வந்தது. ஆகவே அவர்களை அதில் ஏற்றிவிட்டார். இப்போது அங்கு நான் மட்டும் தான் மீதி இருந்தேன். இப்போது அந்த கேரளா வாலண்டியர் “இனிமேல் பஸ்கள் வராது” என்று கூறி எனக்கு கைக் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

நான் சிறிது தூரம் என்னுடைய ட்ராலி வைத்த பேக்கை இழுத்துக் கொண்டு மற்றொரு பேக்கை தூக்கிக் கொண்டு நடந்தேன். மற்றொரு கேரளா வாலன்டியர் எதிரே வந்தார். அவரிடம் “அஸீஸியா எப்படி செல்வது” என்று கேட்டேன். அவர் பக்கத்தில் இருந்த ஒரு பாலத்தை காண்பித்து இதில் ஏறி நீங்கள் நேராக நடந்தால் அஸீஸியாவுக்கு சென்று விடலாம். ஆனால் பாலம் ப்ளாக் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றார். அந்த பாலம் ப்ளாக் செய்யப்பட்டிருக்கவில்லை. சில சீருடை அணிந்த அரசுப்படை இளைஞர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அந்த பக்கவாட்டு சரிவில் ஏறி நான் நடக்க ஆரம்பித்தேன். அதில் நான் மட்டும் தான் சென்றுக்கொண்டிருந்தேன். பின்பு மெயின் பாலம் வந்தவுடன் மற்ற சிலரும் கூட அந்த பாலத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்கள். ஆகவே என்னுடைய ட்ராலியை இழுத்துக்கொண்டு நான் செல்ல ஆரம்பித்தேன்.

அது நீண்ட மேம்பாலம். அதில் செல்ல ஆரம்பித்து ஒரு கி.மீ. தூரம் வந்த பிறகு மேலே மினா முடிவுற்றது (Mina ends here) என்று போர்டு இருந்தது. அருகே வந்தபிறகுதான் அந்த போர்டு தெரிந்தது. அதை சாலையின் உயரத்தில் இருந்தது. அப்போது மணி இரவு 8:30 ஆகும். அந்த சாலையிலே வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. ஓரிருவர் தான் அங்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது வழியிலே ஒரு வயதான தம்பதியினரைப் பார்த்தேன். அவர் தன் மனைவியை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அவரும் வட இந்தியாவில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்தவர். அவர் வேறொரு சர்வீஸ் சென்டர்.

நான் நீண்ட தூரம் வந்து பின் மற்றொரு கேரள வாலன்டியரை சந்தித்தேன். அவரிடம் அஸீஸியா பில்டிங் நம்பர் 483 எப்படி செல்வது? என்று கேட்டேன். “483 எங்கிருக்கிறது என்று தெரியாது” என்று கூறிவிட்டு தூரத்தில் இருந்த சில கட்டிடங்களைக் காண்பித்து அது 460,461,462 எண் கட்டிடங்கள் அங்கு இருக்கின்றன” என்று சொன்னார். எனக்கு அது போதுமானது. நான் ஏற்கனவே 460 கட்டிடத்திற்கு வந்திருக்கிறேன். அங்கு ஒரு மெடிக்கல் சென்டர் இருந்தது. அங்கிருந்து என்னுடைய கட்டிடத்திற்கு செல்ல எனக்கு வழி தெரியும்.

கொஞ்ச தூரம் நடந்து அந்த பாலத்தில் இருந்த ஒரு சுவற்றிலே உட்கார்ந்திருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற உர்தூவிலே “டீக் ஹை” டிகே என்றார். ‘வழி தெரியவில்லையா? ஏதேனும் உதவி வேண்டுமா? என்பது போல அவர் கேட்கிறார் என்று புரிந்துக்கொண்டு நான் “ஓகே” என்றேன். அவர் சென்றுவிட்டார். பின்பு வேறு இரு வட இந்தியாவைச் சேர்ந்த ஹாஜிகள் என்னிடம் வந்தார்கள். வந்து உர்தூவிலே. என்னுடைய சர்வீஸ் சென்டர் கேட்டார்கள். நான் ஆங்கிலத்தில் சொன்னேன். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அத்துடன் உரையாடல் தொடரவில்லை. அந்த பாலத்திற்கு கீழே ஒரு சாலை இருந்தது. அவர்கள் சுற்றும்முற்றும் பார்த்தார்கள். அந்த பாலத்தின் தடுப்பு சுவரைத் தாண்டி சரசரவென சரிவிலே இறங்கினார்கள். வேகமாக இறங்கிய அவர்கள் கீழே சென்ற சாலைக்குச் சென்று நடக்க ஆரம்பித்தார்கள்.

♣ ♣ ♣

நான் 10 மணிக்கு என்னுடைய கட்டிடத்திற்கு சென்று சேர்ந்தேன். என்னுடைய அறையில் மூவர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் முஜ்தலிஃபாவிலிருந்து ஜம்ரா சென்றுவிட்டு அங்கு டாக்சி பிடித்து 3௦௦ ரியால் கொடுத்து அஸீஸியா வந்திருந்தார். மற்ற நாட்களில் 15 ரியால் கொடுத்தால் போதும். எப்படியாவது அஸீஸியா சென்று சேர்ந்தால் போதும் என்று அவர் வந்திருந்தார். அவர் துல்ஹஜ் 11,12 தேதிகளில் ஷைதானுக்கு கல்லெறியப் போகவில்லை. ஒரு வாஜிபை விட்டதற்காக ஆடு ‘தம்’ கொடுத்ததாகக் கூறினார். அவர் உடல்நலம் குன்றி இருந்தார்.

நான் சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு ஹாஜி எங்கள் அறைக்கு வந்தார். அவர் 33 வயதில் முன்பு ஹஜ் செய்திருந்தார். இப்போது அவருக்கு 60 வயது இருக்கும். அவருக்கு அங்கு தொடர்புகள் இருந்தன. அந்நாட்டின் புவியியல் அவருக்குத் தெரிந்திருந்தது. டிராவல்ஸ் நடத்தி அனுபவம் பெற்றவர். வரும்போதே அவர் கண்கள் கலங்கியிருந்தன. அவர் எங்களிடம் பரிவுடன் விசாரித்தார். “எனக்கு அரபி, ஆங்கிலம் தெரியும். ஆனால் மொழி தெரியாமல் வழி தெரியாமல் இந்த ஹாஜிகள் படும் துன்பம்” பேசிக் கொண்டிருக்கும்போதே உடைந்தார் “யா அல்லாஹ் இந்த ஹாஜிகளை இப்படி படுத்துகிறார்களே இவர்களை நம்ரூதை, பிர் அவனை நாசமாக்கியதைபோல நாசமாக்குவாயாக! நம்ரூதின் மூக்கில் கொசு புகுந்து அவன் கண்கள் புதுங்கி நாக்கு தொங்கி அவன் அழிந்தது போல இவர்களையும் அழித்து நாசமாக்குவாயாக! என்று கதறியபடி சபித்தார்.

என் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் கொட்டத் தொடங்கியது. அடுத்த நாள் முழுவதும் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் எவ்வளவு கொடியவர்கள். மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதை தங்கள் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு ஹஜ் செய்யவரும் ஹாஜிகளை எவ்வளவு துச்சமாக நடத்துகிறார்கள்; துன்புறுத்துகிறார்கள்.

யா அல்லாஹ்! பயங்கரம், கொடுமை போன்றவற்றுடன் மினா என்பதையும் என்னுடைய உள்ளம் சேர்த்துவிடாமல் பாதுகாப்பாயாக! என்று பிராத்திக்கும் அளவு அந்த அனுபவம் இருந்தது.

அடுத்த இரு நாட்கள் அஸீஸியாவில் ஒரு பெரும் அமைதி நிலவியது. அது பெரு வெள்ளம், சூறாவளிக்கு பின்னான அமைதி. அந்தப் பேரிடரில் துன்புற்ற மனிதர்களிடம் காணப்படும் அமைதி. பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டோம் என்பதால் வந்த அமைதி.

என்னுடைய அறையில் இருந்த அப்துல் அலீம் கடுமையான வயிற்றுவலியால் அவதியுற்றார். அவரால் சாப்பிட முடியவில்லை. சில கவளங்கள் எடுத்து உண்டதும் ஓடிபோய் வாந்தி எடுத்தார். அவர் ஊர் திரும்பும்வரை இப்படித்தான் அவர் நிலை இருந்தது. அவருக்கு அங்கு கொடுக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் பயனளிக்கவில்லை. ஒருவர் கடுமையான கால் வலியால் துன்புற்றார். ‘மனநிலை பாதிக்கப்பட்டு பேச முடியவில்லை. உதவுங்கள்’ என்று உதவி கேட்டனர். இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கடுமையான துன்பத்தை அடைந்திருந்தார்கள்.

“நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டோம்” என்றுக் கூறினால் வாழ்த்துக் கூறுவதில்லை. ‘உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்கள். ஆகவே இந்தத் துன்பங்கள் இதற்கு முன்பு ஹஜ் செய்தவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு சுற்றிப் போக வைத்தது ‘சிறப்பு வதை’யாகும். அதை முந்திய ஆண்டுகளில் ஹஜ் செய்தவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.

இந்தத் துன்பங்கள் குறித்து ஹாஜிகள் குமுறினார்கள். முஅல்லிமின் ஆள் எங்கள் கட்டிடத்திற்கு வந்தபோது அவரை முற்றுகையிட்டனர். ஆனால் அது ஒரு விவாதமாக வளரவில்லை. அஸீஸியாவில் நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் தொழுமிடத்தில் ஹாஜிகள் அது குறித்து பொது விவாதம் எதுவும் செய்யவில்லை. ஒரு சிலர் பேசத் தொடங்கினால் வேறு சிலர் ‘பொறுமை, பொறுமை, அல்லாஹ் நமக்கு நற்கூலி கொடுப்பான்’ என்று அதை அடக்கி விடுகிறார்கள். சிலர் வாட்ஸ்அப் குரூப்பில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினார்கள். அப்போது ஒருவர் “நல்லதை மட்டும் கூறுங்கள். துன்பங்களை கூற வேண்டாம். அப்படிக் கூறினால் மற்றவர்கள் ஹஜ் செய்ய வராமல் இருந்து விடுவார்கள். அதற்கு நீங்கள்தாம் பொறுப்பு” என்று மிரட்டினார்.

‘மினா நெருக்கடி’ முந்தைய ஆண்டுகளிலும் இருந்ததுதான். ஆனால் ஏன் அது குறித்து சென்று வந்த ஹாஜிகள் இங்கு ஏன் பேசுவதில்லை; விவாதிப்பதில்லை.

‘துன்பப்பட்டேன்’ என்று கூறி பெருமைக்கு பங்கம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

இவற்றை வெளியே சொல்வது ‘பாவம்’. மக்கள் ஹஜ் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

18 இலட்சம் பேர் கூடும்போது அப்படித்தான் இருக்கும்.

ஒருமுறைதான் ஹஜ் கமிட்டியில் போக முடியும். போய்விட்டு வந்துவிட்டோம். நாம் செய்ததற்கு அல்லாஹ் நமக்கு கூலி கொடுப்பான்.

ஹஜ் கமிட்டி, சவூதி அரசு போன்ற அதிகார மையங்களை விமர்சித்து உலக நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

தப்லீக் ஜமா அத்தினர்

அஸீஸியாவில் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் 2௦௦ பேர்களுக்கு அதிகமான தொழும் இடம் உண்டு. ஜும்மாவைத் தவிர மற்ற கூட்டுத் தொழுகைகள் அங்கு நடந்தன. அதில் தப்லீக் தப்லீக் ஜமாஅத்தினர் பஜ்ர் தொழுகைக்குப் பின் தினசரி புத்தகம் படித்தனர் (தாஃலீம்). கஷ்த் நடத்தினர். 40 நாள், 4 மாசம் என்று தஷ்கீல் செய்தனர். அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது போல அவர்கள் நடந்து கொண்டனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து ஹாஜிகள் புதிய நாட்டிற்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் முன்பு அறிமுகமில்லாதவர்கள். அவர்களுக்கு புதுப்புது பிரச்சினைகள் எழும். எழுந்தன. அதுகுறித்து பொதுவில் பேச அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் தப்லீக் ஜமா அத்தினர் அனுமதிக்கவில்லை.

“நாம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. நம்முடைய பொறுப்பாளர் (காதிம் அல் ஹஜ்ஜாஜ்) இதுவரை வரவில்லை. என்ன செய்வது?” என்றார் ஒருவர்.

மற்றொரு சமயம் “மற்ற கட்டிடங்களில் இங்குள்ள வரலாற்றுத் தலங்களை பார்ப்பதற்கு 2 பஸ்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். நமக்கு அப்படியெதுவும் இல்லை” என்று பேச்சைத் தொடங்கினார் ஒருவர்.

தமிழ்நாடு ஜமாத்துல் உலமாவின் தலைவர் காஜா முயினுத்தீன் பாகவி எங்கள் கட்டிடத்தில் 20.06.23 அன்று காலை 11:00 மணிக்கு ஹாஜிகளுக்கு மத்தியிலே உரை நிகழ்த்தப் போவதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்தது. அதை எல்லோரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் இந்த செய்தியைச் சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே வந்து அதைப் புறக்கணிப்பது போல தப்லீக் ஜமா அத்தை சேர்ந்த ஒருவர் புத்தகம் (தாஃலீம்) வாசிக்க ஆரம்பிக்கிறார். ஜமாத்துல் உலமாவின் தலைவர் அங்கு பேச வந்தபோது அந்த இடமே நிரம்பி வழிந்தது. ஐந்நூறுக்கும் அதிகமான ஹாஜிகள் கலந்துக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்டனர்.

ஹஜ் முடிந்ததும் நடந்ததெல்லாம் இயல்பானதுதான். அப்படித்தான் இருக்கும். என்பதுபோல ‘மதினாவின் சிறப்புகள்’ என புத்தகம் படிக்க, உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். அவற்றில் பல அறிவுக்குப் பொருந்தாதவை; வேதத்திற்கு முரணானவை. தப்லீக் ஜமா அத்தினர் முஸ்லிம்களை அரசியல் நீக்கம் செய்கின்றனர்; சிந்திக்க விடாமல் செய்து போதையில் ஆழ்த்துகிறார்கள். அதனால் விளையும் அநீதிகளைக் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை.

சுற்ற விடுதல்

மினாவில் மட்டுமல்ல. மக்கா, மதினா புனிதத் தலங்களிலும் சுற்றி நடக்க விட்டார்கள். கஅபாவின், மஸ்ஜிதுன் நபவியின் ஒவ்வொரு வாசல்களிலும் அரபிகள் பகட்டான சேர்களில் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு ஹாஜி ஹரமுக்குள் நுழையச் செல்லும்போது சுற்றிச் செல்லும்படி ஒரு அரசுப்படை இளைஞர் கூறுகிறார். 50 மீட்டர் தொலைவில்தான் வாசல் இருந்தது. அவரை சுற்றிப் போகும்படி சொன்னார்கள். சுற்றிச் சென்றால் ஒரு 1 கி.மீ. நடக்க வேண்டியிருக்கும். அவர் கூறினார்: எனக்கு 60 வயதாகி விட்டது. இன்று நான் 10 கி.மீ. நடந்திருக்கிறேன். இதற்குமேல் நீ எனக்கு வழிவிட மறுத்தால் உனக்கு எதிராக நான் துஆ செய்வேன்”. இன்னும் பலர் சத்தம் போட்டதும் போக வழி கிடைத்தது.

3 அடி உயரமும் 6 அடி நீளமும் உள்ள ஏராளமான பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்திருக்கிறார்கள். அவற்றை பாலிதீன் இணைத்து தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.

10.07.23 அன்று மக்ரிப் தொழுகைக்கு கஅபா சென்றேன். பல்லாயிர மக்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்திருந்தார்கள். பாங்கு சொல்லப்பட்டு விட்டது. மற்றவர்களுடன் நானும் வெளியே தொழுதேன். கஅபாவின் இமாமை பின்பற்றிதான் நாங்களும் தொழுதோம் என்றாலும் அங்கு தொடர்ந்து மக்கள் நிற்கவில்லை. முன்னால் பல நூற்றுக்கணக்கானோர் நிற்கும் இடம் காலியாக இருந்தது. தொழுது முடித்த பின் தரைத் தளத்திற்கு செல்ல அனுமதித்தார்கள். வெளியே நின்று தொழுத அனைவரையும் கொள்ளும் அளவு தரை தளத்தில் இடம் இருந்தது. எனில் ஏன் தடுத்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *