இஸ்லாமிய கலைப்பண்பு – முஹம்மது மர்மடியூக் பிக்தால்
Posted onஎந்த நாயனின் மீது நம்பிக்கை – ஈமான் – கொள்வது உலக சுபிட்சத்துக்கும் உயர்வுக்கும் இன்றியமை யாததோ அந்த நாயனை – அல்லாஹுத்த ஆலாவைப் புகழுகிறேன். புகழ் என்பதெல்லாம் அந்த இணையற்ற வல்லானுக்கே உரியது. அவன் தயவால் உலகங்களுக்குத் தயாளமாக இறுதி சுபச் செய்தியுடன் அனுப்பித் தந்த திருத்தூதர் அவர்கள்மீது அவனது அருளன்பு – ஸலவாத்தும் ஸலாமும் – என்றென்றும் அமைந்து பொங்குவதாகுக!
அந்த இறுதிச் சுபச் செய்தி மக்களுக்கு என்ன இலட்சியத்தைக் கொடுத்தது, அதை அடையும் வழி எதுவென்று காட்டியது என்பதையும் அந்த இலட்சியமும் அவ்வழியுமே மக்களை மேம்படுத்த வல்லவை, அவை இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமானவை என்பதையும் தெளிந்து உணர்ந்து கொண்ட அறிவாளிகள் ஐரோப்பாவிலும் பலருண்டு. அவர்களில் ஒரு முக்கிய ஸ்தானம் வகித்தவர் மார்மடியூக் பிக்தால். அவர் பிரிட்டனின் ஸ்தானீக சேவையைச் சேர்ந்தவராக ஜீவியம் ஆரம்பித்தார். அதையொட்டிப் பல முஸ்லிம் நாடுகளில் சஞ்சாரம் செய்தார். இஸ்லாமிய நூற்களை ஆராய்ந்தார். முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதார் ஆகியவர் களுடன் பழகி அவர்களுடைய வாழ்க்கை முறைகளை உய்த்துணர்ந்தார். அதன் பயனாக இஸ்லாமிய வாழ்க்கை முறையை ஏற்று முஸ்லிம் ஆனார். முஸ்லிம் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல கட்டுரைகளும் வேறு பலவும் எழுதி வெளியிட்டார். அவரது இலக்கியச் சாதனைகளில் ‘இஸ்லாமியக் கலைப்பண்பு’ என்ற சொற்பொழிவுத் தொகுதி முக்கிய இடம்பெற்றது. இவ்வழியில் அவர் செய்த முயற்சியின் சிகரமாக ‘மகிமை பொருந்திய குர்ஆனின் பொருள்’ என்னும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. அவர் இறுதி நபி பெருமானவர்கள் மீது ஆழ்ந்த தூய்மையான நேசம்கொண்டிருந்தார்.
அதே நேசத்தில் ஆழ்ந்திருந்த இன்னொரு சிறந்த ஆன்மாவின் காரணத்தினால் ஜனாப் பிக்தாலின் ‘இஸ்லாமியக் கலைப்பண்பு’ என்ற சிறந்த உபன்னியாசக்கோர்வை வெளியாயிற்று. அதாவது மார்க்க அபிமானம், ஆற்றல், கொடைக்குணம் நிறைந்த சென்னை ஜனாப் ஹாஜி ம. ஜமால் முகையத்தீன் சாஹிபவர்கள் ஏற்படுத்தியிருந்த நிதி யிலிருந்தும் தமது சொந்த வகையிலிருந்தும் மேற்சொன்ன வள்ளலின் மகனாரும் சிறந்த ஞானியுமான ஜனாப் ஹாஜி ம. ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் இஸ்லாமைப் பற்றிய அறிவுவளர்ச்சிக்கு உதவ வேண்டுமென்ற பெருங்கருத்துடன் முன்வந்து ‘இஸ்லாம் பற்றிய சென்னைச் சொற்பொழிவுகள் கமிட்டி’ என்ற ஸ்தாபனம் ஒன்று ஏற்படுத்தினார். இந்த ஸ்தாபனத்திற்கு ஜனாப் கான் சாஹிப் அப்துல் ஹமீத் ஹஸன் சேட், பி.ஏ., எல்.எல்.பி. என்ற பொதுநல ஊழியர் முதலாவது கௌரவச் செயலாளர் ஆனார். இந்நூல் அந்தக் குழுவின் ஆதரவில் ஏற்பட்டதாகும்.
அந்தச் சொற்பொழிவுகளிலே இஸ்லாமிய வாழ்க்கை நோக்கையும் முறையையும், அதில் அமைந்துள்ள உயர்வும் கவர்ச்சியும் தெற்றெனத் தோன்றும்படி ஜனாப் பிக்தால் தெளிவாக விளக்குகிறார். இப்பிரசங் கங்கள் சென்னையில் நடக்கும் சமயம் ஒருநாள் பிக்தால் சாஹிபுடன் சிலர் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் பிரும்ம ஞானசபையைச் சேர்ந்த ஒரு ஐரோப்பிய அம்மணி அவரைப் பார்த்து, “எனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது நீங்கள் விளக்குகிற முறையையே நான் கைக்கொண்டு நடப்பதாக அறிகிறேன். அங்ஙன மாயின், இஸ்லாமில் எனது நிலையென்ன?” என்று கேட்டார். அதற்குப் பிக்தால் அவர்கள் “அம்மணி, நீங்கள் முஸ்லிமாகவே இருந்து வந்திருக் கிறீர்கள். அது உங்களுக்குத் தெரியாமலிருந்திருக்கிறது. இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்” என்று பதில் உரைத்தார்.
பிக்தால் அவர்களின் இந்த உபன்னியாசங்களும் அவருடைய இதர நூற்களும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றை இதற்குமுன் ‘முஸ்லிம்’ தினசரி, தமிழில் பிரசுரித்து இஸ்லாத்திற்கும் தென்னாட்டுக்கும் சேவை செய்தது. ஆனால் உன்னத அறிவுக் குவியலான இச்சொற்பொழிவுகள் நிரந்தரமான தமிழ் நூல் வடிவில் மக்களின் கையிலிருக்கவேண்டியது மிகவும் முக்கியம். இப்பணியைச் செய்துமுடிக்க எனது சகோதரர் ஜனாப் ஆர்.பி.எம். கனி சாஹிப் பி.ஏ., பி.எல். முன்வந்ததற்கும் அதை வெளியிட கூத்தாநல்லூர் சன்மார்க்கத் தொண்டர் சபையார் அன்புடன் ஏற்றுக் கொண்டதற்கும் முக்கியமாகத் தமிழுலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. உயர்ந்த ஆழ்ந்த கருத்தமைந்த ஒரு சிறந்த நூலை வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பதென்பது இலகுவான காரியமன்று. ஆனால் வயதில் வாலிபமும், அனுபவத்தில் முதிர்ச்சியும் பெற்ற எனது நண்பர் கனி சாஹிப் இந்தக் கஷ்டமான வேலையைச் சிறப்புடன் செய்து தந்திருக்கிறார். அவரது தெளிவான – சுலபமான – இன்பமான நடையில் கருத்துகளை விடாமல் கொண்டு தந்திருக்கிறார். அவருக்கு நமது மனம் நிறைந்த நன்றி. தவிர, பொது நலச் சேவையில் சிறந்து நிற்கும் கூத்தாநல்லூரில் அச்சேவைக்கு உயரிய எடுத்துக் காட்டாகத் தோன்றியிருக்கும் சன்மார்க்கத் தொண்டர் சபையார் இத்தமிழாக்கத்தை வெளியிட முன்வந்ததுபற்றி அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். அவர்களுடைய இவ்வித நன்முயற்சி என்றும் நிலைத்து, பெருகி, வெற்றிபெற்று ஓங்குவதாக!
இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக் கொள்வதற் காக இந்நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் படித்துணர வேண்டியது அவசியம். தவிர இஸ்லாமிய வாழ்க்கை முறை எங்ஙனம் எக்காலத் துக்கும் பொருத்தமானது, அது எப்படி ஜீவசக்தியாய் அமைந்துள்ளது, அது எவ்விதம் உலக மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்பதை அறிய விரும்பும் முஸ்லிமல்லாதாருக்கும் இந்நூல் சிறந்த உதவியும் பயனுமளிக்கும்.
– எம். முஹம்மது இஸ்மாயில், சென்னை