இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 2)
இஸ்லாமிய வரலாறு – 08 / இஜ்திஹாத் (பாகம் 3)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். அவருடைய மற்ற ஆங்கில உரைகள் Abu Uthman என்ற யூடியூப் சேனலில் உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 01-07-2008
YouTube Link: Islamic History, Ijtihad
♦ ♦ ♦ ♦ ♦
(பாகம் 1)
இஸ்லாமிய வரலாறு பற்றிய இவ்வகுப்புகளை அரசியல், கோட்பாடு மற்றும் சட்டவியல் என்று மூன்றாகப் வகைப்படுத்தி, இதுவரை அரசியல் மற்றும் கோட்பாடுகளின் வரலாறை பார்த்தோம். இப்போது சட்டவியல் (ஃபிக்ஹ்) குறித்த வரலாறை பார்க்கவிருக்கின்றோம். சட்டவியல் என்று சொல்லும்போது இதில் பல நுணுக்கமான விவரங்கள் அடங்கியுள்ளன. இவற்றினுள்ளே விரிவாகச் செல்லாமல் சட்டவியல் வரலாறை திருப்திகரமாக அணுகுவது சாத்தியமில்லை. எனினும் இந்த வெவ்வேறான இஸ்லாமிய சட்டவியல் அபிப்பிராயங்கள் நம் மத்தியில் எவ்வாறு நிலை கொண்டன என்று அல்லாஹ்வின் உதவியோடு என்னால் இயன்றவரை விளக்க முயற்சி செய்கிறேன். மேலும் நம்மில் பெரும்பாலோர், இத்தகைய சட்டவியல் அபிப்பிராயங்களை மரபு வழியாகவே பெற்றுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘நீங்கள் எந்த சிந்தனைப் பள்ளியைச் சார்ந்துள்ளீர்கள்?’ என்ற கேள்விக்கான பதில், கேட்கப்படுபவர் எந்த குடும்பத்தில் பிறந்தார் என்பதைப் பொருத்து அமைவதையும், இதில் சுயாதீன சிந்தனைக்கு அதிக வேலை இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
சிந்தனைப் போராட்டம்
அல் ஃபிக்ஹ் அல் இஸ்லாமி எனப்படும் இஸ்லாத்தின் சிந்தனைப் பள்ளிகள் —சிலர் இதனை இஸ்லாத்தின் சட்டவியல் மனப்பாங்குகள் என்று அழைக்கின்றனர்— என்று சொல்லும் போது நாம் அசலில் இஜ்திஹாத் குறித்துத்தான் பேசுகிறோம். இஜ்திஹாத் என்ற பதமும் ஜிஹாத் என்ற பதமும் ஒரே வேர்சொல்லிலிருந்து வருபவை. ஒரு குறிக்கோளை அடையும் முயற்சியில் நம்மிடம் இருப்பதனைத்தையும் அதற்காகக் கொடுத்து, தொடர்ச்சியாக கடும் முயற்சி செய்யும் போது, அது ஒரு போராட்டமாக மாறுகிறது. இப்போராட்டத்தைத்தான் ஜிஹாத் என்கிறோம்.
இஜ்திஹாத் என்பதும் ஒரு குறிப்பிட்ட வகையான போராட்டம் ஆகும். அது சிந்தனை ரீதியான போராட்டம். ஒரு முடிவை அடைவதற்கு தீவிரமாகச் சிந்தித்து முயற்சி செய்கிறோம். அந்த முடிவு அல்லாஹ் அருளியவற்றுக்கும் அவனுடைய தூதரின் போதனைகளுக்கும் பொருந்திப் போக வேண்டும். இதுதான் இஜ்திஹாத். முஸ்லிம் அறிஞர்களின் இந்த சிந்தனை ரீதியான முயற்சி, வரலாற்றில் பல வழிகளில் பயணப்பட்டது. இப்போது நாம், இதன் தொடக்கத்துக்குச் சென்று இஜ்திஹாத் பற்றிய புரிதலை அடைய முயற்சி செய்வோம். எதிர்வரும் வகுப்புகளில் இதை மேலும் செம்மையாக விளங்க முயற்சிப்போம்.
இறைத்தூதர் காலத்தில் இஜ்திஹாத்
இஜ்திஹாதை இறைத்தூதர் காலத்துக்கு எடுத்துச் சென்றால், நமக்குக் கிடைக்கப் பெற்ற சில இஸ்லாமிய தகவல்கள், இறைத்தூதரும் இஜ்திஹாதில் ஈடுபட்டார் என்கின்றன. இஸ்லாமிய அறிஞர்கள் செய்த இஜ்திஹாதுக்கு நான் ஏற்கனவே அளித்த விளக்கத்தை நினைவில் கொள்க. ‘இறைத்தூதர் இஜ்திஹாத் செய்தாரா? அவர் ஒரு முஜ்தஹிதா?’ என்ற கேள்விக்கு, நீங்கள் பெற்ற அறிவைக் கொண்டு சிலர் ‘ஆம்’ என்றும் சிலர் ‘இல்லை’ என்றும் பதிலளிக்கக் கூடும். இதற்கான பதில் ‘இல்லை’ என்றால், இது குறித்து மேலும் பேசுவதற்கு எதுவும் இல்லை. இறைத்தூதரின் செயல்களில் இஜ்திஹாதுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கொள்ளலாம்.
மாறாக இறைத்தூதரின் வாழ்வில் சில சமயம் சில காரியத்தைச் செய்வதற்கு முன் எது சிறந்தது என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார் என்று வரலாற்று நூல்களில் பார்க்கிறோம். இவை நம் வரலாற்று நூல்களில் உள்ள செய்திகள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது புறக்கணிக்கலாம். எதை ஏற்றுக்கொள்வது, எதைப் புறக்கணிப்பது என்று சொல்வது என் பணியல்ல. வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளை விளக்குவது மட்டுமே என் பணி.
இறைத்தூதர்(ஸல்) காலத்தில் இஜ்திஹாத் இருந்தது என்று சொல்வோர், பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர். அன்று முஸ்லிம் படைகள் ராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சில வேளைகளில் முஸ்லிம் ஆண்களுக்கு தங்களை சுத்தம் செய்துகொள்வதற்கு தண்ணீர் கிடைக்காமல் போனது. பாலைவனப் பிரதேசங்களில் இப்படியான நிகழ்வுகள் இயல்பானதே. இத்தகைய சூழலில் என்ன செய்வது என்பது குறித்த எந்த இறை வசனத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்கள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றினர். இதே போல மற்றொரு நிகழ்வின்போது, வேறு சிலரும் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றினர். பின்னர், ஓரிரு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கிடைத்தவுடன் அத்தொழுகைகளை மீண்டும் நிறைவேற்றி தயம்மும் செய்து தொழுத தொழுகைகளுக்கு ஈடுகட்டினர்.
இவ்விரண்டுமே இஜ்திஹாதின் நிகழ்வுகளாகும். ஒருவர் தனக்குக் கிடைத்த இறை வசனங்கள், நபிமொழிகள் ஆகியவற்றின் துணையோடு சிந்தித்து இயன்ற அளவு சிறந்த முடிவை எடுத்து முன் நகரந்து செல்ல வேண்டும். நாம் முன்னர் சொன்ன நிகழ்வில், சிலர் தயம்மும் செய்து தொழுதுவிட்டு கடந்து சென்றனர். தண்ணீர் கிடைத்தபின் அவர்கள் மீண்டும் அத்தொழுகைகளை தொழவில்லை. ஆனால் மற்றொரு சூழலில் வேறு சிலர், அத்தொழுகைகளை மீண்டும் தொழுதனர்.
இவ்விரு சம்பவங்களும் இறைத்தூதரின் கவனத்துக்கு வந்தது. அப்போது அவர் ஒரு சாரார் செய்ததுதான் மிகச் சரி என்றோ மற்றொரு சாரார் செய்தது முற்றிலும் தவறு என்றோ —நாம் அறிந்தவரையில், வரலாற்றில் இந்நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ள வரையில்— சொல்லவில்லை. அவ்விருவருடைய இஜ்திஹாதும் சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது. ஆகவே இறைத்தூதர் காலத்தில் இஜ்திஹாத் நடைபெறவில்லை என்று சொல்வோர், இப்படியான இஜ்திஹாத் நிகழ்ந்தது என்றும் அவற்றுக்கு இறைத்தூதர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு பொதுவான சம்பவம். இதில் இறைத்தூதர் நேரடியாக ஈடுபடவில்லை. இப்போது மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
இறைத்தூதரின் இஜ்திஹாத்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் சில குறைஷி நிராகரிப்பாளர்களை போர்க் கைதிகளாக பிடித்தனர். இவர்களை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி எழுந்தது. இதைத் தெளிவுபடுத்தும் இறை வசனம் எதுவும் அப்போது இறக்கப்படவில்லை. பரிசுத்தமான அல்லாஹ் வேத வசனங்களை காலம் தவறி இறக்குவதில்லை என்பது தெளிவு. ஆகவே இறைவன் இக்கைதிகளைப் பற்றி வேண்டுமென்றே சொல்லவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். ‘அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இவ்விஷயத்தில் அந்த மக்களின் கருத்து என்ன?’ என்று இறைவன் பார்க்க நாடினான் என்று தெரிகிறது.
இதுகுறித்து இறைத்தூதர் (ஸல்) மக்களோடு கலந்தாலோசித்தார். சிலர் “எந்த நிபந்தனையும் இன்றி அவர்களை விடுதலை செய்து விடலாம்” என்றனர். வேறு சிலர், “அவர்கள் நம்மை எதிர்த்து போர் புரிந்தவர்கள். அவர்கள் நம்மை கொன்றிருக்கவும் கூடும். ஆகவே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்” என்றனர். இவற்றைக் கேட்ட இறைத்தூதர், இவ்விரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலையை எடுத்தார். பணயத் தொகை பெற்று அவர்களை விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்தார். இதுவும் ஒரு இஜ்திஹாத் ஆகும். இது தொடர்பாக பின்வரும் வசனம் இறக்கப்பட்டது.
“அரசு நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடையாத வரையில் (எதிர்களை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையானவையாகக் (ஹலால்) கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். [அல் குர்ஆன் 8:67-69]
இவ்வசனம் போர்க் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று கூறுகிறது. ஆனால் இது இறைத்தூதரின் இஜ்திஹாதுக்குப் பிறகு இறக்கப்பட்டது. வாழ்வில் ஏற்ற-இறக்கங்கள், சவால்கள் என பல்வேறு சூழல்களை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்கள், இயன்ற அளவு சிந்தித்து சிறந்த முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவார்கள். இவர்களுக்கு முன்னுதாரணமாக இறைத்தூதர் விளங்குகிறார். அவரும் பிற முஸ்லிம்களைப் போல சிந்தித்து முடிவெடுத்தார். ஆனால் அவருடைய முடிவு குர்ஆனால், அல்லாஹ்வால் திருத்தப்பட்டது. இவ்விரண்டுமே —இறைத்தூதர் சிந்தித்து முடிவெடுத்ததும் அது அல்லாஹ்வால் திருத்தப்பட்டதும்— முஸ்லிம்களுக்கு முன்னுதாரணங்களாக விளங்குகின்றன. மேலும் அல்லாஹ்வே இறைத்தூதருக்கு தீர்வு வழங்கியிருந்தால், ‘அவருக்கு எப்போதும் தீர்வுகள் கிடைத்துக் கொண்டிருந்தன. நாங்கள் எதிர்கொள்ளும் சூழல்களை அவர் எதிர்கொள்ளவில்லை’ என்று முஸ்லிம்கள் கூறியிருப்பர். எனவேதான் வேத வெளிப்பாடு பெற இயலாத நாம், இத்தகைய சூழலலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் வகையில் இறைத்தூதர் வாழ்விலும் இத்தகைய சம்பவங்கள் நடந்தன.
இறைத்தூதர் தன் அறிவை பயன்படுத்தி முடிவெடுத்தார் என்று உணர்த்தும் மற்றொரு சம்பவமும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம்கள் பத்ருப் போருக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது நிராகரிப்பாளர்களை எதிர்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகாமிடுமாறு இறைத்தூதர் முஸ்லிம்களிடம் கூறினார். இதைக் கேட்ட சில முஸ்லிம்கள் இறைத்தூதரிடம், “அல்லாஹ் சொல்லியதால் இங்கு முகாமிடச் சொல்கிறீர்களா? அல்லது உங்கள் அனுமானத்தில் இது சிறந்த இடம் என்று கருதியதால் சொல்கிறீர்களா?’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த இறைத்தூதர், “இது சிறந்த இடம் என்று எனக்குத் தோன்றியதால் இங்கு முகாமிடச் சொன்னேன். இதில் இறைச்செய்தி(வஹீ) எதுவும் இல்லை” என்றார். அதற்கு அவர்கள், “முகாமிடுவதற்கு இது சரியான இடம் அல்ல. இங்கு பல கிணறுகள் உள்ளன. நீங்கள் சொன்ன இடத்தில் முகாமிட்டால், அக்கிணறுகள் நிராகரிப்பாளர்களின் வசமாகிவிடும். இது எங்களுக்கு சரியாகப் படவில்லை. எனவே அவை அவர்கள் வசம் செல்லாதவாறு நாம் முகாம் அமைக்க வேண்டும்” என்றனர். பிறகு அவ்வாறே முஸ்லிம்களின் முகாம் மாற்றியமைக்கப்பட்டது. இறைத்தூதர் செய்த இந்த இஜ்திஹாத், அவரோடு இருந்த முஸ்லிம்களுடன் செய்த கலந்தாலோசனையின் விளைவாக இருந்தது.
இஸ்லாமிய வரலாற்றில் இதுபோல மற்றொரு சம்பவமும் உள்ளது. சிலர் இறைத்தூதரிடம் வந்து ‘கவாத்து செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன? பேரீத்த மரங்களின் உணவூட்டத்தை பாதிக்கும் தேவையற்ற கிளைகளை வெட்டுவது சரியா?’ என்று கேட்டனர். இதற்கு நேரடியாக பதிலளிக்க விரும்பாத இறைத்தூதர், ‘என்னைக் கேட்டால் அவற்றை அப்படியே விட்டுவிடுங்கள் என்பேன்’ என்றார். பருவகாலம் முடிந்த பிறகு மகசூல் குறைவாக இருந்ததைக் கண்ட அம்மக்கள் மீண்டும் இறைத்தூதரிடம் வந்து ‘நாங்கள் நினைத்த அளவு மகசூல் கிடைக்கவில்லை. பழங்களும் தரம் குறைவாக உள்ளன’ என்றனர். இதற்குப் பதிலளித்த இறைத்தூதர் இவ்வாறு கூறினார்: “உங்கள் உலக விவகாரங்களை நீங்கள்தான் நன்கு அறிந்தவர்கள் (அன்தும் அஃலமு பி ஷுஉனி துன்யாகும்).”
இதை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். உங்களிடம் ஒரு வாகனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதுகுறித்து ஒரு இறையடியாரிடம் “இதிலுள்ள ஸ்பார்க் பிளக்கை மாற்ற வேண்டுமா?” என்று கேட்கிறீர்கள். அவர் வேதம் அறிந்த ஞானியாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் புலமையற்றவர் எனும்போது —இறைத்தூதர் சொன்னது போல— “அது வேலை செய்கிறதென்றால் அப்படியே விட்டுவிட வேண்டியது தானே” என்று சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இதைக் கேட்டுவிட்டு நீங்கள் வாகனத்தில் சிறிது தூரம் சென்ற பிறகு அது பழுதடைந்து விட்டால், அந்த இறையடியாரிடம் வந்து “உங்கள் அறிவுரையைக் கேட்டுத்தானே நான் இதைச் செய்தேன்?! இப்படியாகிவிட்டதே” என்று சொன்னால் அவருடைய பதில் என்னவாக இருக்கும்? “அப்படியெனில் அதை மாற்றிவிடுங்கள்” என்றுதானே கூறுவார்
ஆக இவை நடைமுறை வாழ்வின் நுட்பங்கள் சார்ந்த விஷயங்கள். இதில் வேதம், விதி, அல்லாஹ் தன் தூதருக்கு அளித்த தெய்வீக வெளிப்பாடுகள், இறைத்தூதரின் பண்புகள், அவருடைய நேர்மை, நாணயம் ஆகியவற்றுக்கு தொடர்பில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்: இறைத்தூதர் தன் வாழ்நாளில் இஜ்திஹாத் கலந்த முடிவுகளை எடுத்தாரா இல்லையா? சில முஸ்லிம்கள் அவர் இஜ்திஹாத் செய்தார் என்கின்றனர். இதைச் செய்ததன் மூலம் அவர் எந்தத் தவறோ, குற்றமோ இழைக்கவில்லை என்கின்றனர்.
இதே பாணியில் பேசும் மற்றொரு நபிமொழியும் உள்ளது. இறைத்தூதர் முஸ்லிம்களைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்: “உங்களிடையே எழும் வழக்குகளை தீர்ப்பதற்காக என்னை நாடி வருகிறீர்கள். அப்போது சிலர் —தங்கள் வாதத் திறமையால்— எதிர் தரப்பைவிட வலிமையாக தம்பக்க சாட்சியத்தை முன்வைக்கக் கூடும். அப்படியிருக்கையில், அந்த சாட்சியத்தின் உண்மைத் தன்மையை அறியாத நான், அதன் வலிமையின் அடிப்படையில் தீர்ப்பளித்தால், சாதகமான தீர்ப்பை பெற்றவர் நெருப்பைப் பெறுகிறார்”.
இறைத்தூதர் இஜ்திஹாத் செய்தார் என்று சொல்வோர், அவருடைய கருத்தாக இதன் மூலம் சொல்வது என்னவெனில், “நான் உங்கள் வாழ்வில் சம்பந்தப்படும் பொழுது, உங்களிடம் சில தகவல்களைப் பெற்று அதன் அடிப்படையில் ஒரு முடிவெடுத்த பிறகு, அம்முடிவு தவறாக இருந்தால், அதற்குக் காரணம் நீங்கள் கொடுத்த தகவல்தானேதவிர நான் எடுத்த முடிவு அல்ல”. இந்தச் செய்திகளைக் கேட்டு யாரும் குழப்பம் அடைய வேண்டாம். நுணுக்கமான சில விஷயங்களை நாம் பின்னர் பார்க்கும் போது, இந்தப் பின்னணி நமக்கு அவசியம் என்பதற்காகவே இவற்றை விளக்குகிறேன்.
இறைத்தூதருக்குப் பிறகு இஜ்திஹாத்
இறைத்தூதருக்கு(ஸல்) பிறகு உள்ள காலத்தைப் பார்த்தால், அபூ பக்கர் ஆட்சி காலத்தில் ஒரு கேள்வி எழுந்தது. தாய் வழிப் பாட்டிக்கு வாரிசுச் சொத்துரிமை உண்டா என்று சிலர் கேட்டனர். அதாவது ஒரு பெண்ணுக்கு தாயும் மகனும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அப்பெண் மரணித்துவிட, பாட்டியும் பேரனும் இருக்கிறார்கள் எனில், பாட்டிக்கு வாரிசுச் சொத்தில் பங்கு உண்டா? என்பதே கேள்வி. இதற்கான விடையை அபூ பக்கர் அறிந்திருக்கவில்லை. வாரிசுரிமைச் சட்டங்கள் இன்றும் கூட சிக்கலானவை. எனவே அவர் பிற முஸ்லிம்களிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது சிலர், “ஆம். தாய்வழிப் பாட்டிக்கு வாரிசுச் சொத்துரிமை உண்டு என்று இறைத்தூதர் காலத்திலிருந்து நாங்கள் அறிவோம்” என்றனர். தந்தை வழிப் பாட்டி விஷயத்திலும் இதே கேள்வி எழுந்தது. இதுவும் இஜ்திஹாத் எனப்படுவதை கோரும் மற்றொரு கேள்வி ஆகும். மக்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இதற்கு தீர்வு காணப்பட்டது.
♦ ♦ ♦ ♦ ♦